சென்னை, டிச.4 சென்னையில் வருகிற 18ஆம் தேதி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வரும் டிச.18ஆம் தேதி காலை 10 மணியளவில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், திமுக தலைமை செயற்குழுக் கூட்டம் நடைபெறும். இதில், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்துகொள்ள வேண்டும், என்று அவர் கூறியுள்ளார். இக்கூட்டத்தில், கட்சியின் செயல்பாடுகள் மற்றும் பணிகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ வழக்கு நான்கு பேர் கைது
மோசடியின் பின்னணியில் சீனர்கள்
சென்னை, டிச.4 சென்னையில் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடி வழக்கில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மேலும் 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். மோசடியின் பின்னணியில் சீனர்கள் இருக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஒன்றிய அரசு அதிகாரியிடம், மும்பை காவல் துறையில் இருந்து பேசுவதாகக் கூறி ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடி செய்து ரூ.88 லட்சம் அபகரித்த வழக்கில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதீம் போரா அண்மையில் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர், கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி ஒரே நாளில் ரூ.3.82 கோடி மோசடி செய்திருப்பதும், அந்த பணத்தை 178 வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பியிருப்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, சென்னை சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் 178 வங்கி கணக்குகளையும் கண்டறிந்து, அதை மீட்பதற்குரிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே சிறையில் அடைக்கப்பட்ட பிரதீம் போராவை சைபர் குற்றப்பிரிவினர் தங்களது காவலில் எடுத்து விசாரணை செய்தனர். இதில் பல முக்கியத் தகவல்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில் காவல்துறையினர் அசாம் மாநிலம் குவாஹாட்டிக்கு சென்று விசாரணை செய்தனர்.
மேலும், பிரதீம் போராவுடன் இணைந்து ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடியில் ஈடுபட்டதாக துருபாஜோதி மஜிம்தார்(25), ஸ்வராஜ் பிரதான்(22), பிரசாந்த் கிரி(21), பிரஞ்ரல் ஹசாரிகா(28) ஆகிய 4 பேரைக் கைது செய்ததாக சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள் நேற்று (3.12.2024) தெரிவித்தனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், டில்லி, கொல்கத்தா, கேரளா, ஜெய்ப் பூர், மும்பை, கோவா ஆகிய இடங்களில் உள்ள தங்களது முகவர்கள் மூலம் பொதுமக்களின் அலைபேசி தொடர்பு எண்கள், அவர்கள் குறித்த விவரங் களை பெற்றிருப்பதும், அந்த விவரங்கள் மூலம் பொதுமக்களை ஏமாற்றியும், மிரட்டியும் பணம் பெற்றுள்ளனர். அந்த பணத்தை கம்போடியா, வியட்நாம், தைவான், பாங்காங் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் தங்களது சீன முதலாளிகளுக்கு அனுப்பியிருப்பதும், இதற்கான கமிஷன் தொகையை சீன முதலாளிகள் இவர்களுக்கு வழங்கியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்குத் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தனித்தீர்மானம்
தமிழ்நாடு அரசு திட்டவட்டம்
மதுரை, டிச.4 மதுரை மாவட்டம் நாயக்கர் பட்டி பகுதியில், டங்ஸ்டன் சுரங்கப் பணி மேற்கொள் வதற்கான குத்தகை, ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான, ‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப் பணியால், அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால், சுரங்க ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என, தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.
இது தொடர்பாக ஏற்கெனவே ஒன்றிய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இந்த சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இரண்டு நாள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் முதல் நாளே டங்ஸ்டன் சுரங்க உரிமையை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சிறப்பு தீர்மானம் கொண்டுவர தமிழ்நாடு அரசு திட்டமிட்டு உள்ளது. மாநில அரசின் அனுமதி இன்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.