வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் 4 நியமனதாரர்களை நியமிக்கலாம்! வங்கிகள் சட்டத்தில் திருத்தம்!

Viduthalai
3 Min Read

புதுதில்லி, டிச.5 வங்கிக் கணக்குக்கு 4 நியமனதாரர்களை நியமிக்கும் வங்கிகள் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் 3.12.2024 அன்று நிறைவேற்றப்பட்டது.
தற்போது வங்கிக் கணக்கு வைத்தி ருக்கும் ஒருவர், தனது நியமனதாரராக ஒருவரை மட்டுமே நியமிக்க முடியும். இதன் மூலம், வங்கிக் கணக்கு வைத்திருக்கும் நபர் உயிரிழந்தால், அவரின் கணக்கில் உள்ள பணத்தை நியமனதாரர் பெற முடியும்.
இந்நிலையில், வங்கிகள் சட்டத் திருத்த மசோதாவின்படி வங்கிக் கணக்கு வைத்திருக்கும் ஒருவர், தனது நியமனதாரர்களாக 4 பேரை குறிப் பிடலாம்.

வங்கித் துறையின் நிர்வாக தர நிலைகள், வங்கிகளில் பணம் செலுத்து வோர் மற்றும் முதலீட்டாளர் களின் பாதுகாப்பை மேலும் வலுப் படுத்துதல், பொதுத் துறை வங்கிகளின் தணிக்கை தரத்தை மேம்படுத்துதல், கூட்டுறவு வங்கிகளின் இயக்குநர்கள் பதவிக் காலத்தை அதிகரித்தல் உள் ளிட்டவை இந்த மசோதாவின் நோக்கம் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

கூட்டுறவு இயக்குநர்கள் பதவிக் காலம்…: கூட்டுறவு வங்கிகளின் இயக் குநர்கள் (தலைவர் மற்றும் முழு நேர இயக்குநர் தவிர) பதவிக் காலத்தை 8 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்க மசோதாவில் முன்மொழியப் பட்டுள்ளது. மாநில கூட்டுறவு வங்கி வாரியத்தில் மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநரும் கடமையாற்ற இந்த மசோதா அனுமதிக்கிறது.

மொத்தம் 19 திருத்தங்கள்: இந்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்து ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்கூறும் போது,
இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934, வங்கி ஒழுங்காற்றுச் சட்டம் 1949, பாரத ஸ்டேட் வங்கிச் சட்டம் 1955, வங்கி நிறுவனங்கள் (கையகப்படுத்துதல் மற்றும் பரிமாற்றம்) சட்டம் 1970, வங்கி நிறுவனங்கள் (கையகப்படுத்துதல் மற்றும் பரிமாற்றம்) சட்டம் 1980 ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவர, மொத்தம் 19 திருத்தங்கள் மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளன. வங்கித் துறையை வலுப்படுத்தவும், வாடிக்கையாளர் வசதிகளை மேம்படுத்தவும் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
‘பங்கை 26 சதவீதம் ஆக குறைப்பதே நோக்கம்’: இந்த மசோதாவுக்கு எதிர்க் கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. இதுதொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பேசுகையில், ‘பொதுத் துறை வங்கிகளில் ஒன்றிய அரசின் பங்கை 51 சதவீதத்தில் இருந்து 26 சதவீதமாக குறைத்து, அந்த வங்கிகளை தனியார்மயமாக்குவதே மசோதாவின் உண்மையான நோக்கம்’ என்றார்.

சிபில் புள்ளிகளால் பாதிப்பு: சமாஜவாதி எம்.பி.ராஜீவ் ராய் பேசு கையில், ‘வங்கிக் கடன் சரிவர திருப்பிச் செலுத்தப்பட்டதா, இல்லையா என் பதை தெரிவிக்கும் சிபில் புள்ளி களால் ஏழைகளும், நடுத்தர மக்களும் பாதிக்கப் பட்டுள்ளனர்’ என்றார்.
மறைமுக வங்கிக் கட்டணம்-திமுக எம்.பி. கேள்வி: திமுக எம்.பி. ராணி சிறீகுமார் பேசுகையில், வாடிக்கையாளர்களிடம் இருந்து மறைமுகமாக வங்கிக் கட்ட ணங்கள் வசூலிக்கப்படுவதை விமர்சித்தார். ஏடிஎம் சேவைகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு வாடிக் கையாளரிடம் இருந்து வங்கிகள் கட் டணம் வசூலிப்பதை குறிப்பிட்டு கேள்வி எழுப்பிய அவர், முதியோர்களை குறிவைத்து நடைபெறும் இணையவழி மோசடிகளையும் சுட்டிக்காட்டினார்.

இந்திரா காந்தி குறித்த கருத்தால் வாக்குவாதம்: இந்த மசோதா மீதான விவாதத்தின்போது கடந்த 1974-ஆம் ஆண்டு மேனாள் பிரதமர் இந்திரா காந்தி சம்பந்தப்பட்ட நிகழ்வை பாஜக எம்.பி. சம்பித் பத்ரா குறிப்பிட்டார். இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக திமுக எம்.பி. ஆ.ராசா பேசுகையில், ‘மேனாள் பிரதமர் இந்திரா காந்தி அவையில் இல்லாத போது அவரைக் குறித்து ஏன் பேச வேண்டும்? எந்தவொரு காரணமும் இல்லாமல் அவரின் பெயரைக் குறிப் பிட்டு, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்துவதற்கு என்ன அர்த்தம்? இது அவை விதி 94-அய் மீறுவதாகும்’ என்றார்.
இதையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *