மலேசியா – 11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு வளாகத்தில் வெளியிடப்பட்டது
கோலாலம்பூர், ஜூலை 24 மலேசியா – கோலாலம்பூரில் நடைபெற்று வந்த 11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் நிறைவு நாள் (23.7.2023) நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தேறின.
மாநாடு நடைபெற்ற மலேயா பல்கலைக் கழக வளாகத்தில், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் நடத்தி வரும் “பெரியார் பிஞ்சு” – குழந்தைகளுக்கான மாத இதழின் இணையப் பதிப்பு வெளியிடப்பட்டது. “பெரியார் பிஞ்சு” இதழ் தொடங்கி 25 ஆண்டுகள் ஆன நிலையில் வெள்ளி விழா கொண்டாடிடும் வேளையில் அதன் இணையப் பதிப்பு வெளியிடப்பட்டது சிறப்புக்குரியதாகும்.
“பெரியார் பிஞ்சு” இதழின் இணையப் பதிப்பு வெளியீடு அதன் ஆசிரியர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. இணையப் பதிப்பினை மலேசியா வாழ் “பாப்பா கவிஞர்” முரசு நெடுமாறன் அவர்கள் வெளியிட்டு உரையாற்றினார்.
பெரியார் பிஞ்சு இதழ் முழுமையும் பல வண்ணங்களில் வெளி வருவது சிறப்புக்குரியது. இதழினை வாசித்திடும் குழந்தையர் தாங்கள் விரும்புவதை தெரிவிக்கும் வகையில் அவர்கள் எதிர்காலத்தில் தாய் திருநாட்டை அறிவியல் நோக்கில் வளர்ச்சி காணச் செய்திடும் வகையில் – பல தரப்பட்ட குழந்தைகள் அளவில் வாசித்து அறியப்பட வேண்டும். அந்த வகையில் ‘பெரியார் பிஞ்சு’ இதழின் பரந்துபட்ட வாசிப்பு பெருகிட வேண்டும்.
தமிழர் தலைவரின் உரை
முன்னிலை வகித்து உரையாற்றிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டதாவது:
குழந்தைகளுக்கான இதழ் நடத்துவது என்பது வருங்கால சமுதாயத்தை வளப்படுத்தவே – பள்ளி செல்லும் பிஞ்சு வயதில் படித்திடும் கருத்துகள், மனதில் ஆழமாகப் பதிந்து அவர்களது வாழ்நாள் முழுவதும் நிலைத்து பயன்தரத்தக்கதாய் அமைந்து விடும். மானுட வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி, ஆற்றலுக்கு தடை விதிக்கின்ற வகையிலான சமூகச் சூழலில் வளர்ந்து வரும் குழந்தைகள் முழு ஆற்றலாளர்களாக, அறிஞர்களாக அறிவியலாளர்களாக உருவாகிட முடியாது. மூடநம்பிக்கை கருத்துகள், மனித ஆற்றலுக்கு முட்டுக்கட்டை போடும் கருத்துகள், செய்திகள் ஆகியவை முறியடிக்கப்பட வேண்டும். ஆக்க ரீதியான அறிவியல் செய்திகள் குழந்தைகள் நினைவில் பதிந்திட வேண்டும். பகுத்தறிவுக் கருத்துகள் பலப்பட வேண்டும். இவை அனைத்தையும் நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் ‘பெரியார் பிஞ்சு’ – இன்று ‘பெரியார் பிஞ்சு’ இணைய தள பதிப்பு வெளியிடப்பட்டு, உலகம் முழுவதும் வாழும் தமிழறிந்த குழந்தைகள் படிப்பதற்கு, வாசிப்பதற்கு ஏதுவானதாக அமைந்திருக்கிறது. “பெரியார் பிஞ்சு” இதழில் ஆங்கிலத்திலும் கருத்துகள் – சில பக்கங்கள் வெளிவருவது அதன் வாசிப்பு வட்டத்தைப் பரவலாக்கும். இவ்வாறு தமிழர் தலைவர் உரையாற்றினார்.
“பெரியார் பிஞ்சு” இதழுக்கு சிறப்பாசிரியர்
இணையதளப் பதிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், “பெரியார் பிஞ்சு” இதழின் உள்ளடக்கத்தினை மேலும் செழுமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மலேசிய நாட்டு தமிழ்க் கவிஞர் – பாப்பா கவிஞர் முரசு நெடுமாறன் அவர்கள் “பெரியார் பிஞ்சு” இதழின் சிறப்பாசிரியராக இருந்து குழந்தைகளுக்கான முற்போக்கு கருத்துகளைக் கவிதை, கட்டுரை, கதைகள் மூலம் அவருடைய ஆழ்ந்த அனுபவத்தில் விளைந்தவைகளை அளித்திடுமாறு சிறப்பாசிரியரை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
எழுத்தாளர் விழியன்
வெளியீட்டு நிகழ்வில் குழந்தைக் கதை எழுத்தாளரும் “பெரியார் பிஞ்சு” இதழுக்கு தொடர்ந்து கதைகள் படைத்து வருபவருமான எழுத்தாளர் விழியன் உரையாற்றினார். “பெரியார் பிஞ்சு” இதழ் 25 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருப்பது ஒரு பெரிய சாதனை. எந்த ஒரு சாதனையும் இன்னல்களைத் தாண்டித்தான் உருவாக முடியும். பல “குழந்தை இதழ்கள்” தொடங்கப்பட்டு ஒரு சில ஆண்டு களிலேயே முடங்கி விடும் நிலைக்கு ஆளாகி விட்டன. வருங்காலத்தில் புத்தகங்கள், கதைகள், குழந்தைகள் கவனத்தை ஈர்க்கின்ற வகையில் வெளிவர துணை புரிந்திட உள்ளதாக தெரிவித்தார்.
பொறுப்பாசிரியர் பிரின்சு என்னாரெசு பெரியார்
‘பெரியார் பிஞ்சு’ இதழின் பொறுப்பாசிரியரான பிரின்சு என்னாரெசு பெரியார் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தி ‘பெரியார் பிஞ்சு’ இதழினை அடுத்த கட்ட நகர்விற்கு கொண்டு சேர்த்துள்ளார். பெரியார் இயக்கம் நடத்திடும் ‘விடுதலை’, ‘உண்மை’, ‘The Modern Rationalist’ ஆகிய ஏடுகள் – இதழ்கள் தந்தை பெரியார் காலத்திலேயே தொடங்கப்பட்டு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருபவை. ஆனால் ‘பெரியார் பிஞ்சு’ குழந்தை இதழ் – தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் காலத்திற்குப் பின் தமிழர் தலைவர் அவர்களால் 1998 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது; அதன் ஆசிரியராகவும், தொடர்ந்து இருந்து வருகிறார். வளர்ந்து வரும் உலகத் தொழில் நுட்பத்திற்கு ஏற்ற வகையில் “பெரியார் பிஞ்சு” இதழ் வெளிவர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
நன்றி கூறிய “பெரியார் பிஞ்சு”
சிங்கப்பூரிலிருந்து பெற்றோருடன் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு வருகை தந்த யாழ் பாரதி (வயது 10) தொடர்ந்து “பெரியார் பிஞ்சு” வாசகராக இருந்து வருபவர். “பெரியார் பிஞ்சு” வாசகர் யாழ் பாரதி நிகழ்ச்சிக்கு வருகை தந்தோருக்கும் சிறப்பித்த அறிஞர் பெரு மக்களுக்கும் நன்றி கூறி நிறைவு செய்தார்.
நிகழ்ச்சியில் திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன், மலேசியா மாந்தநேய திராவிடர் கழகத்தின் மதியுரைஞர் ரெ.சு. முத்தையா, தலைவர் நாகபஞ்சு மற்றும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு வருகை தந்த பலரும் கலந்துகொண்டனர்.