பகுத்தறிவாளர் கழகப் புரவலர், ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு
ஆத்தூர், டிச. 3- பகுத்தறிவாளர் கழகப் புரவலர், ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் மற்றும் ஆத்தூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்திய ஆசிரியர்களுக்கான அறிவியல் மனப்பான்மை பயிற்சி 23.11.2024 அன்று காலை 10 மணி அளவில் ஆத்தூர் ராஜ் கிருஷ்ணா ரெசிடென்சியில் நடைபெற்றது.
தொடக்க நிகழ்வுக்கு ஆத்தூர் பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் வ. முருகானந்தம் தலைமையேற்று தலைமை உரை ஆற்றினார். ஆத்தூர் பகுத்தறிவாளர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் அ.அறிவுச்செல்வம் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த அனைவரையும் வரவேற்று வரவேற்புரையாற்றினார்.
பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில அமைப்பாளர் இரா.மாயக்கண்ணன் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார். பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் (ஆசிரியர் அணி) வா.தமிழ் பிரபாகரன், ஆத்தூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்ட துணைச் செயலாளர் பொறியாளர் சி.அருண்குமார், நிகழ்ச்சியைத் ஒருங்கிணைத்தார்.
பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் வி.மோகன் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் பி.பழனிவேல், பகுத்தறிவாளர் கழக உறுப்பினர்கள் மருத.பழனி வேல், மருத்துவர் முரளி, முனைவர் கு.பிரகாஷ், பெ.முரளி, வினோத், சிவக்குமார், மெய்யழகன், தனசேகர், பொறியாளர் சுந்தரம், செல்வராஜ், ஆத்தூர் திராவிடர் கழகத்தின் மாவட்டத் தலைவர் த. வானவில், மாவட்டச் செயலாளர் நீ.சேகர், காப்பாளர் ஏ.வி.தங்கவேல், காப்பாளர் விடுதலைச் சந்திரன், நரசிங்கபுரம் நகர தலைவர் சைக்கிள் மணி, மாநில கலைத் துறை செயலாளர் மாரி கருணாநிதி, தலைமைக் கழக அமைப்பாளர் கா.நா.பாலு, சேலம் திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் பூபதி, ஆத்தூர் மேட்டூர் பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் கோவி.அன்புமதி, மாவட்டச் செயலாளர் மதியழகன், வேல்முருகன், பெரம்பலூர் பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் நடராசன், செயலாளர் விசயேந்திரன், கள்ளக்குறிச்சி பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் எழிலரசன், மாவட்டச் செயலாளர் முருகேசன், சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் வீரமணி ராஜீ, செயலாளர் வழக்குரைஞர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பயிற்சிக்கு வருகை புரிந்த அனைத்து ஆசிரியர்களையும் பகுத்தறிவாளர் கழக சேலம் மாவட்ட பொறுப்பாளர் ஆசிரியர் மூலிகை முனிசாமி மூலம் முன்னின்று பயிற்சிக்கு பதிவு செய்தனர்.
அமர்வு1 : சமூக நீதியும் கல்வியும்.
கருத்தாளர் : கோ.கருணாநிதி
சமத்துவம் என்றால் என்ன? சமூக நீதி என்றால் என்ன? என்ற விளக்கத்தோடு நிகழ்ச்சி தொடங்கினார். மனு சட்டம் நடைமுறையில் இருந்தது தொடங்கி அரசமைப்பு சட்டம் வரை கல்வி குறித்த வரலாற்று செய்திகளை விளக்க படத்துடன் நடத்தினார். அரசமைப்பின் முதல் சட்ட திருத்தம் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களால் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி உரிமைக்காக நடத்தப்பட்டது என்றும், கல்வியில் இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தது தந்தை பெரியார் அவர்கள் என்றும், 69 சதவீத இட ஒதுக்கீடு பெற்று தந்தது தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ஆலோசனையில் பெறப்பட்டு பாதுகாக்கப்பட்டது, என்கிற வரலாற்றுத் தகவல்களையும் தகுதி, திறமை கல்வியில் எவ்வாறு காண வேண்டும். சமூகநீதியுடன் கல்வி கடைக்கோடி மனிதனுக்கும் சென்று சேர வேண்டும் என்று விளக்கப் படங்களோடு அழகாக விரிவுரைத்தார். அவருக்கு தென்னங்குடி பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் இரகுநாதன் அவர்கள் பயனாடை அணிவித்தும், புத்தகம் வழங்கியும் சிறப்பு செய்தார்.
அமர்வு 2 : அறிவியலும் மூடநம்பிக்கைகளும்.
கருத்தாளர் : மருத்துவர் கவுதமன்
பேய் ஆடுவதிலும், சாமி ஆடுவதிலும் உள்ள மூடநம்பிக்கைகளும், பெண்களை அதிகமாக இந்நிகழ்வுகள் ஆட்கொள்வதற்குக் காரணமும், அதற்கான அறிவியல் விளக்கங்களும் ,அவர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அது மருத்துவரிடம் சிகிச்சை பெறக்கூடிய நோய் என்பதையும் விளக்கமாக கூறி மூடநம்பிக்கைகள் குறித்து ஒரு நாடகமாகவும், நகைச்சுவையாகவும், எள்ளி நகையாடி எடுத்துரைத்தார். ‘ஒரு மருத்துவர் இவ்வளவு அழகாக ஆடி, பாடி, நடித்து விளங்க வைக்கிறாரே’ என்று ஆசிரியர்கள் மத்தியில் ஆச்சரியமாக பேச வைத்தார். அவருக்கு ஆத்தூர் பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் பழனிவேல் பிச்சமுத்து பயனாடை அணிவித்தும், புத்தகம் வழங்கியும் சிறப்பு செய்தார்.
அமர்வு 3 : அறிவியல் மனப்பான்மை
51A(H) அரசியல் சட்டம்
கருத்தாளர் : ச.பிரின்சு என்னாரசு பெரியார்
மூடநம்பிக்கைகள் என்றால் என்ன? மூடநம்பிக்கைகளை நாம் கேள்வி கேட்க தடையாக இருப்பவைகள் குறித்தும். அச்சம், அறியாமை பற்றியும், சொர்க்கம், நரகம் மூடநம்பிக்கைகளை விளக்கியும், நாம் உடலில் பல்வேறு இடங்களில் கயிறு கட்டும் அறியாமை பிற்போக்குத்தனங்களை எடுத்துக் கூறி இடித்துரைத்தார்.
எதையும் கேள்வி கேட்டலும் தவறு என்றால் மறுப்பதும் தான் அறிவில் மனப்பான்மை அந்த அறிவில் மனப்பான்மையை வளர்த்துக்கொண்டு ஆசிரியர்கள் மாணவர்களை அறிவியல் மனப்பான்மையோடு அடுத்த தலைமுறையை வளர்க்க ஏதுவாக பணி செய்ய வேண்டும் என்று எடுத்துக் கூறினார். இவர் பயிற்சிக்குப் பின் உடனே ஓடி வந்து ஆசிரியர் கோவிந்தராஜன் (அரசு உயர்நிலைப்பள்ளி, மேற்கு ராஜபாளையம்) தன் கையில் கட்டி இருந்த மூடநம்பிக்கை கயிற்றை உடனே இந்த இடத்திலேயே நான் அகற்றுகிறேன் என்று அகற்றினார். அவரைத் தொடர்ந்து அனைத்து ஆசிரியர்களும் மூடநம்பிக்கை கயிறு கட்டும் பழக்கமும், கயிற்றில் உள்ள நச்சுவினால் வரும் நோய்களையும் அகற்ற மூடநம்பிக்கைகளைக் கைவிட வேண்டும் என்று அடுத்த ஆசிரியர்களுக்கும் அறிவுரை கூறினார். பிரின்சு என்னாரசு பெரியார் அவர்களுக்கு திமுக நகர செயலாளர் கே.பாலசுப்ரமணியம் அவர்கள் பயனாடை அணிவித்தும் நூல்கள் வழங்கியும் சிறப்பு செய்தார்.
அதனைத் தொடர்ந்து மதிய உணவு இடைவேளை அசைவ உணவும், சைவ உணவும் வழங்கப்பட்டது.
உணவு இடைவேளையில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் வைக்கப்பட்டிருந்த புத்தகக் கண்காட்சியைக் ஆசிரியர்கள் கண்டு களித்தினர். 50 சதவீத கழிவில் ரூ.6000 மதிப்புள்ள நூல்களை வாங்கி பயனடைந்தனர். பின்னர் புத்தகங்கள் எண்ணிக்கை குறைவாக இருந்த காரணத்தினால் கிடைக்காமல் இருந்த மருத்துவர் கவுதமன், எழுத்தாளர் மஞ்சை.வசந்தன் ஆகியோரின் நூல்களை ஆசிரியர்கள், எங்களுக்கு மீண்டும் அதை வாங்கித் தரும்படி நூல்களைப் பதிவு செய்து கொண்டனர். மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பிலும் புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தது. ஆசிரியர்கள் கண்டு களித்து, நூல்களை வாங்கிச் சென்றனர்.
அமர்வு 4: மந்திரமா? தந்திரமா?
கருத்தாளர்: இரா.விடுதலைச் சந்திரன்.
சாமியார்கள் செய்யும் தந்திர உத்திகளை வைத்து பொதுமக்களை எவ்வாறு ஏமாற்றுகிறார்கள்.! என்பதை தன்னுடைய நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு நிகழ்வுகளைச் செய்து காட்டி காண்பவர்கள் வியக்கும் வண்ணமாக கத்தியை வாய்க்குள் செலுத்துவதும், சாதாரண குவளையில் பால் வர வைப்பதும் எழுதாத சிலேட்டில் எழுதிக் காண்பிப்பதும் போன்ற நிகழ்வுகளைச் செய்து காண்பித்து ஆசிரியர்களை ஆச்சரியப்படச் செய்தார். அவருக்கு பெண் ஆசிரியர் வா.அறிவுமணி அவர்கள் பயனாடை அணிவித்தும் நூல்கள் வழங்கியும் சிறப்பு செய்தார்.
அமர்வு 5: அறிவியல் பார்வை எது?
கருத்தாளர்:மஞ்சை வசந்தன்
எழுத்தாளர் மஞ்சை வசந்தன் அனுமானம் எது.? பரிணாமம் எது.? படைப்பு எது.? இயற்கை எது.? சூழ்நிலைகள் எது.? வாய்ப்புகள் எது.? இதிலிருந்து கடவுளை இருக்கிறாரா .? இல்லையா.? என்கிற அறிவியல் நிலைக்கு வருவது எவ்வாறு என்கிற தகவல்களையும் உயிரினங்களின் தோற்றம், ஆற்றல் ஆகியவை குறித்தும், இயற்கையை கடவுள் என்று அழைக்கக்கூடாது ஏன்.? என்பதற்கான, விளக்கத்தையும் அழகாக எடுத்துக் கூறினார். இது பயிற்சி வகுப்பா.?அல்லது அறிவியல் ஆய்வகமா.? என்று சந்தேகப்படும் அளவிற்கு மெழுகுவர்த்தி வைத்து உயிர் உருவாவதைப் பற்றியும், இறந்தவுடன் உயிர் எங்கும் செல்லாது என்பதையும் மெழுகுவர்த்தி செய்முறைகளின் மூலம் செய்து காட்டி ஆசிரியர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் .கோழி முந்தியதா.? முட்டை முந்தியதா.? என்கிற வினாவிற்கு விடை அளித்தும், பஞ்சபூதங்களைப் பற்றிய விளக்கத்தைப் புரியும்படி ஆழமான வகுப்பாக மிகவும் அருமையாக சென்றது. மஞ்சை வசந்தன் அவர்களுக்கு ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் தமிழ்த் துறை இணைப் பேராசிரியர் முனைவர் மு.முருகேசன் பயனாடை அணிவித்தும் புத்தகம் வழங்கியும் சிறப்பு செய்தார்.
அமர்வு.6 : அறிவியலும் ஆசிரியர்களும்
கருத்தாளர் : எழுத்தாளர்.வே.மதிமாறன்
இந்தியச் சமுதாயம் அறிவியலுக்கு எதிராக எவ்வாறு இருந்தது.! என்பதைப் பற்றியும் புராண கதைகளில் உள்ள பொய்களையும், புராண காலத்தில் கல்வி கற்பித்தலில் உள்ள ஏற்ற தாழ்வுகளையும் ராமாயணம், மகாபாரதம் போன்றவைகள் எவ்வாறு மக்களை அறியாமையில் ஆழ்த்தியது என்றும் ஜோதிராவ் பூலே அவர்களும் அவர் மனைவி சாவித்திரிபாய் பூலே அவர்களும் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விக்காக ஆற்றிய பணிகள் பற்றியும் ஆசிரியர் நாளில் கொண்டாடப்பட வேண்டியவர் முதல் பெண் ஆசிரியையான சாவித்திரிபாய் பூலே அவர்களே அதற்கு தகுதியானவர் என்கின்ற அவர் ஆய்வு சார்ந்த கருத்தையும், இங்கு துரோணாச்சாரியார் போன்ற ஆசிரியர்கள் தேவையில்லை என்றும் படிக்க முடியாத குடும்ப சூழ்நிலை காரணமாகவும் வசதி வாய்ப்புகள் காரணமாகவும் கல்வியை தொடர இயலாமல் இருக்கிற குழந்தைகள் அனைவரும் அரசுப் பள்ளியில் தஞ்சம் அடைந்திருக்கின்றனர். அவர்களுக்கு ஆசிரியராக தாங்கள் அறச்சிந்தனையோடு அரவணைத்து பாடம் கற்பிக்க வேண்டும். என்கிற தகவல்களை உணர்ச்சியோடு எடுத்து கூறினார். அவ்வாறு நடைபெறும் பொழுது இங்கே ஏகலைவன்கள் ஏவுகணைகளை ஏவக்கூடியவர்களாக மாறுவார்கள் என்றும் அந்த பொறுப்பும்,கடமை உணர்ச்சியும் அதிகம் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு உண்டு. ஆகவே அந்த உணர்வோடு வந்திருக்கிற உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன் என்றார். இறுதி வகுப்பு நேரம் சென்றதே தெரியாமல் செவிக்கு விருந்தளித்தார். எழுத்தாளர் மதிமாறன் பெண் ஆசிரியரான சாவித்திரிபாய் பூலே அவர்களின் தொண்டினை சிறப்பித்து பேசியதால் அவருக்கு பெண் ஆசிரியர்கள் மதிவதனி, ராதா, அம்பிகா, அறிவுமணி, ராகினி, ரேணுகா ஆகியோர் பயனாடை அணிவித்தும் நூல்கள் வழங்கியும் சிறப்பு செய்தனர்.
இந்நிகழ்வில் மொத்தம் 95 பேர் பயிற்சியாளர்களாக கலந்து கொண்டனர்.
1. ஆசிரியர்கள் = 70
2. தலைமை ஆசிரியர்கள் = 5
3. கல்லூரி பேராசிரியர்கள் = 10
4. கல்லூரி மாணவர்கள் = 8
6. மருத்துவர்கள் = 3
மொத்தம் =. 96 பேர் கலந்து கொண்டனர்.
இறுதியாக பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆசிரியர்களை பாராட்டியும், நிகழ்ச்சி ஏற்பாடு செய்த ஆத்தூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்களை ஊக்குவித்தும் ஆசிரியர்களுக்கான இது போன்ற அறிவியல் மனப்பான்மை பயிற்சிகள் தமிழ்நாடு முழுவதும் நடத்த வேண்டும் என்றும் அதற்கான முயற்சியை பகுத்தறிவாளர் கழகம் முன்னெடுக்கும் என்று நிறைவுரையாற்றினார்.
பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்ட ஆசிரிய பெருமக்களுக்கு பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில தலைவர் இரா.தமிழ்ச்செல்வனும், பகுத்தறிவு கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் வி.மோகனும், திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியாரும், எழுத்தாளர் வே.மதிமாறனும், பாராட்டுச் சான்றிதழ்களும், பெரியாரும் அறிவியலும் மற்றும் சிந்தனையும் பகுத்தறிவும் என்கிற இரண்டு நூல்களும் ஆசிரியர்களுக்கு சிறப்புப் பரிசாக வழங்கினார்கள்.
பயிற்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களிடமிருந்தும் பின்னூட்டம் எழுத்து வடிவமாக வாங்கப்பட்டது. அதில் அனைத்து கருத்தாளர்களும் பகுத்தறிவாளர் கழகம் சிறப்பாக பயிற்சி வழங்கியதாகவும், இது புதுமையான முயற்சியாகவும், எழுச்சியான வகுப்பாகவும், புரிதலை விரிவாக்கியதாகவும் இருந்தது என்றும் இது போன்ற நிகழ்வுகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் உணர்வுப்பூர்வமாக அதில் தெரிவித்திருந்தனர்.
நிகழ்ச்சியின் நிறைவாக ஆத்தூர் பகுத்தறிவாளர் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் பழனிவேல் பிச்சமுத்து அவர்கள் கருத்துரையோடு அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக நன்றியுரை ஆற்றினார்.நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
தொகுப்பு: இரா. மாயக்கண்ணன்
மாநில அமைப்பாளர், (ஆத்தூர்,சேலம், மேட்டூர்) பகுத்தறிவாளர் கழகம்.