தஞ்சை பெ.மருதவாணன்
திராவிடர் இயக்கத் தமிழ்ப் பெருமக்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆம் பிறந்த நாளை நன்றிப் பெருக்குடன் கொண்டாடி மகிழ்கிறார்கள். தனது பயனுறு வாழ்வில் 91 ஆண்டுகளை நிறைவு செய்து 92ஆம் ஆண்டில் கால் – பதிக்கும் ஆசிரியரின் பிறந்தநாள் (02.12.2024) ”சுயமரியாதை” நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. நூற்றாண்டு கண்ட சுயமரியாதை இயக்கத்தின் இன்றைய வரலாற்று நாயகராகவும் திராவிடர் இயக்கத்தின் தாய்க்கழகத் தலைவராகவும் விளங்கும் ஆசிரியர் அவர்கள் தோன்றிய டிசம்பர் 2 ஆம் நாள் “சுயமரியாதை நாள்” என்று கடைப்பிடிக்கப்படுவது பொருத்தமானது மட்டுமல்ல பெருமைக்குரியதுமாகும்.
சுயமரியாதை இயக்கத்தின் தோற்றத் தினைப்பற்றி ஆசிரியர் அவர்கள் ரத்தினச் சுருக்கமாகத் தான் எழுதி வரும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கட்டுரைத் தொடரில் இப்படிக் குறிப்பிடுகிறார். (‘விடுதலை’ 14.11.2024 பக்கம் 3)
“1925இல் ஈரோட்டில் ‘குடிஅரசு’ ஏட்டின் மூலம் சுயமரியாதை இயக்கக் கரு உருவாகி வளர்ந்தது – காஞ்சிபுரத்தில் அது பிறந்தது.” சுயமரியாதை இயக்கத்தின் தோற்றுனராகிய தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை என்னும் சொல்லின் பொருண்மைச் சிறப்பினைப் பின்வருமாறு கூறுகிறார்.
“இந்த உலகத்தில் உள்ள எல்லா அகராதிகளையும் கொண்டு வந்து போட்டு ஏடு ஏடாய்ப் புரட்டிப் பார்த்தாலும் அழகும் பொருளும் சக்தியும் நிறைந்த வார்த்தையாகிய சுயமரியாதை என்ற வார்த்தைக்கு மேலானதாகவோ ஈடானதாகவோ உள்ள வேறு ஒரு வார்த்தையை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.”
(‘குடிஅரசு’ 1.6.1930 விடுதலை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – (1925-2024 தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர். பக்கம் 1)
வியப்பூட்டும் விரிவான
காலக் கணக்கீடு
வாழ்நாளெல்லாம் “பெரியார் பணி செய்து கிடப்பதே என் பணி என்பதைத் தவிர வேறு பணி ஏதுமில்லை” என்று சூளுரைத்து நாளும் பணியாற்றி வரும் ஆசிரியர் அவர்கள் எண்பது ஆண்டுகளைத் தம் பெரியாரியப் பொது வாழ்வில் கழித்துள்ளார். தமது 91 ஆண்டுகால வாழ்வில் அவர் கடந்து வந்த காலத்தின் நீட்சியைக் கணக்கீட்டு அடிப்படையில் எண்ணிப் பார்த்தால் நாட்கணக்கில் 33237 நாட்களும் மாதக் கணக்கில் 1108 மாதங்களும் வாரக்கணக்கில் 4748 வாரங்களும் இதுவரை வாழ்ந்துள்ளது தெரியவரும். அதன்படியே மேலும் கணக்கிட்டுப் பார்த்தால் மணிக்கணக்கில் 7 லட்சத்து 97 ஆயிரத்து 688 மணிகளும் நிமிடக் கணக்கில் 4 கோடியே 78 லட்சத்து 61 ஆயிரத்து 280 நிமிடங்களும் வினாடிக் கணக்கில் 287 கோடியே 16 லட்சத்து 76 ஆயிரத்து 800 வினாடிகளும் அவர் வாழ்ந்துள்ளது தெரிய வரும் – நம்மை வியப்பில் ஆழ்த்தும்.
பெரு வழக்காய் நிலைத்துவிட்ட பயன்மொழிகள்
ஆசிரியரின் அறிவார்ந்த சிந்தனையில் உருவாகி பெருவழக்காக நிலைத்துவிட்ட கருத்தாழம் மிக்க சொற்கள் மற்றும் சொற்றொடர்களில் பொதிந்துள்ள பயன்பொழிகளில் ஒரு சிலவே இவை:-
அ) சொற்கள்
மானமிகு, மானமிகுவாளர்கள் தொண்டறம், வாழ்விணையர் அறிவாசான், ஒத்தறிவு (Empathy), இளைப்பாறுதல் (Relaxation)/
ஆ) சொற்றொடர்கள்
தமிழா இன உணர்வு கொள்.
தமிழா தமிழனாக இரு.
நம்மால் முடியாதது யாராலும் முடியாது
யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்!
(பொதுநல நோக்கில் இணையும் போது கவனிக்க வேண்டியது)
எது நம்மைப் பிரிக்கிறது என்று எண்ணாமல்,
எது நம்மைச் சேர்க்கிறது என்ற கண்ணோட்டம் தேவை!
பெரியார் விட்டுச்சென்ற பணிகளை
அவர்போட்டுத் தந்த பாதையில்
எவ்வித சபலத்துக்கும் ஆட்படாமல்
வென்று முடிப்போம்!
பழைமை என்பது உரம் ஆகலாம்
ஆனால் உணவு ஆக முடியாது!
துணிவு, தியாகம் சுயநலமின்மை
துணிவு, தியாகம், சுயநலமின்மை ஆகிய குணநலன்களின் கொள்கலமே நமது ஆசிரியர் என்பதைத் தந்தை பெரியார் அவர்கள் தமது மொழியில் இப்படிக் கூறுகிறார். “வீரமணி அவர்களது துணிவையும், தியாகத்தையும் சுயநல மற்ற தன்மையையும் கருதி விடுதலை, வீரமணி அவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.” (விடுதலை 6.6.1964) (‘விடுதலை’ தமிழர் தலைவர் ஆசிரியர் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர், பக்கம் 5)
எளிமை, தொண்டு மனப்பான்மை, பெரியார் ஆணை ஒன்றே பெரிதெனக் கருதுதல் ஆகிய சிறப்பியல்புகளைக் கொண்டவர் நமது ஆசிரியர் என்பதைப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தனது கவிதை வரிகளில் சுட்டிக் காட்டுகிறார்.
திருச்சியில் 7.12.1958 இல் நடை பெற்ற நமது ஆசிரியர் அவர்களின் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புரட்சிக் கவிஞர் அங்கேயே எழுதி வழங்கிய வாழ்த்துக் கவிதையில், ஆசிரியரின் குணநலன்கள் துல்லியமாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. அக்கவிதையில் காணப்படும் முதன்மையான சில வரிகளை இங்கு காண்போம்:-
1) இளமை வளமையை விரும்பும் என்பர்
இளமை எளிமையை விரும்பிய புதுமையை
வீரமணியிடம் நேரிற் கண்டுளேன்.
பாடிக்கை வீசிப் பலருடன் உலவி
வேடிக்கை பேசும் வாடிக்கை தன்னை
அவர் பாற் காண்கிலேன் அன்றும் இன்றும்.
2) உற்ற நோய் நோன்றல் ஊர்நலம் ஓம்பல்
நற்றவம் என்பர் தொண்டென நவில் வர்
தொண்டு மனப்பான்மை அந்தத் தூயவனைக்
கொண்டது குழந்தைப் பருவத்திலேயே!
3) தமிழன் அடிமை தவிர்ந்து குன்றென
நிமிர்தல் வேண்டும் என்றே நிகழ்த்தும்
பெரியார் ஆணை ஒன்றே பெரிதெனக்
கருதிய கருத்து வீரமணியை
வீண் செயல் எதிலும் வீழ்த்தவில்லை.
நூற்றாண்டை நோக்கி
நடைபோடும் பயணம்
“தொண்டு செய்து கனிந்த கனி தூய்மைத் தலைவர் வீரமணி” என்று அவர்தம் 92ஆவது பிறந்த நாளில் திராவிடத் தமிழினம் நன்றிப் பெருக்குடன் போற்றி மகிழ்வதை நம்மால் உணர முடிகிறது. நாமும் அவ்வண்ணமே ஆசிரியர் அவர்களை விளித்துப் போற்றுவோம்.
தமிழ்ச் சமுதாயத்திற்கு அடிமையாகப்
பணியாற்றுவேன் என்று சூளுரைத்த தலைவரே!
அய்யாவின் அடிச்சுவட்டில் அயராது
செயலாற்றும் ஆசிரியப் பெருந்தகையே!
அய்யாவின் நம்பிக்கையைக் காலமெல்லாம்
காத்து நிற்கும் காவலரே!
கருப்புடை தரித்த பகுத்தறிவாளர் எனும்
பொறுப்புடைத் தோழர்களின் ஈர்ப்பு நாயகரே!
அய்யாவின் தலைமுறையின் அடுத்த
தூணாக விளங்கும் அருந்திறலாளரே!
நடமாடும் திராவிட இயக்க வரலாறாக
ஒளிரும் அறிவுப் பெட்டகமே!
பெரியாரின் நீட்சியாகத் தோன்றிய
தத்துவ வழித் தோன்றலே!
வாழ்வை மீறிய சாதனையும் வயதை மீறிய
இளமையும் கொண்ட முதிய இளையவரே!
பெரியாரியக்கக் கருத்துக் கருவூலமே!
உயிர் நூலகமே!
நலிவுக்கு நலிவு செய்து நலம் பேணும்
நாத்திக நன்னெறியாளரே!
ஆரியம் அலறத் தாக்கும் சீரிய செம்மலே!
நூற்றாண்டை நோக்கி நடைபோடும்
நாவன்மை மிக்கவரே!
நூற்றாண்டைக் கடந்தும் உயிரனைய தங்கள்
பெரியாரியப் பணிதொடரட்டும்!
வாழ்க ஆசிரியர்!
வளர்க அவர் தொண்டறம்!