மும்பை, நவ.29 288 தொகுதிகளைக் கொண்ட மகாராட்டிராவில் நவம் பர் 20 அன்று ஒரே கட்டமாக வாக் குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து நவம்பர் 23 அன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை முடிவில் ஆளும் மகாயுதி கூட்டணி 230 தொகுதிகளில் (பாஜக – 132, சிவசேனா (ஷிண்டே) – 57, தேசியவாத காங்கிரஸ் (அஜித்) – 41) வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. சிறிய கட்சிகளின் ஆதரவால் தற்போது மகாயுதி கூட்டணியின் மொத்த பலம் 237 ஆக அதிகரித்துள்ளது. எதிர்க் கட்சிகளின் மகாவிகாஸ் அகாதி (எம்விஏ) கூட்டணி 50 தொகுதிக ளில் (சிவசேனா (உத்தவ்) – 20, காங்கிரஸ் – 16, தேசியவாத காங்கிரஸ் (சரத்) – 10, சமாஜ்வாதி – 2, சிபிஎம் -1 , இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கட்சி – 1) மட்டுமே வெற்றி பெற்றது.
அண்மையில் நிறைவுபெற்ற 18 ஆவது மக்களவைத் தேர்தலின் பொழுது மகாராட்டிரா மாநிலத் தில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் எதிர்க்கட்சிகளின் எம்விஏ கூட்டணி 30 தொகுதிகளிலும், மகாயுதி கூட்டணி வெறும் 18 தொகுதிகளில் மட்டுமே வென்று இருந்தது. ஆனால், வெறும் 4 மாத இடைவெளியில் நடைபெற்ற மகாராட்டிரா சட்டமன்ற தேர்தலில் மகாயுதி கூட்டணி 70% தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி இருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராட்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை. வாக்கு எண்ணிக்கை முடிவில் பல்வேறு சந்தேகம் உள்ளது என சிவசேனா (உத்தவ்), காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத்) உள் ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச் சாட்டுகளை முன் வைத்து வருகின்றன.
95 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை முடிவு சந்தேகம்
மகாராட்டிரா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்காளர் தரவுகளின் ஆய்வின் மூலம் 95 தொகுதிகளில் வாக்குகள் எண்ணிக்கையும், வாக்குகள் பதிவும் பொருந்தவில்லை என “தி வயர்” நிறுவன செய்தித் தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
மகாராட்டிராவில் மொத்தம் 288 தொகுதிகளுக்கு நவம்பர் 20 அன்று வாக்குப்பதிவு நடை பெற்றது. தேர்தல் ஆணைய அறிக் கையின்படி 66.05% வாக்குகள் பதிவாகின.
அதாவது மொத்தம் 6,40,88,195 வாக்குகள் (பெண் : 3,06,49,318, ஆண் : 3,34,37,057, மற்றவை – 1,820) பதிவாகி யுள்ளன. தபால் வாக்குகளைச் (5,38,225) சேர்க்கும் போது மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 6,46,26,420 ஆகும். ஆனால், 95 தொகுதிகளில் பதிவான வாக்குகளுக்கும், தேர்தல் ஆணையம் பதிவு செய்துள்ள வாக்குகளுக்கும் அதிக மாறுபாடு இருப்பதால், பதிவான மொத்த வாக்குகள் எண்ணிக்கை 6,45,92,508 ஆக உள்ளது.
அதாவது 33,912 வாக்குகள் குறைவு. 95 தொகுதிகளில், 19 தொகுதிகளில் பதிவான வாக்குகளைவிட அதிக மாகவும், 76 தொகுதிகளில் பதிவான வாக்குகளை விட குறைவாகவும் இருந்துள்ளன.
எடுத்துக்காட்டாக லோகா தொகுதியில் 2,26,837 இவிஎம் வாக்குகளுடன் 2,900 அஞ்சல் வாக்குகள் பதிவாகி இருந்தன. அங்கு மொத்த வாக்குகள் 2,29,737 ஆகும். ஆனால், 2,29,891 வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. லோகா தொகுதியில் வாக்காளர்கள் செலுத்திய வாக்குகளை விட 154 வாக்குகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் மாவல் சட்டப்பேரவைத் தொகுதியில் 2,012 வாக்குகள் எங்கே போனது என்று தெரியவில்லை.
மாவல் தொகுதியில் 2,80,319 இவிஎம் வாக்குகளுடன், 774 அஞ்சல் வாக்கு சேர்த்து 2,81,093 வாக்குகள் பதிவாகி இருந்தன. ஆனால், தேர்தல் ஆணையம் 2,79,081 வாக்குகளை மட்டுமே பதிவிட்டுள்ளது. கிட்டத்தட்ட 2,012 வாக்குகள் காணாமல் போயுள்ளன.
இதே போல நிப்பாத் தொகுதியில் 2,587 வாக்குகள் குறைத்து பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு 95 தொகுதிகளில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் மிகப்பெரிய மோசடியை நிகழ்த்தியுள்ளது என வாக்காளர் தரவுகளின் ஆய்வின் மூலம் உறுதியாகியுள்ளது.
95 தொகுதிகளிலும் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் வெற்றி முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் 95 தொகுதிகளிலும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் வாக்காளர் தரவுகளின் ஆய்வை சுட்டிக்காட்டி தேர்தலில் தோற்ற தனது கட்சி வேட்பாளர்களை சந்தித்து, வாக்கு இயந்திரம் மற்றும் விவிபேட் சீட்டுகளை சரிபார்க்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்குமாறு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.