புதுடில்லி, டிச. 6- புதிய மசோதாக்களுக்கு ஹிந்தியில் மட்டுமே பெயர் சூட்டுவதாகவும், இது ஹிந்தி திணிப்பு நடவடிக்கை என்றும் மாநிலங்களவையில் தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
திரிணாமுல் காங்கிரஸ்
90 ஆண்டுகள் பழைமையான விமான சட்டத்துக்கு பதிலாக, பாரதீய வாயுயன் விதேயக் -2024 என்ற புதிய மசோதாவை ஒன்றிய அரசு உருவாக்கி உள்ளது.
இந்த மசோதாவை மாநிலங்கள வையில் ஒன்றிய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தாக்கல் செய்தார்.
அதன் மீதான விவாதத்தில், மசோதாவின் பெயர் ஹிந்தியில் இருப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
திரிணாமுல் காங்கிரஸ் உறுப் பினர் சகாரிகா கோஸ் கூறியதாவது:-
ஏன் எல்லா மசோதாக்களும் ஹிந்தி தலைப்பிலேயே இருக்கின்றன? பன்முகத்தன்மை, கூட்டாட்சி கொள்கை ஆகியவற்றுக்குத்தான் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் ஓட்டு போட்டுள்ளனர். ஆனால், சட்டங்களை ஹிந்தி மய மாக்குவதில்தான் ஒன்றிய அரசு குறியாக இருக்கிறது. இது, இந்தி திணிப்பு நடவடிக்கை.
தி.மு.க.
இந்திய தண்டனை சட்டத்துக்கு பதிலாக பாரதீய நியாய சன்ஹிடாவை கொண்டு வந்ததுபோல், விமான சட்டத்துக்கு பதிலாக பாரதீய வாயு யன் விதேயக் மசோதாவை கொண்டு வந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க. உறுப்பினர் கனி மொழி என்.வி.என்.சோமுவும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: விமான சட்ட மசோதாவின் தலைப்பை மாற்றுமாறு ஒன்றிய அரசை கேட்டுக் கொள்கிறேன். ஹிந்தி பேசாத மக்கள் மீது ஹிந்தியை திணிக்காதீர்கள். புதிய மசோதாக்களுக்கு ஹிந்தி பெயரையோ, சமஸ்கிருதபெயரையோ சூட்டாதீர்கள்.
-இவ்வாறு அவர் கூறினார்.
ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ்
ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர் நிரஞ்சன் ரெட்டி பேசுகையில், “நான் ஹிந்தி திணிப்புக்காக மசோதாவை எதிர்க்கவில்லை. அரசியல் சாசன தேவைக்காக சொல்கிறேன். ஏனென்றால், ஆங்கிலத்தில் மசோதா இருக்கும் போது, தலைப்பு மட்டும் ஹிந்தியில் இருக்கக்கூடாது. இதை நீதிமன்றம் ரத்து செய்ய வாய்ப்புள்ளது. எனவே, மசோதாவின் பெயரை மறுபரிசீலனை செய்யுங்கள்” என்று கூறினார்.
பா.ஜனதா நிராகரிப்பு
ஆனால், இந்த விமர்சனங்களை பா.ஜனதா நிராகரித்தது. பா.ஜனதா உறுப்பினர் கன்ஷ்யாம் திவாரி கூறியதாவது:-
தெலுங்கை தாய்மொழியாக கொண்ட அமைச்சர்தான், இந்த மசோதாவை தாக்கல் செய்துள்ளார். அரசியல் சாசன விதிமுறைப்படியே மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரு மொழியில் பெயர் வைப்பதால், அந்த மொழியை திணிப்பதாக அர்த்தம் அல்ல. இது, உங்களின் ஆங்கிலேயர் கால மன நிலையை காட்டுகிறது.
-இவ்வாறு அவர் கூறினார்.