புதுடில்லி, டிச. 5- ரயில் விபத்துகளை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என் னென்ன? என்று மக்களவையில் கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பினார். நாடாளுமன்ற மக்களவையில் தி.மு.க. உறுப்பினர் கனிமொழி நேற்று (4.12.2024) பேசினார்.
அப்போது அவர், “ரயில் தடம் புரண்டு உண்டாகும் விபத்துகள், ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்வதால் ஏற்படும் விபத்துகள், தீ பிடித்தல் மற்றும் லெவல் கிராசிங் விபத்துகள் உள்பட கடந்த பத்தாண்டுகளில் தொடர்ச்சியான ரயில் விபத்துகள் ஏற்படுவதன் காரணங்கள் குறித்து ஒன்றிய அரசிடம் விவரங்கள் இருக்கிறதா?’ என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் கேள்விகளை முன்வைத்தார்.
மேலும், மேற்கண்ட காலத்தில் ரயில் விபத்துகளினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்வதால் ஏற்படும் விபத்துகள் மற்றும் ரயில் தடம் புரண்டு உண்டாகும் விபத்துகளின் காரணங்கள் பற்றிய அறிக்கைகளை அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
டி.ஆர்.பாலு
அதே போல். நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் குறைந்த பட்ச தினக்கூலியை உயர்த்தித்தர வேண்டும் என தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பாலு வலியுறுத்தி பேசினார்.
நூறு நாள் வேலை திட்டத் துக்கான நிதி ஒதுக்கீடுகள் சமீபகாலமாக குறைய கார ணம் என்ன? மாநிலங்களுக்கு தரவேண்டிய நிலுவைத் தொகை உள்ளிட்ட விவரங்கள். பல்வேறு மாநிலங்களுக்கு நிதி குறைவாகப் பயன்படுத்தப்பட்டிருந்தால் அதன் விவரங்கள், நிலுவை நிதியை விடு விப்பதற்கான மாநிலங்களின் கோரிக் கைகளின் விவரங்கள் என்ன? என்பதற்கு ஒன்றிய அரசின் ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
விவசாயத்தில் அதிநவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்த ஒன்றிய அரசு எடுத்திருக்கும் நடவடிக்கை கள் பற்றிய விவரங்களை வெளியிடுமாறு தி.மு.க. உறுப்பினர் ஜெகத்ரட்சகன் கேட்டுக் கொண்டார். விவசாயிகளுக்கு மலிவு விலையில் டிரோன் கருவிகளை வழங்கவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
அருண் நேரு
பால்வள மேம்பாட்டிற்கான தேசிய திட்டத்தின் நிலை குறித்து திமுக உறுப்பினர் சி.என்.அண்ணாதுரைகேள்வி எழுப்பினார். சுயஉதவிக் குழுக்களுக்கு ஈ-மார்க்கெட் தளத்தில் தனி இடம் ஒதுக்கிட கோரி மக்களவை உறுப்பினர் அருண் நேரு வலியுறுத்தினார்.
பிரதம அமைச்சர் கம் சடக் யோஜனா திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் சாலை வசதிகளின் நிலை என்ன? என்பது குறித்து மக்களவை உறுப்பினர் மலையரசன் கேள்வி எழுப்பினார்.
மாநிலங்களவையில், சுகாதாரத்துறை யில் பெண்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் வேண்டும் என்று திமுக உறுப்பினர் திருச்சி சிவா வலியுறுத்தி பேசினார்.
மருந்துகளின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்திடக்கோரி மக்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார் வலியுறுத்தி பேசினார்.
பங்குச்சந்தையில் முன்னெப்போதும் இல்லாத வீழ்ச்சி ஏன்? என்று தி.மு.க. உறுப்பினர் கனிமொழி என்.வி. என்.சோமு கேள்வி எழுப்பினார்.
சி.எஸ்.ஆர். நிதியின்கீழ் பெறப்பட்ட நன்கொடை விவரங்களை வெளியிடக் கோரி மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் கோரிக்கை விடுத்தார்.