மாதம் தவறினாலும் பண்டிகை தவறாது; அதுதான் இந்த அர்த்தமுள்ள (?) ஹிந்து மதம்.
மக்களின் அறிவும், உழைப்பும், காலமும் எவ்வளவு கரியாகிறது என்பதுபற்றி இவர்களுக்குக் கவலையில்லை.
புரோகிதச் சுரண்டல் தொழில் ஜாம் ஜாமென்று நடைபெறவும் – பார்ப்பனர்களின் வயிற்றில் அறுத்துக் கட்டத்தான் பண்டிகைக் கொண்டாட்டங்கள்!
சற்றும் அறிவுக்குப் பொருத்தமற்ற வகையில் இந்தப் பண்டிகைகளுக்குத் தலப்புராணங்களைக் கிறுக்கி வைத்துள்ளனர்.
இப்பொழுதுதான் தீபாவளி பண்டிகை முடிந்து, அதன் ஈரம் காய்வதற்குள் அடுத்து கார்த்திகை தீபம் வரும் 13ஆம் தேதி நடக்கவிருக்கிறது.
இதுபற்றி திருவண்ணாமலைப் புராணமாகிய அருணாசலப் புராணம் என்ன சொல்லுகிறது? இதோ:
ஒரு சமயம் பிரம்மா, விஷ்ணு ஆகிய இரண்டு கடவுள் கள் ஒவ்வொருவரும் முழுமுதற்கடவுள் தாம் தாமே என்று கூறிக்கொண்டதனால், இருவருக்கும் வாய்ச் சண்டை ஏற்பட்டு, பிறகு அடிதடிச் சண்டை ஆகிவிட்டதாம். இதைக் கண்ட பரமசிவன் எனும் கடவுள், வானத்திற்கும் பூமிக்கும் ஆக ஒரு பெரிய ஜோதி உருவில் அவர்கள் இருவருக்கும் இடையில் நின்றானாம். சண்டை போட்டுக் கொண்டு இருந்த இருவரும் திகைத்து நிற்க, உடனே பரம சிவன் தோன்றி, ‘இந்த ஜோதியின் அடிமுடிகளை யார் முதலில் கண்டு வருகின்றார்களோ அவர்தான் பெரியவர்’ என்றானாம்.
உடனே விஷ்ணு பன்றி உருவம் கொண்டு பூமிக்குள் துளைத்துக் கொண்டு வெகுதூரம் சென்றும் காணமுடியாமல் திரும்பிவிட்டானாம்.
பிரம்மன் அன்னப்பறவை வடிவம் கொண்டு ஜோதி யின் முடியைக் காண மேலே பறந்து சென்றுகொண்டு இருக்கையில், கீழ் நோக்கி ஒரு தாழம்பூ வந்துகொண்டு இருந்ததாம். அதைக் கண்டு பிரம்மன், “தாழம்பூவே எங்கிருந்து, எவ்வளவு காலமாய் வருகின்றாய்;’ என்று கேட்கவும், ‘நான் பரமசிவன் முடியில் இருந்து கோடிக் கணக்கான வருஷங்களாக வந்துகொண்டு இருக்கின்றேன்’ என்றதாம். உடனே பிரம்மன், ‘நான் சிவன் முடியைப் பார்த்துவிட்டதாக சாட்சி கூறுகின்றாயா?’ என்று கெஞ்சி னானாம். அதற்குத் தாழம்பூ சம்மதித்ததாம். இதைக் கண்ட சிவன் கோபங்கொண்டு ‘‘பொய் சொன்னதற்காக பிரம்மனுக்கு இவ்வுலகில் கோயில் இல்லாமல் போகக் கடவது” என்றும், “தாழம்பூ இனிமேல் பூசைக்கு உதவா மல் போகக்கடவது” என்றும் சாபமிட்டாராம்.
உடனே பிரம்மாவும் விஷ்ணுவும் வருந்தி – திருந்தி சிவன்தான் பெரியவன் என்பதை உணர்ந்து, மன்னிப்புக் கேட்டுக்கொண்டு தங்கள் வழக்கைத் தீர்த்துவைத்ததற்கு அடையாளமாக, “இம் மலையின் மேல் ஒரு ஜோதி உரு வாகி இருக்கவேண்டும்” என்று கேட்க, அதற்குச் சிவ னும் சம்மதம் தெரிவித்து, “ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தில், கார்த்திகைப் பண்டிகையில் இந்த மலை யில் ஜோதியாய்க் காணப்படுவேன்” என்று சொன்னானாம். இதுதான் திருவண்ணாமலைப் புராணமாகிய அரு ணாசலப் புராணத்தில் கூறப்படும் கார்த்திகைத் தீபப் பண்டிகையாம்.’’
இதில் அறிவுக்குப் பொருத்தமாக ஒரே ஒரு பருக்கை யாவது உண்டா? மும்மலங்களையும் அறுத்தவர் கடவுள் என்று சொல்லிக் கொண்டு கடவுளுக்குள் யார் பெரியவர் என்று சண்டையிட்டுக் கொண்டார்கள் என்றால், இவர்கள் கடவுள்களா?
இந்தப் புராணத்தை வைணவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?
அதன்படி ஜோதி தோன்றியதா? இல்லையே! மனிதர்கள்தானே தீபத்தை ஏற்றுகிறார்கள்?
இதில் என்ன கொடுமையென்றால் அய்ந்தே முக்கால் அடி உயரமும், 300 கிலோ எடையும் கொண்ட மகா தீபக் கொப்பரையில் 4500 கிலோ நெய் மற்றும் 1100 மீட்டர் காடா துணியைத் திரியாக வைத்து 50 கிலோ கற்பூரத்தையும் சேர்த்து எரிய விடுவதுதான் கார்த்திகைத் தீபமாம்.
இதைவிட அறிவிழப்பும், பொருள் மற்றும் உழைப்பு விரயமும் வேறு உண்டா?
உற்பத்தி நாசம் என்று பொருளாதாரத்தி்ல் சொல்வார்களே, அது இதுதானே!
இதன் மூலம் கடவுள் பொய் சொல்லக் கூடியவர் என்பது பக்தர்களுக்கு எத்தகைய ஒழுக்கத்தை ஏற்படுத்தும் என்பது முக்கியமான கேள்வி! இந்தத் தீபத்தால் மக்களுக்கு ஏற்படும் பயன் என்ன? புயல், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுள் முக்கியமானது – திருவண்ணாமலை என்பது குறிப்பிடத்தக்கது.