அகில இந்திய சமூகநீதி மாநாட்டில் காணொலியில் தமிழர் தலைவர் உரை
[புதுடில்லியில் 3.12.2024 அன்று நடைபெற்ற அகில இந்திய சமூகநீதி மாநாட்டில் தமிழர் தலைவர் காணொலி மூலம் 6 மணித் துளிகள் ஆற்றிய ஆங்கில உரையின் தமிழாக்கம் இது.]
சென்னை, டிச. 5- சமூகநீதியே முதன்மை யானது! அதை அடுத்து வருபவைதான் பொருளாதார நீதி, அரசியல் நீதி எல்லாம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அகில இந்திய சமூக நீதி மாநாட்டில் (3.12.2024) அரசமைப்புச் சட்டத்தை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் காணொலி உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
இந்த மூன்றாவது மாநாட்டிற்குத் தலைமை ஏற்றுள்ள சிறப்புவாய்ந்த தலைவர் அவர்களே…
ஜாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, பெண்ணுரிமை, இட ஒதுக்கீடு ஆகிய முக்கிய மான பிரச்சினைகளைச் சரியான நேரத்தில் இம்மாநாடு கவனத்துக்கு கொண்டு வந்துள்ளது. அமைப்பாளர்களான திரு. வில்சன் எம்.பி மற்றும் உள்ள தோழர்களுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசமைப்புச் சட்டத்தினை முன்வைத்து, கொண்டாட்டம் என்ற பெயரில் சடங்காச்சாரமாக சில நிகழ்வுகள் நடந்து வந்தாலும், அரச மைப்புச் சட்டத்தின் முகப்புரையை வெறுமனே நாம் படிக்கவில்லை. அதை நடைமுறைப்படுத் துவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டு மென்கிறோம்.
நேர நெருக்கடியின் காரணமாகச் சுருக்கமாக நாம் சில செய்திகளை எடுத்துக் காட்டுகிறோம்.
இந்த மிகவும் முக்கியமான நிகழ்வில் பங்கேற்றுள்ள நாடாளுமன்றத்தின் மதிப் பிற்குரிய உறுப்பினர்கள், ஆட்சியாளர்கள் உள்ளடங்கிய மதிப்புக்குரிய பார்வை யாளர்களிடம் நான் வலியுறுத்த விரும்புகிறேன்.
நமது உரிமைகளுக்காக நாம் பேசுகிறோம். நாம் கேட்பது சலுகைகள் அல்ல. இந்திய அரச மைப்புச் சட்டத்தில் இடஒதுக்கீட்டு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இது ஏதோ charity அல்ல; ஆனால் நாம் சம உரிமையை கோருகிறோம்.
மிகச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், பெரியாரின் சமூக நீதி மண்ணில் இருந்து திராவிட மாடலை, முன்னுதாரணமாக நான் காட்ட விரும்புகிறேன். அதன் மூலம் தான் முதல் திருத்தம், 76ஆவது திருத்தம், 93ஆவது திருத்தம் அனைத்தும் நிகழ்ந்திருக்கின்றன.
இது அதிசயச் செயலால் நடந்ததா? இல்லை. மக்களை ஒருங்கிணைத்ததன் மூலம், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம், விஷயத்தை மக்களிடம் கொண்டு செல்வதன் மூலம் நிகழ்த்தப்பட்டது. நாம் எல்லா தளங்களிலும் இடஒதுக்கீடு குறித்த அறிவை விதைக்க வேண்டும்.
ஏனெனில் இடஒதுக்கீடு என்பதை நாம் தொடங்கவில்லை. இடஒதுக்கீடு என்ற வார்த்தையை நாம் உச்சரிக்கும்போது சிலர் ஜாதி அடிப்படையிலேயா என்று கூக்குரலிடு கிறார்களே!
நாம் இடஒதுக்கீட்டைப் பற்றிப் பேசும்போது, அதை எதிர்க்கும் அனைத்து சக்திகளுக்கும் நாம் சொல்லுகிறோம்.
இது ஒன்றும் நாங்கள் தொடங்கியது இல்லை. நீண்ட, நீண்ட காலத்திற்கு முன்பே இடஒதுக்கீட்டைத் தொடங்கியவர்கள் யார்? இன்னாருக்கு இது தான் என்று ஆக்கியது யார்? மனு அல்லவா? தங்களின் சுயநலத்துக்காக மனுவாதிகள் செய்த செயல் அல்லவா?
ஜாதியை உருவாக்கியது யார்? ஜாதியின் காரணமாக சமூகத் தடையைக் கொண்டு வந்தது யார்? பெரும்பான்மையான மக்கள் உரிமை களைப் பெறக் கூடாது. கல்வியைப் பெறக் கூடாது என்று செய்யப்பட்ட சதி தானே அது?
அந்தச் சூழ்ச்சியை மாற்றுவதற்கான ஏற்பாடு தானே இன்று இருக்கும் இடஒதுக்கீடு.
இது மக்களைப் பிரிக்க அல்ல; மக்களை, சமூகத்தை ஒன்றுபடுத்த!
மறுபுறம் தேசிய ஒருமைப்பாடு என்று பேசப்படுவதைக் காட்டிலும் முக்கியத்துவம் வாய்ந்தது சமூக ஒருமைப்பாடாகும். சமூக ஒருமைப்பாட்டைக் கொண்டுவரக்கூடிய ஒரே ஆயுதம் சமூகநீதி தான். அதற்காகத் தான் நாம் இங்கு கூடியிருக்கிறோம்.
மாநாட்டுத் தலைவரான நமது மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் திறமையான மற்றும் ஆற்றல்வாய்ந்த தலைமையின் கீழ் இயங்கும் ‘திராவிட மாடல்’ தமிழ்நாடு அரசைத்தான் நாம் முன்மாதிரியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
ஏனென்றால் நாம் யார் என்பதை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். இடஒதுக்கீட்டால் உரிமை பெற வேண்டிய மக்களை நோக்கிச் செல்ல வேண்டும்.
நமது பிறப்புரிமையான சமூகநீதிக்காகப் போராடுவது ஒரு செயல்முறையாகும், இது மக்களுக்குத் தேவையானதைக் கொடுப்ப தற்கான ஒரு வழிமுறையாகும்.
சமூகநீதி என்பது ஒரு சலுகை அல்ல. முதலில் நமது அரசமைப்புச் சட்டத்தின் முகவுரை என்ன கூறுகிறது? ஆழ்ந்து கவனிப்போம்.
WE, THE PEOPLE OF INDIA, having solemnly resolved to constitute India into a SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC and to secure to all its citizens:
JUSTICE, social, economic and political
சமூகநீதிக்குத்தான் முக்கியத்துவம் – முதன்மைத்துவம். இது மிகவும் முக்கியமானது. அடுத்துதான் பொருளாதார நீதி, அரசியல் நீதி எல்லாம்.
அன்பு சகோதர சகோதரிகளே, நீங்கள் அனைவரும் அறிந்ததுதான். ஆனால் இதை எவ்வாறு செயல்படுத்துவது என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
நம்முடைய அரசமைப்புச் சட்டம் மக்களிடம் பாகுபாடு காட்டாது. இந்த நாட்டின் அனைத்துக் குடிமக்களையும் பாதுகாக்க வேண்டும் என்று கூறுகிறது.
அரசமைப்புச் சட்டத்தின் Founding Fathers சமூகநீதி என்பதைக் கட்டாயமாகக் கொண்டு வர வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார்கள். அது ஒரு சலுகை அல்ல, அது ஒரு கருணை அல்ல; உரிமை என்பதை உறுதியாகத் தெரிவிக்கிறார்கள்.
எனவே நாம் அனைவரும் சமூகநீதிக்காக ஒன்றிணைந்து பாடுபடுவோம். நம்மை எது இணைக்கிறதோ அதை அகலப்படுத்துவோம். நம்மை எது பிரிக்கிறதோ அதை அலட்சியப் படுத்துவோம்.
தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டை எப்படி நாம் நடைமுறைப்படுத்தினோம்? தனியாக ஒரு சட்டம் இயற்றி, 76-ஆம் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்து, அதையும் அரசமைப்புச் சட்டத் தின் 9-ஆம் அட்டவணையில் இடம்பெறச் செய்தோம். அது எப்படி சாத்தியமானது என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
அதுதான் இன்றைய தேவை. அதைச் சாதித்துக் காட்டியிருப்பதுதான் ‘திராவிட மாடல்’. அதைப் பின்பற்றுங்கள். நன்றி!
இவ்வாறு தமிழர் தலைவர் உரையாற்றினார்.