புதுடில்லி, டிச.5 மக்களவையில் ஒன்றிய அமைச்சா்களுக்கு நேற்று (4.12.2024) அறிவுரை வழங்கிய அவைத் தலைவா் ஓம் பிர்லா. மக்களவையில் கேள்வி நேரத்தின்போது அவைத் தலைவா் அனுமதிக்கும் முன்பே உறுப்பினா்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதை அமைச்சா்கள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
அமைச்சர்கள் பதில்
மக்களவையில் நேற்று (4.12.2024) கேள்வி நேரத்தின்போது சூரிய மின்சக்தி திட்டம் குறித்த கேள்விக்கு அமைச்சா் பிரகலாத் ஜோஷி பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது, சமாஜவாதி நாடாளுமன்ற உறுப்பினர் அகிலேஷ் யாதவ் எழுந்து வேறு ஒரு கேள்வியை எழுப்பினார். இதற்கு ஒன்றிய அமைச்சா் பியூஷ் கோயல் உடனடியாக எழுந்து பதிலளித்தார்.அப்போது குறுக்கிட்டுப் பேசிய அவைத் தலைவா் ஓம் பிர்லா, ‘அவைத் தலைவா் அனுமதிப்பதற்கு முன்பு உறுப்பினா்களின் கேள்விக்கு அமைச்சா்கள் பதிலளிக்கக் கூடாது’ என்று அறிவுறுத்தினார்.மற்றொரு தருணத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் குறித்த கேள்விக்கு அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா நீண்ட விளக்கமளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது மீண்டும் குறுக்கிட்ட ஓம் பிர்லா, ‘உறுப்பினா்களும், அமைச்சா்களும் தங்கள் கேள்வி மற்றும் பதிலை சுருக்கமாக முடித்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் மேலும் பலா் கேள்வி கேட்கவும், அதற்கு அமைச்சா்கள் பதிலளிக்கவும் முடியும்’ என்றார்.
கேள்வி நேரத்தின்போது அதிக உறுப்பினா்கள் கேள்விகளை கேட்க முற்படுவதால், அமைச்சா்கள் வாய்மொழியாக பதிலளிக்க வேண்டிய 20 கேள்விகள் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்படும் முறை உள்ளது. அந்த 20 கேள்விகளும் முழுமையாக கேட்கப்பட்டு பதில் அளிக்கப்பட வேண்டும் என்பதால் கேள்வி-பதில் சுருக்கமாக இருக்க வேண்டும் என்று அவைத் தலைவா் ஓம் பிர்லா வலியுறுத்தினார்.