பெரியாரைப் பேணி தமராகக் கொண்டவர்
பள்ளிப் பருவத்தில் திராவிட இயக்கத்தில் இணைந்த இளையர்
10 வயதில் திராவிடர் கழக மாநாட்டில்
ஆகச் சிறந்த உரை ஆற்றியவர்
உரைக் கேட்ட பேருரையாளர்
பேரறிஞர் அண்ணா
திராவிட இயக்கத்தின் அறிவுக்கொழுந்தே !
ஞானசம்பந்தரே என்று அழைத்தார்
கல்வியைக் கசடறக் கற்று
பெரியார் பின் நின்று
அண்ணாமலை பல்கலைக்கழகம் இணைந்து
பொருளாதார முதுகலைப் படிப்பில்
உச்சம் தொட்டுத் தங்கம் வென்றவர்
சட்டம் பயின்றவர்
வழக்கறிஞராக ஆனவர்
“செய்வானை நாடி வினைநாடி காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்”
என்ற வள்ளுவப் பெரியாரின்
கருத்தியலைப் போற்றிய
தந்தை பெரியார்
வீரமணியாரைப்
பொது வாழ்விற்கு அழைத்தார்
விடுதலை ஆசிரியராகவும் ஆக்கினார் !
வழக்கறிஞர் வருமானம்
துறந்தவர்!
செல்வம் பற்றி கவலை கொள்ளாதவர்!
அறிவுச் செல்வத்தையே
தேடுகிறவர்.
தடம் புரளாத் தடந்தோள் வீரர்
பெரியார் மறைவுக்குப் பின்
அம்மா மணியம்மையாரின்
தலைமையை ஏற்றவர்
அன்று தொடங்கிய அயராத பணிகள்
இன்றும் எழுச்சியோடு தொடர்கிறது!
ஊடகத்துறையின் வித்தகர்
‘விடுதலை’ நாளேட்டில் 62 ஆண்டுகள் பணி முடித்தவர்
சிறை செல்ல அஞ்சாதவர்
ஓராண்டு மிசா கொடுமை கண்டவர்!
பெருந்தலைவர் காமராசர்
பேரறிஞர் அண்ணா
கலைஞர் ஆட்சிக் காலங்களில்
நிறைவேறிய சட்டங்கள்
திட்டங்களை அறிந்தவர்
சீர்மிகு சமூக நீதியை உயர்த்த
தந்தை பெரியாரின் தூதராக
ஆட்சியாளர்களிடம் சென்று கவனத்தை ஈர்த்தவர்
ஜெயலலிதா ஆட்சியிலும்
69 விழுக்காடு இட ஒதுக்கீடு
அரசமைப்புச் சட்டப் பாதுகாப்போடு அட்டவணையில் இடம் பெறச் செய்த செயற்கரிய செயலை நிகழ்த்தியவர்.
இன்றோ திராவிடச் செம்மல்
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஆட்சியின் பாதுகாவலர்!
நூலாருள் நூல்வல்லர்
அறிவுஉரு ஆராய்ந்த கல்வி
இம்மூன்றிலும் செறிவுடையவர்
பகுத்தறிவு களஞ்சியம்
அறிவு பெட்டகம்
நாடு நலம் பெற
ஒடுக்கப்பட்டோர் உயர்வு கொள்ளப்
பட்டி, தொட்டி, ஊர், பேரூர்
நகரம் நாடுகள் என வலம் வந்து
உரைகள் ஆற்றி வருகிறவர்
அறிவுசால் கட்டுரைகளை
எழுதிக் குவிப்பவர்
எண்ணற்ற கல்விப் பணிகளைச்
சிறப்புற மேலாண்மை செய்பவர்
புன்முறுவல் பூக்க
அறிஞர்கள், நண்பர்கள்
இயக்கச் செயல்வீரர்கள் அனைவரையும் அணைப்பவர்!
சாதனைகள் மேல்
சாதனைகள் படைப்பவர்
இவர் தான் எங்கள் ஆசிரியர்
வீரமணியார்!
92 அகவை
திருப்பிப் பார்த்தால்
29 வயது இளமை
ஆற்றலின் ஆளுமை
இவர் தான் எங்கள் ஆசிரியர் வீரமணியார்!
அம்மா மோகனாவின்
அன்பு துணையோடு
தொண்டறம் தொடர்க!
சனாதனம் சாயட்டும்
சமத்துவம் மலரட்டும்
பெரியாரியல் வெல்லட்டும்
ஆசிரியர் வீரமணியார்
வாழ்க! வாழ்கவே
– பேராசிரியர்
மு.நாகநாதன்