நகைச்சுவை அரசர் ‘கலைவாணர்’ என்று அழைக்கப்படும் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களது 116ஆவது பிறந்த நாள் இன்று! (29.11.2024)
இன்றைய தலைமுறையினர் பலருக்கு, நகைச்சுவையரசர் என்.எஸ்.கே. அவர்களைப் பற்றி அதிகம் தெரிய வாய்ப்பில்லை. காரணம் அவர் மறைந்தே சுமார் அரை நூற்றாண்டுக்கு மேலாகி விட்டது!
நாடகத் துறையில் புகுந்த அவர் நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியைச் சார்ந்தவர்.
அவரது நகைச்சுவை நடிப்பும், கருத்தாக்கமும் மிகப் பெரிய ‘‘பகுத்தறிவு வெடிகளாகி’’ மக்களை வெடிச் சிரிப்பு சிரித்து மகிழ வைத்த மாபெரும் ‘மருந்து’ ஆகும்.
அவரது நகைச்சுவை – பொருள் பொதிந்த சமூகப் பாடம் போதிக்கும் வகுப்பறைகள் போன்றவையாகும்!
அவரது வாழ்விணையர் டி.ஏ. மதுரம் அவர்களும் மற்றும் பகுத்தறிவு சுயமரியாதைக் கவிராயர் உடுமலை நாராயண கவி அவர்களும் மற்ற நடிகர்கள் ‘காகா இராதாகிருஷ்ணன், ‘ஆழ்வார்’ குப்புசாமி, புளி மூட்டை இராமசாமி என்று ஒரு சிறப்பு குழுவினரே அவருடன் உண்டு.
அவர் நடித்த எல்லா திரைப்படங்களிலும் பகுத்தறிவு, ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்கைகளை கேலி செய்தல், அறிவியல் மனப்பான்மையை பரப்புவதைத் தனது வாழ்நாள் இலட்சியமாய் வைத்துச் செயல்பட்டவர்.
அதனால்தான் முன்னோடிப் பாராட்டினை பல வட்டாரங்களிலிருந்து அவர் பெற்ற வரவேற்பை அக்காலத்தில் வேறு எவரும் பெற்றதே இல்லை.
ஒரு நூற்றாண்டு காணும் சுயமரியாதை இயக்கம் – அதன் கொள்கை முழக்க புரட்சி வார ஏடான பச்சை அட்டை ‘குடிஅரசு’ போன்றவைகள்தான் இவருக்கு ஆசிரியராக நகைச்சுவை களங்களை அமைக்கப் பெரிதும் உதவியது என்பதை என்.எஸ்.கே. அவர்களே பல ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்துள்ளார்.
‘மறையவன் நாவில் அவள் (சரஸ்வதி) உறைவதானால், மலஜலம் கழிப்பது எங்கே, எங்கே?’ என்ற பாட்டின் மூலம் ஒரு பகுத்தறிவு சிந்தனை வெடி போட்டு மக்களைச் சிந்திக்க வைத்த அக்கால சுயமரியாதைச் செம்மல் அவர்!
பழைய ‘உத்தமபுத்திரன்’ என்ற படத்தில் அவர் ஒரு அய்யங்கார் வேடம் ஏற்று, மனிதர்களின் ஆசாபாசமும் அவலமும் ஜாதிகளைக் கடந்த மனித பலவீனங்கள் என்பதை மிக அருமையாக சித்தரித்துக் காட்டுவார்!
நந்தனார் கதையை மறுவடிவம் செய்து சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் மனித உரிமைகளை ஜாதியும், மதமும், பழைய சம்பிரதாயமும் எப்படி பாதிக்கின்றன என்றும், மனித சமத்துவமும் கல்விப் பெருக்கமும் வந்தால் எப்படி எல்லாம் மாறிட வாய்ப்பு ஏற்படும் என்பதையும் கிந்தனார் காலட்சேபம் மூலம் அருமையாக வகுப்பெடுப்பார் நம் கலைவாணர்!
அறிஞர் அண்ணாவின் ‘நல்லதம்பி’ படம் 1947இல் என்.எஸ்.கே. அவர்களுக்காகவே எழுதப்பட்டது! அதில் மதுவிலக்குப் பிரச்சாரம் ‘50ம் 60ம் குட்டி நாடகமும் போட்டு, ‘நாகரிகக் கோமாளி வந்தானய்யா’ என்று ஒரு தனி நிகழ்வினை இணைத்து நாட்டு மக்களைச் சிந்திக்க வைத்தவர்.
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர், காமராசர், எஸ்.எஸ். வாசன் ஆகிய பெரு மக்களின் தனித்த செல்வாக்குப் பெற்ற மதிப்பு பெற்ற மாமனிதர்.
கொள்கை, குறிக்கோளை முன்வைத்து இவரது ஒவ்வொரு நகைச்சுவை நிகழ்வும் மக்களைச் சிரிக்க வைப்பது மட்டுமல்ல, சிந்திக்கவும் வைத்து சமூக மாற்றத்தினை ஏற்படுத்தும் வித்தகத்தின் விளைச்சல் ஆகும்!
இன்றைய தலைமுறையும் அவரது அந்த நகைச்சுவைக் காட்சிகளைப் பார்த்தாலும் சுவைத்துச் சிரிக்கின்றன.
எனவே, நம் பகுத்தறிவு கலைவாணர் என்.எஸ்.கே. காலத்தை வென்ற கலைத்துறை மேரு! திராவிடர் இயக்கம் பெற்ற பெரும் செல்வர். அறிவியல் சமதர்மம் பரப்பிய ஒப்பற்ற மாமேதை.
அவரை நன்றியுடன் நினைந்து பாராட்டி நம்மை நாம் நன்றியுள்ளவர்களாக ஆக்கிக் கொள்வோம்!
இவை எல்லாம் தாண்டி, தான் சம்பாதித்த செல்வத்தை ஏழை, எளிய மக்களுக்கே கொடுத்து கடமையாற்றி – கடனில் மறைந்த காருண்ய சீலர் அவர்.
அவர் என்றென்றும் வாழ்கிறார் வையத்து வரலாற்றில்!