அய்யப்பனால் மழை புயலை தடுக்க முடியாதோ?

viduthalai
2 Min Read

சபரிமலை, டிச.4- தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் காரணமாக, சபரிமலையில் அதன் தாக்கம் இருக்கும் என்ற எச்சரிக்கையை தொடர்ந்து, பம்பையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. எதிர்பார்த்தபடி, 2.12.2024 அன்று மாலை 6:30 மணிக்கு துவங்கிய சாரல் மழை, இரவு வலுத்தது. நேற்று (3.12.2024) காலை சாரல் மழை தொடர்ந்த நிலையில், 11:00 மணிக்கு பின் கனமழை தொடங்கியது. இதனால் மலையேறும் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டனர். பக்தர்கள் அருகிலிருந்த கடைகளில் தஞ்சமடைந்தனர். மழையால் பாதையில் சறுக்கல் ஏற்பட்டதால், பக்தர்கள் மெதுவாகவே ஏற முடிந்தது.
வழிகாட்டு நெறிமுறை

பெரிய நடைப்பந்தலில் நேற்று வரிசை (கியூ) காணப்படவில்லை. பக்தர்கள் உடனடியாக தரிசனம் முடித்து தற்காலிகக் குடில் (ஷெட்டுகளில்) தஞ்ச மடைந்தனர். ஏராளமான பக்தர்கள் மழையில் நனையாமல் இருக்க பாலிதீன் கோட் அணிந்து வந்தனர்.

சபரிமலை அமைந்துள்ள பத்தனம்திட்டை மாவட்டத்திற்கு நேற்று மஞ்சள் எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது. சபரிமலை, பம்பை மற்றும் நிலக்கல்லில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், 40 கி.மீ., வேகத்தில் காற்று வீசக் கூடும் என்றும், 11.55 செ.மீ. வரை மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மய்யம் அறிவித்திருந்தது. நேற்று மதியத்துக்கு பின் மழை மேலும் வலுத்தது. புயல் காரணமாக தமிழ்நாடு பக்தர்கள் கணிசமாக குறைந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. இவர்கள் மழை தீர்ந்த பின் மற்ற நாட்களில் வரக்கூடும் என்பதால் அப்போது நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தேவசம் போர்டு கருதுகிறது. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், மாற்று ஏற்பாடுகள் செய்வது குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என, திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர், பி.எஸ்.பிரசாந்த் கூறினார். இதற்கிடையே, சபரிமலையில் பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் போது, கையில் கம்பு எடுக்கக் கூடாது என, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சபரிமலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் எப்படி செயல்பட வேண்டும் என, வழிகாட்டு நெறிமுறைகளை உயர் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

அதன் விவரம்:

*பணி நேரத்தில் அலைபேசியில் சமூக வலைதளங்களை பயன்படுத்தக் கூடாது. இது கேமராவில் கண்காணிக் கப்படும்
*பக்தர்களை, சாமி என்று மட்டுமே அழைக்க வேண்டும். பக்தர்கள் உணர்ச்சி வசப்பட்டோ அல்லது ஆத்திரத்திலோ எவ்வித செயல்பாட்டில் ஈடுபட்டாலும் காவல்துறையினர் பொறுமையை இழக்கக்கூடாது
* பக்தர்களின் வரிசையை ஒழுங்கு படுத்தும் போது பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் காவல்துறையினர் விசில் பயன்படுத்தலாம். காக்கி பேன்ட், சட்டை அணிந்து வருபவர்களை பரிசோ தனை இன்றி செல்ல அனுமதிக்கக் கூடாது.
* பெருவழிப்பாதை போன்ற காட்டுப்பாதையில் வரும் பக்தர்கள் காட்டு விலங்குகளின் தாக்குதலிலிருந்து தப்பிக்க, நாட்டு வெடிகளை கையில் வைத்திருப்பது கடந்த காலங்களில் வெடி குண்டு நிபுணர்களின் சோதனை யில் தெரிய வந்துள்ளது. நாட்டு வெடிகுண்டுகளுடன் பக்தர்கள், சன்னிதானத்திற்கு வராமல் இருக்க பரிசோதனையில் கவனம் செலுத்த வேண்டும்
* நிலைமைக்கு ஏற்ற செயல்பாடு காவல்துறையினருக்கு மிகவும் முக்கியம். கூட்டம் அதிகமாகி, நெரிசல் ஏற்பட்டாலும் அதை ஒழுங்குபடுத்து வதற்கு காவல்துறையினர் கையில் கம்பு எடுக்கக் கூடாது.
இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *