சிறீஅரிகோட்டா, டிச.4- சூரிய ஒளிவட்டத்தை ஆய்வு செய்ய அய்ரோப்பிய விண்வெளி நிறுவனம் புரோபா-3 விண்கலத்தை, இஸ்ரோவின் பிஎஸ்எல்வி -எக்ஸ்எல் ராக்கெட் மூலம் சிறீஹரிகோட்டாவில் இருந்து இன்று (4.12.2024) விண்ணுக்கு அனுப்புகிறது.
அய்ரோப்பிய விஞ்ஞானி களுடன், இஸ்ரோ விஞ்ஞானிகளும் இணைந்து சூரியனின் ஒளிவட்டம் பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். புரோபா-3 விண்கலத்தில் இரண்டு செயற்கைக் கோள்கள் உள்ளன. இவை ஒன்றாக இணைந்து செயல்பட உள்ளன. 144 மீட்டர் நீளமுள்ள இந்த விண்கலம் சோலார் கார்னோகிராப் என்று அழைக்கப்படுகிறது. இது சூரியனின் நேரடி ஒளியைத் தடுத்து ஆய்வை மேற்கொள்ள தெளிவான பார்வையை வழங்கும். இது சூரியனின் கரோனா என்ற பிரகாசமான ஒளிவட்டப் பகுதியை ஆய்வு செய்யும்.
உலகில் முதல்முறையாக ஓர் ஆய்வுக்கு இரண்டு செயற்கைக்கோள்கள் ஒரே நேரத்தில் செலுத்தப்பட உள்ளன.. அவை ஒன்றாகப் பறந்து இரண்டாகப் பிரிந்து, ஒரு மெய்நிகர் கட்டமைப்பாகப் பறக்கும். பல செயற்கைக்கோள் பயணங்களுக்கு இந்த ஏவுதல் உதாரணமாக திகழும்.உலகில் முதல் முறையாக, இரண்டு செயற்கைக்கோள்களான கொரோனாகிராஃப் மற்றும் ஆக்ல்டர் ஆகியவை சில மில்லி மீட்டர்கள் இடைவெளியில் 144 மீ அல்லது அதற்கு மேற்பட்ட தூரத் தில் இருக்கும். இதன் விளைவாக, இந்த இணை ஒரு மெய்நிகர் ராட்சத செயற்கைக் கோளை போல செயல்படும். மேலும், இது தரையில் இருந்து பெறப்படும் கட்டளைகள் எதுவும் இல்லாமல் தானாகவே இயங்கும்.
புரோபா-3 என்ன ஆய்வு செய்யவுள்ளது? சூரிய கரோனா (சூரியனின் வளிமண்டலத்தின் வெளிப்புற பகுதி) அதனுடன் தொடர்புடைய பல விந்தைகளைக் கொண்டுள்ளது. சூரிய கரோனா சூரியனின் மேற்பரப்பைவிட ஒரு மில்லியன் டிகிரி வெப்பம் அதிகமாக உள்ளது. , இந்தப் பகுதியில் ஏற்படும் கரோனல் வெளிப்பாடு (அதிக சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள்) குறித்து தீவிர ஆய்வு செய்யப்பட உள்ளது. கரோனல் வெளிப்பாடு செயற்கைக்கோள்கள் அல்லது தகவல் தொடர்பு மற்றும் மின் விநியோக கட்டமைப்புகளை பாதிக்கக்கூடியது என்பதால் ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது.
சூரிய மறைப்பு: பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலவு வரும்போது எற்படும் சூரிய மறைப்பு என்பது சூரிய கரோனாவை ஆய்வு செய்ய இயற்கை கொடுத்த வாய்ப்பு ஆகும். ஆனால், மறைப்பு விந்தைகள் அரிதானவை. சில நிமிடங்களுக்கு மட்டுமே நிகழும். இதனால் சூரிய கரோனாவை நீண்ட காலம் ஆய்வு செய்ய இயலாது. தற்போது விண்ணில் செலுத்தப்படும் ஆக்ல்டர் மற்றும் கரோனாகிராஃப் செயற்கைக் கோள்கள் விண்வெளியில் மிகவும் துல்லியமாக வலம் வந்து ஆய்வு செய்யும்.
இந்தியாவில் இருந்து ஏவப்படுவது ஏன்? 550 கிலோ எடையுள்ள புரோபா-3- அய் விண்ணில் செலுத்தக்கூடிய நடுத்தர ராக்கெட் அய்ரோப்பிய விண்வெளி அமைப்பிடம் (இஎஸ்ஏ) இல்லை. செயற்கைக்கோள்களின் நிறை இஎஸ்ஏ-வின் வேகா-சி என்ற சிறிய ராக்கெட்டின் திறனைவிட அதிகமாக உள்ளது, அதே நேரத்தில் பெரிய ஏரியன்-6 ராக்கெட் இந்த வகையான பணிக்கு மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். எனவே இஸ்ரோவின் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் புரோபா-3 விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்காக இஸ்ரோவின் வணிகப் பிரிவான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட்டுக்கு இஎஸ்ஏ சார்பில் ரூ. 271 கோடி கட்டணம் செலுத்தப்படுகிறது.