என்.டி. டிவி இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமாக ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் சில மாநில மொழிகளில் செய்தித்தளங்களில் முதலிடத்தில் 15 ஆண்டுகளாக இயங்கி வந்தது. பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா ராயால் தொடங்கப்பட்டது (1988).
மிகவும் முன்னணியில் இருந்த இந்த செய்தி நிறுவனத்தின் தலைவர் பிரணாய் ராய், தன்னுடைய நிறுவனத்தின் முக்கிய பதவிகளில் பார்ப்பனர்களை மட்டுமே தேடித்தேடி நியமித்தார். அங்கு பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு எந்த ஒரு முக்கியத்துவமுமே வழங்கப்படாது.
ஆனாலும் இவர் இடதுசாரி எனக் கருதப் பட்டவர்!
இந்த நிலையில் அதன் செய்திகளின் தாக்கம் மக்களிடையே மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை தெரிந்துகொண்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முதலில் அங்கு உள்ள உயர் பதவிகளில் இருந்த பார்ப்பனர்களைத் தொடர்பு கொள்கிறது, அத்தனைப் பேரும் அப்படியே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கட்டளைக்குக் கட்டுப்படுகிறார்கள்.
என்.டி.டிவி. தலைவர் மீது போலி ஊழல் வழக்கு திட்டமிட்டுப் பதியப்படுகிறது, ஏற்ெகனவே நீண்ட ஆண்டு கடன் வழங்கிய நிறுவனங்கள் உடனடியாக திருப்பித்தரச் சொல்லி நெருக்கடி கொடுக்கின்றன.
பங்குச் சந்தையில் திட்டமிட்டு என்.டி. டிவியின் பங்குகளை வாங்குவாரின்றிப் போகும் நிலை உருவாக்கப்பட்டது. இதனால் பங்குச்சந்தை பட்டியலில் இருந்து என்.டி. டிவி நீக்கப்பட்டது.
2014 ஆம் ஆண்டு மோடி தலைமையில் ஆட்சி அமைகிறது. என்.டி.டிவி. மீது நெருக்கடி அதிகமாயிற்று. சிபிஅய், ஈ.டி. உள்ளிட்ட அனைத்தும் மூச்சுவிடக்கூட நேரம் தராமல் –நெருக்கடி நிதி நிலையில் – கைது – பிணை இன்றி சிறை – என சூழல் வரவே வேறு வழியின்றி மோடியின் நெருங்கிய நண்பரான அதானிக்கு என்.டி. டிவியை விற்று விட்டு பிரணாய் ராய் வெளியேறுகிறார்.
சி.பி.அய். அனைத்து வழக்குகளில் இருந்தும் அவரை விடுவிக்கிறது. இதில் பார்ப்பனர் அல்லாத ஒரு சில செய்தியாளர்கள் – ரவீஷ் குமார் உள்ளிட்டோர் வெளியே அனுப்பப்படுகின்றனர்.
ஆனால், பார்ப்பனர்கள் அனைவரும் ஏற்கெனவே வகித்த பதவிகளில் அப்படியே அமர வைக்கப்படுகின்றனர். தற்போது அது பாஜகவின் நேரடி செய்தி ஊடகமாகவே மாறி விட்டது.
ஒருவேளை பிரணாய் ராய் தன்னுடைய நிறுவனத்தில் பார்ப்பனர் அல்லாதவர்களை அதிக அளவில் நியமித்திருந்தால் அவர்கள் நிறு வனத்தைக் காப்பாற்ற துணை நின்றிருப்பார்கள். பார்ப்பன கூடா நட்பால் இவ்வாறு நாசமான நிறுவனங்கள் பல; அதில் சிறந்த எடுத்துக்காட்டு என்.டி.டிவி.
பார்ப்பனர்கள் ஆதிக்கம் இருப்பினும் தம் போக்கிற்கு அது செயல்படாத காரணத்தால் அதன் கழுத்தை நெரிக்கும் பிஜேபி அரசின் போக்கு பாசிசம் அல்லாமல் வேறு என்ன இசமாம்?
குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடந்த கலவரம் தொடர்பாக பி.பி.சி. செய்தி நிறுவனம் ஆவணப் படங்களை வெளியிட்டது. அதன்மீது நடவடிக்கைகளை எடுக்கப் பாய்ந்த அதிகார வர்க்கம் தானே இது?
பூனை கண்ணை மூடிக் கொண்டால் பூலோகம் இருண்டு விடுமா? என்ற பழமொழி தான் நினைவிற்கு வருகிறது.
ஊடகங்களின் ஆதிக்கம் பெரும்பாலும் பார்ப்பன – பனியா ஆதிக்கத்தின் கீழ்தான் இருக்கிறது.
காங்கிரஸ் இளந்தலைவர் ராகுல்காந்திகூட, செய்தியாளர்களைப் பார்த்து, உங்களில் எத்தனைப் பேர் ஓ.பி.சி. என்று கேட்கவில்லையா? அதன் பொருள் என்ன?
சிந்திப்பீர்!