தஞ்சை, டிச.5 பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் (நிகர் நிலை பல்கலைக்கழகம்) வேந்தர் கி. வீரமணி அவர்களின் 92 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா ‘நிறுவனர் நாள்‘ விழாவாக நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு அரசு திட்டக் குழுத் துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்தி , மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகையை வழங்கினார். 3,214 மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற்றனர். மூன்று கோடியே எண்பத்தேழு லட்சத்து அறுபத்தாறாயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டது.
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) வேந்தர் கி.வீரமணி அவர்களின் 92 ஆம் ஆண்டு பிறந்தநாள் நிறுவனர் நாள் மற்றும் கல்வி உதவி தொகை வழங்கும் விழாவில் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை சிறப்பு விருந்தினர் ஜெ.ஜெயரஞ்சன் (திட்டக்குழு துணைத்தலைவர், தமிழ்நாடு அரசு) மாணவருக்கு வழங்கினார். அருகில் பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா. வெ.இராமச்சந்திரன், பதிவாளர் பேரா. பி.கே.சிறீவித்யா, கூடுதல் பதிவாளர் பேரா. ஆர்.மல்லிகா மற்றும் செயற்கை தொழில்நுட்பத் துறை இயக்குநர் பேரா. சர்மிளாபேகம் ஆகியோர் உள்ளனர்.
தமிழ்நாடு வளர்ச்சி பெற்றிருக்கிறது!
விழாவில் ஜெ.ஜெயரஞ்சன் பேசும்போது, இந்தியா விடுதலை பெற்ற போது தமிழ்நாடு மிகவும் பின் தங்கியிருந்தது. நாட்டின் பொருளாதாரப் பட்டியலை மாநிலங்கள் வாரியாக வரிசைப்படுத்தும்போது கீழே இருந்து மூன்றாம் இடத்தில், பீகார் ,உத்தரப்பிரதேசம் மாநிலங்களுக்குக் கீழே இருந்த மாநிலம் தமிழ்நாடு. இப்போது வளர்ச்சி பெற்ற மாநிலத்தில் முதலிடம் வகிப்பது மகாராட்டிரம் . இரண்டாவது இடத்தை தமிழ்நாடு வகிக்கிறது. தனி நபர் வருமானம் அதிகமாக இருப்பதும் தமிழ்நாட்டில்தான். வற்றாத நதிகள் இல்லை. ஆகையால் தமிழ்நாட்டில் விவசாயம் சிறப்பாக இல்லை. கனிம வளங்களும் இல்லை. ஆனா லும் தமிழ்நாடு வளர்ச்சி பெற்றிருக்கிறது.
பொது விநியோகத் திட்டம்!
தமிழ்நாட்டில் இந்த வளர்ச்சி எப்படி சாத்திய மாயிற்று? ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு உண்பது என்பது நடைமுறையாகும்.
இந்தியாவில் 42 சதவீத மக்கள் மூன்று வேளை உண்ண முடியாமல் இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மூன்று வேளை உண்ண முடியாதவர்கள் இரண்டு சதவீதம் மட்டுமே. பொது விநியோகம் மூலம் பசிப்பிணியை ஒழித்து இருக்கிறோம். அதற்காக தமிழ்நாடு அரசு 13,000 கோடி ரூபாய் செலவு செய்கிறது.
அனைவருக்கும் கல்வி
அனைவருக்கும் கல்வி என்பது தமிழ்நாடு அரசுகளின் லட்சியமாக இருந்திருக்கிறது. காமராஜர் ஆட்சியில் ஏராளமான பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. அதன் பிறகு கல்லூரிகள் வளர்ந்தன. கல்வி பரவினால் மட்டும் போதாது. எல்லா சமூகத்தவர்களுக்கும் கல்வி பயிலும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல மிதிவண்டி, பேருந்தில் செல்ல இலவச பயண அட்டைகளும், விடுதி வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன. அதனால் உயர் கல்வி படிக்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை இந்திய அளவில் 25 விழுக்காடு இருக்கும்போது தமிழ்நாட்டில் அய்ம்பது சத வீதம் பேர் உயர் கல்வி பெற்றிருக்கிறார்கள். இதற்காக நூறாண்டுகள் உழைத்திருக்கிறோம்.
மனிதனை ஆற்றல் உள்ளவனாக மாற்றும் கருவி கல்விதான்.
மனித வளத்தைப் பெருக்கினோம். அடிப்படைப் பணியைச் செய்தது நீதிக்கட்சி. எதிர்காலத்தில் தொழில் கல்வி வளர்ச்சி பெறும் என்பதை கணக்கிட்டு தமிழ்நாட்டில் ஏராளமான பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இப்போது ஆண்டுதோறும் இரண்டேகால் லட்சம் பொறியாளர்கள் படித்து முடித்து வெளிவருகிறார்கள் . தொழில் நுட்பர்கள் மிகுந்திருக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டில் 880 நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். அதில் 20 சதவீதம் மட்டுமே பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள்.
ஆதிக்கம் இருக்கக் கூடாது!
பெரியாரின் கனவு – படிக்க வேண்டும்; படித்தும் தற்குறியாக இருக்கக் கூடாது. விஸ்வகர்மா திட்டம் நம்முடைய முன்னேற்றத்தைத் தடுத்து விடும்.
தந்தை பெரியாருக்கு ஜாதிப் பற்று இல்லை; மதப் பற்று இல்லை; மொழிப் பற்று இல்லை;இனப் பற்று இல்லை; மானுடப் பற்று மட்டுமே இருந்தது.ஒரு நாடு என்றால் சமத்துவம் இருக்க வேண்டும். மண்டல் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முனைந்தபோது ஆதிக்கவாதிகள்காட்டிய எதிர்ப்பு சமத்துவத்திற்கு எதிரானது இவ்வாறு ஜெ.ஜெயரஞ்சன் குறிப்பிட்டார்.
விழாவில் தலைமை உரை நிகழ்த்திய பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவ னத்தின் துணைவேந்தர் பேராசிரியர் வெ. ராமச்சந்திரன் பேசும்போது, ‘’வேந்தர் வீரமணி அவர்கள் எப்போதும் வாசித்துக் கொண்டிருப்பவர். ஜாதி ஒழிப்பு, சமூக நீதி,பெண் விடுதலைக்காகப் போராடி வருபவர்.மக்களிடத்தில் விழிப்புணர்வூட்ட தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார்.அவருக்கு வயது 92. வரலாற்றில் நிலைப்பார்‘‘ என்று குறிப்பிட்டார்.
விழாவிற்கு பதிவாளர் சிறீவித்யா முன்னிலை வகித்தார். மாணவர் ஜெயஜனனி வரவேற்புரை நிகழ்த்தினார். மாணவர் குகன் நன்றி கூறினார்.
பல்துறை வித்தகர்
பல்கலைக்கழக வேந்தரின் பிறந்தநாளையொட்டி முனைவர் அன்பழகன் தலைமையில் ‘பல் துறை வித்தகர் ‘ என்ற தலைப்பில் அய்ன்ஸ்டீன் அரங்கத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் , ‘தலைவர்’ என்ற தலைப்பில் பேராசிரியர் உமா மகேஸ்வரி அவர்களும், ‘பத்திரிகை ஆசிரியர்’ என்ற தலைப்பில் தமிழ்ப் பல்கலைக்கழகத் திட்ட ஆய்வாளர் சந்திரசேகரன் அவர்களும் ,’பேச்சா ளர் ‘என்ற தலைப்பில் பேராசிரியர் கிருத்திகா அவர்களும்,’எழுத்தாளர் ‘என்ற தலைப்பில் பேராசிரியர் அரிஹரன் அவர்களும் ,’வழக்கறிஞர் ‘என்ற தலைப்பில் வழக்குரைஞர் பூவை. புலிகேசி அவர்களும், ‘ஓய்வறியாப் போராளி ‘என்ற தலைப்பில் பேராசிரியர் கண்மணி அவர்களும் கருத்துரை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் கண்மணி வரவேற்புரை நிகழ்த்தினார். தாரிணி நன்றி கூறினார்.
வேந்தரின் புத்தகங்கள் திறனாய்வு
பல்கலைக்கழக வேந்தரின் பிறந்தநாளையொட்டி டாக்டர் கி.வீரமணி அவர்கள் எழுதிய புத்தகங்கள் பற்றிய திறனாய்வு வள்ளுவர் அரங்கத்தில் நடைபெற்றது. திறனாய்வு அரங்கத்திற்கு தமிழ் இணையக் கல்விக் கழக மதியுரைஞர் செந்தலை ந.கவுதமன் தலைமை வகித்தார்.
‘வாழ்வியல் சிந்தனைகள்’ நூலினை சரஸ்வதி மகால் நூலகத் தமிழ்ப் பண்டிதர் முனைவர் மணி.மாறன் அவர்களும், ‘அய்யாவின் அடிச்சுவட்டில் …’ நூலினைப் பேராசிரியர் விஸ்வலிங்கம் அவர்களும், ‘தந்தை பெரி யாரின் பண்பாட்டுப் புரட்சி ‘ நூலினைப் பேராசிரியர் ராஜேந்திரன் அவர்களும் , ‘தமிழுக்கு என்ன செய்தார் பெரியார் ? நூலினைத் தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரிப் பேராசிரியர் எழிலரசன் அவர்களும் ,’சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் ‘ நூலினைக் கும்பகோணம் அரசினர் மகளிர் கல்லூரிப் பேராசிரியர் மகேஸ்வரி அவர்களும் திறனாய்வு செய்து உரையாற்றினர் .மாணவி முத்தரசி வரவேற்புரை வழங்கிட லதா நன்றி கூறினார்.