பாணன்
தமிழ்நாட்டின் சமூகநீதிக்களத்தில் இயங்கும் தலைமை இயக்கம் திராவிடர் இயக்கம். தந்தை பெரியார் அவர்களால் 1944ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திராவிடர் கழகம் சமூக நீதிக்கான இயக்கமாக தமிழ்நாட்டில் வளர்ந்துள்ளது.
பெரியாரின் மறைவிற்குப் பிறகு திராவிடர் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்று ஆசிரியர் வீரமணி அவர்கள் செயல்பட்டு வருகிறார். சமூகநீதிக்களத்தில் சோதனைகள் பல தாங்கி சோர்விலாமல் இத்தனை ஆண்டுகளாக இயங்கி வருவது பெரும் சாதனை!
1992 நவம்பர் மாதம் 16 ஆம் தேதி உச்சநீதி மன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியது. மண்டல் ஆணையப் பரிந்துரையை இந்திய அரசு ஏற்றுக்கொண்டு ஒன்றிய அரசு நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற பிரதமர் வி.பி.சிங் அவர்களின் அறிவிப்பை எதிர்த்து இந்திரா சஹானி என்பவர் தொடுத்த வழக்கில் ஒன்பது நீதிபதிகள் சேர்ந்த அரசியல்சாசன அமர்வு தான் (Constitutional Bench) அந்தத் தீர்ப்பை வழங்கியது.
அத்தீர்ப்பில் , பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது அரசின் கொள்கை முடிவென்று ஏற்றுக்கொண்டது உச்சநீதிமன்றம். .ஆனால், மொத்த இட ஒதுக்கீடும் 50 சதவீதத்துக்கு மேல் தாண்டக்கூடாது என்றும் தீர்ப்பு வழங்கியது. 50 சதவீத தடையை தனது சட்ட அறிவால், சமுதாயப் பணி கொடுத்த பட்டறிவால் உடைத்துத் தனிச்சட்டம் உருவாக்கிக் கொடுத்து அதனை குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் அரசியல்சாசனத்தின் 9 ஆவது அட்டவணையில் சேர்த்தது ஆசிரியரின் தனிப்பெரும் சாதனையாகும்.
சமூகநீதிக்கு எதிரான கொள்கை கொண்ட இயக்கத்தின் பின்புலம் பெற்றிருக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு மக்கள் விரோத திட்டங்களையும் தெளிவாக உணர்ந்துகொண்டு அந்தத் திட்டங்களின் பாதிப்பினை முன்கூட்டியே எச்சரிக்கும் ஆசிரியரின் அறிக்கை தமிழ்நாடு பாஜக சார்ந்த அரசியல் கட்சியினரே அச்சப்படும் அளவிற்குச் செறிவுள்ளதாக அமைந்துள்ளது.
தமிழ்மக்களை குலத்தொழிலில் தள்ளிவிட்டு அவர்களை அடிமைகளாகவே வைத்திருக்கும் சூழ்ச்சியோடு கொண்டுவரப்பட்ட குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்த இந்த எதிர்ப்பின் வெப்பம் தாங்காமல் ஆட்சியை விட்டே ஓடியவர் ராஜாஜி.
24.06.1952ஆம் ஆண்டு சலவைத் தொழிலாளர் மாநாட்டில் ராஜகோபாலாச்சாரி பேசுகிறார். “சலவைத் தொழிலாளர் பிள்ளைகள் படித்துவிட்டால் சலவைத் தொழிலை யார் செய்வார்கள்?” என்றார்.
அதன் பிறகு 29.03.1953ஆம் ஆண்டு சென்னை சட்டமன்றத்தில், “தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் படிக்கும் கால அளவை நாளொன்றுக்கு மூன்று மணி நேரமாகக் குறைப்பது என்றும், அந்நேரத்தில் குழந்தைகளின் பெற்றோர் செய்யும் தொழில் களைக் கற்றுக் கொள்ள வசதி செய்து கொடுக்கவும் சர்க்கார் தீவிரமாக ஆலோசித்து வருகின்றது” என்று கூறினார்
இதனை அடுத்து. ‘விடுதலை’ ஏட்டில் 31.03.1953 “சிறுவர் கல்வியைப் பாழாக்கும் புதிய திட்டம்! உஷார்” என்று தந்தை பெரியார் தலையங்கம் தீட்டினார். தந்தை பெரியார் எச்சரித்த படியே 1954 ஆம் ஆண்டுமுதல் குலக்கல்வித் திட்டம் குறித்த அறிவிப்பு வந்தது.
ஏற்கெனவே இந்த அறிவிப்பு வரும் என்று எச்சரித்து மக்களைத் தயார்படுத்தி வைத்திருந்தார் தந்தை பெரியார். அதன் பிறகு தொடங்கிய போராட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் ராஜகோபாலாச்சாரியார் 212.03.1954 அன்று பதவிவிலகி ஓட்டம் பிடித்தார்.
17.12.2023ஆம் ஆண்டு விஸ்வகர்மா திட்டம் அமலுக்கு வந்தது, ஆனால் இது குறித்து 2023 ஆம அண்டு ஜூலையிலேயே ஒன்றிய அரசு விளம்பரம் செய்யத்துவங்கி விட்டது. 15.08.2023 பிரதமர் இந்த திட்டம் குறித்து அறிவிக்கிறார்
உடனடியாக இந்தியாவிலேயே முதல்முறையாக இந்த திட்டத்தின் அபாயத்தை எடுத்துக்கூற ஆசிரியரின் கூர்முனை வாளான பேனா தனது பணியைத் துவங்கியது. 19.08.2023 அன்று அறிக்கை ஒன்றை வெளியிடுகிறார்.
“செருப்பு தைப்பவர் மகன் செருப்பு தைக்கத்தான் வேண்டுமா? . அன்று ஆச்சாரியார் (ராஜாஜி) கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை விரட்டியடித்ததுபோல் இதையும் விரட்டியடிப்போம்!. அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து களம் அமைப்போம். ‘திராவிட மாடல்’ அரசு கடுமையாக எதிர்க்கும் – எதிர்க்கவேண்டும்” என்று அவர் முரசறைந்தார்.
ஒன்றிய அரசின் விஸ்வ கர்மா யோஜனா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் (29-8-2023) நடைபெற்றது.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஆசிரியர் கி.வீரமணி, “விஸ்வகர்மா யோஜனா திட்டம்” என்ற பெயரில் மீண்டும் ஆர்.எஸ்.எஸ். கொள்கையாக இருக்கக்கூடிய வர்ணாசிரம தர்மத்தை நோக்கி அனைவரும் வர வேண்டும் என்ற நோக்கில் குலக்கல்வித் திட்டத்தை கொண்டு வர ஒன்றிய பாஜக அரசு முயற்சி செய்வதாகவும், விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை கைவிட வேண்டுமெனவும், விஸ்வகர்மா யோஜானா திட்டம் 18 வயது நிறைந்துள்ளவர்களை கல்லூரிக்குச் செல்ல விடாமல், பரம்பரை ஜாதித் தொழிலையே செய்யத் தூண்டும் குலத்தொழிலை மேலோங்கச் செய்யும் திட்டமிட்ட சூழ்ச்சியாகும். விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை கைவிட வலியுறுத்தி சென்னையில் 6.9.2023 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று அறிவிப்புச் செய்தார்.
அறிவித்தது போன்றே தமிழ்நாட்டிம் சமூகநீதிக் களத்தில் உள்ள அனைத்து தலைவர்களும் ஒன்றிணைந்து போராட்டம் (06.09.2023) நடைபெற்றது. தொடர் போராட்டத்தின் விளைவாக சமூக நீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் 27.11.2024 ‘விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது’ என்று திட்டவட்டமாக அறிவித்தார்.
பார்ப்பனர்களுக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உயர்ஜாதி எளியவர்களுக்கு என்ற முகமூடி அணிந்து நிறைவேற்றிய போது அதிமுக ஆட்சியில் இருந்தது. எடப்பாடி தலைமையிலான ஆட்சி ஒன்றிய பாஜக வின் கைப்பாவையாக செயல்பட்டது.
அப்படி செயல்பட்ட நிலையிலும் தமிழ்நாட்டில் பொருளாதாரத்தில் நலிந்த உயர்ஜாதிப் பிரிவினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை கொண்டுவர முடியவில்லை. நாடாளுமன்றத்தில் அத்திட்டத்தை நிறைவேற்றிய உடனேயே 12 மாநிலங்கள் அதை நடைமுறைக்கு கொண்டுவந்தன.
ஆனால், தமிழ்நாட்டின் அன்றைய ஆட்சிக் கட்டிலில் பாஜகவின் கைப்பாவையாக இருந்த அதிமுக அரசு பெரியார் திடலில் அறிவாயுதம் ஏந்தி நிற்கும் ஆசிரியரின் பேனாமுனைக்கு அஞ்சி தமிழ்நாட்டில் அதனை நடைமுறைப்படுத்த முடியவில்லை.
திராவிடச்சமூகத்தின் அடிப்படை உரிமைக்களமான சமூக நீதிக்களத்திற்கு பாதிப்பு வரப்போகிறது என்று முன்கூட்டியே தெரிந்து உடனடியாக களத்தில் இறங்கி மக்களை அரணாக நின்று காக்கும் ஆசிரியருக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்!