வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

viduthalai
2 Min Read

சென்னை, டிச.5- வடசென்னை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ.1,383 கோடியில் 79 புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வடசென்னை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் மேலும் 29 முடிவுற்ற திட்டப் பணிகளையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.6309 கோடி மதிப்பீட்டில் 252 திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. முதல்கட்டமாக ரூ.2097 கோடி மதிப்பீட்டில் 87 திட்டங்கள் மார்ச் 14இல் துவக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

மீண்டும் வருவோம்!

தமிழ்நாடு அரசின் புயல் முன்னெச் சரிக்கை நடவடிக்கையால் பெரும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.
காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட விளைவுகளை நாம் பார்க்கத் தொடங்கி இருக்கிறோம். எல்லா நாட்டிலும் நடக்கக் கூடியதுதான் என்று பார்க்காமல் அரசு அலட்சியமாக இருந்துவிடவில்லை. புயல் பாதிப்பில் இருந்து நிச்சயம் மீண்டு வருவோம். கடந்த கால மழையின்போது சென்னையை மீட்டெடுத்தது போல் ஒட்டுமொத்த தமிழ்நாடும் மீண்டு வரும்.

புயல் பாதிப்பை வைத்து சிலர் மலிவான அரசியலில் ஈடுபடுகின்றனர். அதிமுக ஆட்சியாளர்களை போல் மக்களை செயற்கை வெள்ளத்தில் தவிக்கவிடவில்லை. பெருமழை பெய்தும் மக்கள் உதவி கேட்டு அல்லல்படும் நிலை இல்லை. அதிமுக ஆட்சியில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டபோதும் அவர்களை சந்திக்க தலைவர்கள் வரவில்லை. தன்னார்வலர்கள் அளித்த நிவாரணப் பொருட்களிலும் ஸ்டிக்கர் ஒட்டிய காலமும் மலையேறி விட்டது.

திமுக அரசு எடுத்த நடவடிக்கையால் மழை நின்ற அடுத்த நாளே நீர் வடிந்துவிட்டது. வெள்ள பாதிப்பை பார்வையிட சென்றபோது வாக்காள பெருமக்களே என்று பேசியவர்கள்தான் அதிமுக ஆட்சியாளர்கள். விடியலைத் தருவதே உதயசூரியன். விடியலை விடியா ஆட்சி என்று கூறிக் கொண்டே இருப்பார்கள். உதய சூரியனால் கண் கூசுபவர்களுக்கு விடியல் என்றால் என்னவென்றே தெரியாது. தமிழ்நாட்டை இருளில் தள்ளியவர்களுக்கு விடியல் என்றால் என்னவென்றே தெரியாது.
வாக்களிக்கதாவர்களுக்கும் செய்யும் பணியால் திமுக அரசை அனைவரும் பாராட்டுகிறார்கள். திமுக அரசுக்கு கிடைத்த பாராட்டு தான் எதிர்க்கட்சிகளை வயிறு எரியச் செய்துள்ளது . திமுக அரசை பொறுத்தவரை மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். நாம் களத்தில் நிற்பதால் எதிர்க்கட்சியினர் தவித்து நிற்கின்றனர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயராக பதவியேற்றபோது சிங்கார சென்னையாக உருவாக்க முயற்சி எடுத்தேன். சென்னை மேயராக நான் செய்ததைவிட முதலமைச்சராக இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்ற பொறுப்பு எனக்கு அதிகமாகி உள்ளது.இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *