தோழர் வீரமணி தொண்டு
தோழர் வீரமணி அவர்கள், நான் உள்பட பலர் வேண்டுகோளுக்கும், விருப்பத்திற்கும் இணங்க, கழகத்திற்கு முழு நேரத் தொண்டராய் இருக்கத் துணிந்து, பத்திரிகைத் தொண்டையும் பிரச்சாரத் தொண்டையும் தன்னால் கூடிய அளவு ஏற்றுக் கொண்டு, தொண்டாற்ற ஒப்புக் கொண்டு, குடும்பத்துடன் சென்னைக்கே வந்துவிட்டார்.
இது நமது கழகத்திற்குக் கிடைக்க முடியாத ஒரு பெரும் நல்வாய்ப்பு என்றே கருதி,
திரு. வீரமணி அவர்களை மனதார வரவேற்பதோடு கழகத் தோழர்களுக்கும் இந்த நற்செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வீரமணி அவர்கள் வக்கீல் தொழிலில் ஈடுபட்ட சிறிது நாள்களுக்குள் மாதம் 1-க்கு ரூ.200, ரூ.300 என்கிற கணக்கில் வருமானமும், அதிகாரிகளின் பாராட்டுதலும் மதிப்பும் பெறத்தக்க நிலைமை அடைந்துவிட்டார்.
அவரது இயக்கம் சம்பந்தமில்லாத நண்பர்களும் வக்கீல் தோழர்களும் அவருக்கு எவ்வளவோ ஆசை ஏற்படும்படியான எதிர்காலத்தைப் பற்றிச் சொல்லித் தடுத்தும், அதை ஏற்காமல் துணிந்து முழு நேரப் பொதுத் தொண்டுக்கு இசைந்து முன்வந்தது குறித்து நான் அதிசயத்தோடு அவரைப் பாராட்டி வரவேற்கிறேன்.
மனைவி, குழந்தை, குட்டி இல்லாத வாலிபப் பருவத்தில் பொதுத்தொண்டு உற்சாகம் பலருக்கு ஏற்படுவது இயற்கை. ஆனால், மனைவி, குழந்தை, குடும்பப் பொறுப்பு, நல்ல எதிர்காலம், தொழில் ஆதரவு ஆகிய இவை உள்ள நிலையிலும், நாளைக்கும், இவர் (வீரமணி) ஒப்புக் கொள்வதானால் வி.கி.,ஙி.லி., என்பதனாலும் பரீட்சையில் உயர்ந்த மார்க்கு வாங்கி இருக்கும் தகுதியாலும்) மாதம் 1-க்கு ரூ.250க்கு குறையாத சம்பளமுள்ள, அரசாங்க அல்லது ஆசிரியப் பதவி அவருக்குக் காத்திருந்து ஆசை காட்டிக் கொண்டிருக்கும்போதும், அவைகளைப் பற்றிய கவலையில்லாமல், முழு நேரப் பொதுத் தொண்டில் இறங்குவதென்றால் இது இயற்கையில் எப்படிப்பட்ட மனிதரிடமும் எளிதில் எதிர்பார்க்க முடியாத விஷயமாகும்.
உண்மையைச் சொல்லுகிறேன். தோழர் வீரமணி இந்த முழு நேரத் தொண்டிற்கு இசையாதிருந்தால் தினசரி விடுதலையை நிறுத்தி வாரப் பத்திரிகையாக திருச்சியில் அல்லது ஈரோட்டில் நடத்த முடிவு செய்திருந்தேன். ‘விடுதலை’ 10.08.1962
***
தோழர் வீரமணியின் சேவை!
வீரமணி அவர்கள் எம்.ஏ.பி.எல். பட்டம் பெற்றவர். நல்ல கெட்டிக்காரத் தன்மையும் புத்தி கூர்மையும் உள்ளவர். அவர் எம்.ஏ.பி.எல். பாஸ் செய்து வக்கீல் தொழிலில் இறங்கியவுடன் மாதம் ரூ. 300, ரூ. 400 வரும்படி வரத்தக்க அளவுக்கு தொழில் வளர்ந்ததோடு கொஞ்ச காலத்திலேயேமாதம் ரூ. 500, 1000 என்பதான வரும்படி வரும் நிலையில் தொழில் வளம் பெற்றுவரும் நிலையைக் கண்டவர்.
இந்த நிலையில் அவர் ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் இருந்துவந்தவர். இந்த நிலையில் சுயநலமில்லாது எவ்வித பொருள் ஊதியத்தையும் கருதாமல் பொதுத் தொண்டு செய்ய ஒருவர் வந்தார் என்றால், இதுபோல மற்றொருவர், வந்தார் வருகிறார் வரக்கூடும் என்று உவமை சொல்லக்கூடாத ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்லவேண்டும்.
அப்படிப்பட்ட ஒருவரை நாம் தக்கபடி பயன்படுத்திக்கொள்ளாவிட்டால் அது நம்முடைய அறியாமையாகவே முடியும் என்ற எண்ணத்தின் மீதே அவரை நம் இயக்கத் தலைமைப் பிரசாரகராகவும், நமது விடுதலை ஆசிரியராகவும் பயன்படுத்திக் கொள்ள முன்வந்து அவருடைய ஏகபோக ஆதிக்கத்தில் விடுதலையை ஒப்படைத்து விட்டேன்.
விடுதலை பத்திரிகையை நிறுத்திவிடாததற்கு இதுதான் காரணம். இனி விடுதலைக்கு உண்மையான பிரசுரகர்த்தா வாகவும் ஆசிரியராகவும், வீரமணி அவர்கள்தான் இருந்துவருவார். – ஈ.வெ.ராமசாமி
(விடுதலை-07.06.1964)
***
கல்வி அறிவு, தொழில் ஆற்றல், பொறுப்புணர்வு உள்ளவர் வீரமணி!
நமது ஆசிரியர் வந்து 6 வருஷமாகிறது. ஆனால், நமது ஆபீசானது ஆரம்பித்து 20 வருடங்களுக்கு மேலாகவே நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
ஆசிரியர் பொறுப்பிலிருந்தவர்கள் ஏதோ சொந்தக் காரணங்களுக்காக விலகிச் சென்றார்களே தவிர, மற்றபடி இங்கு பணியிலிருந்தவர்கள் வயதான காரணத்தாலும், உடல்நலம் குன்றி வேலை செய்ய முடியாத நிலையில் போயிருக்கின்றார்கள். மேலான வாழ்வு கிடைத்துப் போயிருக்கிறார்களே தவிர, மற்றபடி நாம் யாரையும் போகச் சொல்லியோ அல்லது பிடிக்காமலோ போனவர்கள் கிடையாது.
***
இந்த நிறுவனம் லாபகரமான தொழிலல்ல. பொதுத் தொண்டில் இது ஒரு பகுதி என்பதைத் தவிர இதனால் மாதம் ஒன்றுக்கு ரூ.3,000க்கு குறையாமல் நஷ்டமாகிறது என்பது உங்களுக்கும் தெரியும். தாயை ஒளித்த சூல் இல்லை என்பது போல உங்களிடம் நான் மறைக்க வேண்டியதில்லை.
இது ஒரு பொதுத்தொண்டு- செய்ய வேண்டிய தொண்டு என்பதால் செய்கிறோம். இதில் ஆசிரியராக இருக்கிறவருக்குச் சம்பளமில்லை. மற்றபடி எந்த வசதியும் அவருக்கில்லை. வேறு இடமாக இருந்தால் எவ்வளவோ வசதிகள் இருக்கும்.
நல்ல கல்வி அறிவுள்ளவர், தொழில் ஆற்றலுள் ளவர், பொறுப்பானவர். அவர் நினைத்திருந்தால் – ஆசைப்பட்டிருந்தால் நமது இயக்கம், அவருக்குள்ள செல்வாக்கு இதெல்லாம் கொண்டு முனுசீப்பாகி இருப்பார். வக்கீல் தொழில் செய்திருந்தாலும் நல்ல அளவுக்குப் பணம் சம்பாதித்திருப்பார். அதையெல்லாம் விட்டு, பொதுத் தொண்டு செய்ய வேண்டுமென்ற கருத்துடன் செய்து வருகிறார். தங்களுடைய வாழ்வு தங்களுக்காகவே இருக்கக்கூடாது. பொதுமக்களுக்கு ஏதாவது தொண்டு செய்ய வேண்டுமென்கிற தன்னலமற்ற தன்மைக்காகவும் நிறைய பாராட்டக் கடமைப்பட் டிருக்கிறோம்; -‘விடுதலை’ 07.02.1968