வி.சி.வில்வம்
பெரியார்செல்வி
திராவிடர் கழகத்தில் அழகிய தமிழ்ப் பெயர்கள் நிறைய இருக்கின்றன. தவிர காரணப் பெயர்கள், தத்துவத் தலைவர்கள் பெயர்கள், நாட்டின் பெயர்கள் என வியப்பூட்டும் பெயர்ப் பட்டியல் சற்று நீளமானது. அதிலும் பெண்களுக்கான பெயர்கள் சமூகத்தில் அதிர்வலைகளையே ஏற்படுத்தி இருக்கிறது.
உதாரணமாக ரஷ்யா, இங்கர்சால், தமிழீழம், கியூபா போன்ற பெயர்கள்! “தமிழ்நாட்டின் பெயர்ப் புரட்சி” என்கிற தலைப்பில் ஒரு ஆய்வே செய்யலாம். அதேபோல”தமிழ்நாடு” என்கிற பெயரிலும் ஒரு தோழர் இருக்கிறார். அந்த வகையில் “பெரியார் செல்வி” என்கிற பெயரோடு இயக்கத்தில் வலம் வரும் தோழரை, இந்த வார மகளிர் பேட்டிக்காக சந்திக்க இருக்கிறோம்!
வணக்கம் தோழர்! உங்கள் பெயரே வித்தியாசமாக இருக்கிறதே?
ஆமாம்! பெரியார் செல்வன்கள் நிறைய இருக்கிறார்கள். பெரியார் செல்விகள் குறைவுதான்!
நிர்த்தனமங்கலம் பகுதிக்கு வந்த பெரியாரிடம், எனக்குப் பெயர் வைக்கச் சொல்லி என் தந்தை கூறியிருக்கிறார். அதில் பெரியார் எனும் பெயர் வருவது போல இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால். பெரியார் ஒப்புக் கொள்ளவில்லையாம்! இந்நிலையில் என் தந்தையே “பெரியார் செல்வி” என வைத்துக் கொள்கிறேன் என்று கூறினாராம்.
இந்தப் பெயரால் ஏற்பட்ட விளைவுகள் ஏதாவது இருக்கிறதா?
ஏராளம் இருக்கிறது! “பெயர் என்பது பெயரல்ல; அது இனத்தின் அடையாளம்”, என்பார்கள். நம் பெயரே நாம் யாரென்பதைக் கூறிவிடும். இதனால் ஏற்பட்ட மதிப்பும் இழப்பும் அதிகம்! 2008ஆம் ஆண்டு நான் அமெரிக்கா செல்ல முயற்சி செய்தேன். அனைத்து நிலைகளிலும் தேர்ச்சி பெற்றுவிட்டேன். இறுதியாக ஆங்கில மொழிக்கு (IELTS) நேர்காணல் ஒன்று நடந்தது. (அதைச் செய்தவர் ஒரு பார்ப்பன அம்மையார்).
என் பெயரைக் கேட்டவுடனே முகம் சுருங்கி விட்டது. நீங்கள் மிகவும் அறிந்த இரண்டு தலைவர்கள் குறித்துச் சொல்லுங்கள் என்றார். எனக்கு நன்கு தெரிந்த பெரியார், கலைஞர் குறித்துப் பேசினேன். எனது மொழி உச்சரிப்புப் பிழையில்லாமலும், சரியாகவும் அமைந்துவிட்டது. ஆனால். நான் தேர்ந்தெடுத்தத் தலைவர்கள் அவரை கோபம் கொள்ளச் செய்துவிட்டது. விளைவு, தனிப்பட்ட வெறுப்பின் அடிப்படையில் அரை மதிப்பெண்கள் குறைத்துவிட்டார். அதைவிடக் கொடுமை ஒன்றும் நடந்தது. தனது தாலியை (பார்ப்பனப் பெண்கள் அணியும் இரட்டைத் தாலி) வெளியே எடுத்துப் போட்டு, அதிலிருந்து ஒரு ஊக்கை எடுத்து, பல்லைக் குத்திக் கொண்டே என்னை ஏளனமாகப் பார்த்தார். அப்போதே முடிவு செய்துவிட்டேன் வாய்ப்பு அமையாது என்று!
அதேநேரத்தில் சென்னை மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்.சி, நர்சிங் படிக்க விண்ணப்பம் செய்திருந்தேன். நேர்காணல் முடித்து, வெளியே வந்த போது அங்கிருந்த டி.எம்.இ. (Director of Medical Education) ஜெயச்சந்திரன் அவர்கள், “உனது பெயர் என்னம்மா?”, என்று கேட்டார். பெரியார் செல்வி என்றேன். உடனே இருக்கையில் இருந்து எழுந்து, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். நான் இந்தப் பதவியில் இருப்பதற்குப் பெரியார் தான் காரணம் எனத் தம் நன்றியை வெளிப்படுத்தினார். ஆக பெயரால் கூடுதல், குறைவு ஏற்பட்டாலும், கொள்கையாளர்களின் வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது!
உங்கள் பெற்றோர் குறித்துக் கூறுங்கள்?
அப்பா பெயர் வீ.கே.ராமு, அம்மா பெயர் வீ.கே.ஆர்.தனம். 1960ஆம் ஆண்டில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள். அழைப்பிதழில் இரண்டு பேரின் ஜாதியையும் குறிப்பிட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியவர்கள்.
திருமணத்திற்குப் பிறகு அம்மாவின் ஊரான “செருநல்லூர்” கிராமத்திலேயே அப்பா வசித்தார்கள். இது ஒருங்கிணைக்கப்பட்ட கீழத் தஞ்சை மாவட்டமாக இருந்து, இப்போது நாகை மாவட்டத்தில் உள்ளது.
அப்பா சிறந்த பாடகர். என்.எஸ்.கிருஷ்ணன் குழுவில் இருந்தவர். பெரியார் கூட்டங்களுக்கு முன்னும், பின்னும் நடைபெறும் நாடகங்களிலும் நடித்தவர். இறுதிக் காலத்தில் புற்றுநோயால் பாதிக்கப் பட்டு, பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள்.
அப்போதுதான் பெரியாரின் நூற்றாண்டு விழா 1978இல் தொடங்கியது. அதுசமயம் ஜிப்மர் மருத்துவமனையில் எழுதிக் கொடுத்து விட்டு, நூற்றாண்டு கலை நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க சென்னை சென்றுவிட்டார். அந்தளவு தீவிரமான இயக்கச் செயற்பாட்டாளர்!
அதுமட்டுமின்றி சட்ட எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்று, வேலூர் சிறையில் 9 மாதங்கள் இருந்தார். “சட்டத்தை எரிப்பது மட்டும் போதாது; தோழர்கள் அனைவரும் ஜாதி மறுப்புத் திருமணம் செய்ய வேண்டும்”, எனப் பெரியார் கேட்டுக் கொண்டதற்கிணங்க அப்பா ஜாதி மறுப்புத் திருமணம் செய்தார்.
உங்களின் தந்தையே இவ்வளவு தீவிரமாக இருந்துள்ள போது, உங்கள் அடிப்படையும் சிறப்பாக இருந்திருக்குமே?
ஆமாம்! நான் பிறந்தது 1964ஆம் ஆண்டு. இப்போது 60 வயதாகிறது.
10ஆம் வகுப்பு வரை துருக்கத்தி கிராமத்தில் படித்தேன். என்னுடைய 15ஆவது வயதில் எனது தந்தை மறைந்துவிட்டார். மேல்நிலை வகுப்பைத் திருச்சி பெரியார் மணியம்மை மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். பிறகு கோவை மருத்துவக் கல்லூரியில் “டிப்ளமோ நர்சிங்” முடித்தேன். எனது கல்வியில் தொய்வு ஏற்படாமல் இருந்ததற்கு முழுக் காரணமும் ஆசிரியர் அவர்களே! ஆசிரியரின் ஆலோசனையும், வழிகாட்டுதலும் இல்லாமல் போயிருந்தால், இந்த வாழ்க்கை எனக்குச் சொந்தமானது அல்ல! அதனால்தான் “என்னை உருவாக்கிய தந்தை ஆசிரியர்!” எனக் கூறுகிறேன். இதன் விளைவாகவே எனது சகோதரர்களையும் நல்ல நிலைக்குக் கொண்டு வர முடிந்தது.
“டிப்ளமோ நர்சிங்” முடித்த பிறகு பெரியார் திடல் மருத்துவமனையில் பணியில் சேர்ந்தேன். அங்கு இரண்டு ஆண்டுகள் இருந்த நிலையில், 1987ஆம் ஆண்டு அறந்தாங்கியில் அரசுப் பணி கிடைத்தது. தொடர்ந்து சென்னை மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங், எம்.எஸ்.சி. நர்சிங் முடித்தேன். பணி நிமித்தமாகத் தமிழ்நாட்டின் பல ஊர்களுக்கும் சென்றுள்ளேன். பின்னர் நர்சிங் கல்லூரியில் விரிவுரை யாளராக உயர்ந்தேன். நிறைவாக தேனி அரசு நர்சிங் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி 2023ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றேன். சிறந்த செவிலியர் விருது 3 முறையும், சிறந்த செவிலியர் ஆசிரியர் விருது 3 முறையும் பெற்றுள்ளேன்!
உங்களது இயக்கச் செயல்பாடுகள் குறித்துக் கூறுங்கள்?
எங்கள் அம்மாவும் இயக்கத்தில் குறிப்பிடத்தகுந்த பங்கு வகித்தவர். என் சகோதரர்கள் வீ.கே.ஆர்.ரசல், வீ.கே.ஆர்.பெர்னாட்சா, வீ.கே.ஆர்.ரூசோ மூவரும் கொள்கையில் தொடர்ந்து இருக்கிறார்கள். எனக்கு 1993இல் ஆசிரியர் தலைமையில், திருவாரூரில் சுய மரியாதைத் திருமணம் நடைபெற்றது. பெரியார் திடல் மருத்துவமனையில் பணி செய்த போது காமராஜர் அவர்களுடன் காதல் ஏற்பட்டு அத்திருமணம் முடிந்தது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியில் இருந்தபோது, அங்குள்ள கழகத் தோழர்களுடன் இணைந்து கூட்டங்களில் பங்கு பெறுவேன். ஆசிரியர் கூட்டங்களுக்கும் செல்வேன். 1986ஆம் ஆண்டு, திண்டுக்கல்லில் மகளிர் மாநாடு நடைபெற்றது. கதை, பாடல்கள் எழுதி திருமகள், பார்வதி, அன்புமதி, அருள்மதி, இறைவி உள்ளிட்ட பலர் நடித்தோம். நாடகத்தின் பெயர் “மாறியது நெஞ்சம்”. இதுதவிர இயக்கப் பட்டிமன்றத்தில் பேசியிருக்கிறேன். நிகழ்ச் சித் தொகுப்பு மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளும் செய்துள்ளேன். கழக மருத்துவர் அணியில் இருக்கி றேன்.
எங்களுக்கு ஒரே மகன். பெயர் இளவல். கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் வைத்தது. கலைஞர் அவர்கள் ஆசிரியரை “ஆருயிர் இளவல்” என்று அழைப்பார். அதில் உள்ள இளவல் என்பதைத்தான் கவிஞர் பெயராக வைத்தார். செருநல்லூர் கிராமத்தில், எங்கள் வீட்டு வாசலிலேயே பெரியார் சிலை ஒன்று வைத்துள்ளோம். அதை ஆசிரியர் அவர்கள் தான் திறந்து வைத்தார்கள்.
இயக்கம், ஆசிரியர் குறித்த உங்கள் பார்வை என்ன?
நான் சிறு வயது முதலே இயக்கத்தில் இருக்கிறேன். ஆசிரியர் தலைமையையும் தொடர்ந்து பார்த்து வருகிறேன். கழகத்தில் நிறைய அணிகள் வந்துவிட்டன. மகளிரணியில் இருந்து, மகளிர் பாசறை வந்து, அதுவும் சிறப்பாகச் செயல்படுகிறது. டில்லியில் பெரியார் மய்யத் தொடக்கம், இந்திய மாநிலங்கள் முழுவதும் சமூகநீதியைக் கொண்டு போய் சேர்த்தது, பாட்னா மாநாடு, பார்ப்பன அம்மையாரைப் பயன்படுத்தி 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை உறுதி செய்தது, அதற்கு முன்னர் 9 ஆயிரம் வருமான உச்ச வரம்பை நீக்கியது என ஆசிரியரின் வரலாற்றுச் சாதனைகள் மிகப் பெரியது!
அதேபோல கல்வி நிறுவன வளர்ச்சியும் உச்சத்தைத் தொட்டுள்ளது. தமிழ் வழி மட்டுமே இருந்த நிலையில், ஆங்கில வழி தோன்றி பள்ளிகள், மருந்தியல் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, பல்கலைக் கழகம் என வானளாவ உயர்ந்து நிற்கிறது! நம் நிறுவனத்தில் படித்த பிள்ளைகள் உலகம் முழுவதும் கோலோச்சி வருகின்றனர்! அதேபோல நமது நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் படித்தவர்களும் “சுயமரி யாதை வாழ்வை” அனுபவித்து வருகின்றனர்.
அரசியல் என்று பார்த்தால், ஆட்சி மாற்றங்களுக்கு ஆசிரியரின் தமிழ்நாடு தழுவிய பிரச்சாரங்கள் மிக முக்கியமானவை! பெரியார் நூல்களைத் தேடிப் படிக்கும் இளைஞர்கள் கூட்டம் அதிகரித்து வரு கிறது. ஆசிரியர் அவர்களும் எண்ணற்ற நூல்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்கள். பிற மொழிகளில் இருந்தும் வருகிறது. நமது பெரியார் தொலைக்காட்சியின் பங்கும் சிறப்பானதாக இருக் கிறது. வளரும் இளம் தலைமுறைகளுக்கு இந்தக் காணொளிகள் தான் நல்ல விழிப்புணர்வைக் கொடுக்கின்றன.
“பெரியார் உலகமயமாகிறார்” என்பதற்கேற்ப ஆசிரியர் அவர்கள் புதுப்புதுத் திட்டங்களை மாற்றிக் கொண்டே வருகிறார். திருச்சி சிறுகனூரில் உதயமாகும் பெரியார் உலகம், இந்தாண்டு ஜப்பானில் கொண்டாடப்பட்ட பெரியார் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் எனச் சொல்லிக் கொண்டே போகலாம். எனவே ஆசிரியர் தலைமையில் இந்த இயக்கம் உயிர்ப்போடு இருக்கிறது. நாங்கள் ஒடுக்கப்படுகிறோம் என்று பார்ப்பனர்கள் கதறும் நிலைக்கு வந்து நிற்கிறது”, என அழகுற தம் கருத்துகளைப் பதிவு செய்தார் தோழர் பெரியார்செல்வி அவர்கள்!