சென்னை, நவ.30- சென்னையில் கனமழையால் இதுவரை எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் நேற்று (29.11.2024) உருவான ‘பெஞ்சல்’ புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே நாளை (1.12.2024) கரையைக் கடக்கும். இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கனமழை வரை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மய்யம் தெரி வித்துள்ளது.
இதனை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (30.11.2024) சென்னையில் உள்ள மாநில அவசரகால கட்டுப்பாடு மய்யத்திற்கு வருகை தந்து, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.
அங்கு இருந்தபடியே மழை முன்னேற்பாடுகள் பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்து தேவையான உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
எழிலகம் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி மழை பாதித்த மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் ஆலோசனை நடத்தினார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (30.11.2024) “ஃபெஞ்சல்” புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருவதால், பூக்கடை பேருந்து நிலையம் அருகிலுள்ள கழிவுநீர்உந்து நிலையத்திற்கு நேரில் சென்று, மழைநீர் மற்றும் கழிவுநீர் வெளியேற்றப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, துணை மேயர் மு. மகேஷ் குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா. கார்த்திகேயன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் நீரேற்று வாரிய மேலாண்மை இயக்குநர்டி.ஜி.வினய், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், “சென்னை, ராணிப்பேட்டை உள்ளிட்ட புயல் பாதிப்புக் குள்ளான மாவட்ட ஆட்சி யாளர்களுடன் ஆலோசனை நடத்தியதாகவும், இன்று (30.11.2024) இரவு பலத்த மழை பெய்யும் என்பதால் போதுமான முன்னேற்பாடுகளை செய்யும்படி அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளேன். எந்த மாவட்டத்தில் இருந்தும் ஆபத்தான செய்தி வரவில்லை நிலைமை கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கிறது” என்றார்.
சென்னை விமான நிலையம் மூடல்
புயல் மழை காரணமாக சென்னையில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பானம், திருச்சி, தூத்துக்குடி செல்லும் விமானம் உள்ளிட்ட 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் புயல் காரணமாக கனமழை கொட்டி வரும் நிலையில் சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமானங்களை தரை யிறக்க முடியாத சூழல் நிலவி வருவதால் இன்று மாலை 5 மணி வரை சென்னை விமான நிலைய ஓடுபாதை மூடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புறநகர் ரயில் சேவை பாதிப்பு
தொடர் கனமழை காரணமாக சென்னையில் புறநகர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
“கனமழை காரணமாக, சென்னை கோட்டத்தில் உள்ள அனைத்து புறநகர் பிரிவுக ளிலும் மின்சார ரெயில் சேவைகள் மறுஅறிவிப்பு வரும் வரை குறைவான அளவில் இயக்கப்படும். புயலின் போது பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னையில் இயல்பைவிட 12% கூடுதலாக பெய்த வடகிழக்கு பருவமழை!
சென்னையில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 12% கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
மாநில அவசரகால செயல்பாட்டு மய்யத்திற்கு
நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (30.11.2024) சென்னை, சேப்பாக்கம், எழிலகத்தில் அமைந்துள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மய்யத்திற்கு நேரில் சென்று, “ஃபெஞ்சல்” புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காணொலிக் காட்சி வாயிலாக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு,வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், கூடுதல் தலைமைச் செயலர் / வருவாய் நிருவாக ஆணையர் ராஜேஷ் லக்கானி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலர் பெ. அமுதா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.