சென்னை, நவ.29- தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 564 இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறி உள்ளார்.
தமிழ்நாட்டில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்தியாவிலேயே முதன்முறையாக 1989-1990ஆம் ஆண்டில் உழவர்களுக்கு இலவச மின்சார திட்டத்தை கலைஞர் தொடங்கி வைத்தார்.
தொலைநோக்குப் பார்வையில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தால் தமிழ்நாட்டின் கிராமங்கள் துரித வளர்ச்சியை அடைந்தன .விவசாய நிலப்பரப்பு விரிவடைந்தது. விவசாயிகள் தன்னிறைவு பெற்றனர். கடந்த 2010-2011ஆம் ஆண்டு 77ஆயிரத்து 158 விவசாயத்திற்கான இலவச மின் சார இணைப்புகளை வழங்கி கலைஞர் சாதனை படைத்தார். அந்தச் சாதனைகளின் அடிச்சுவட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ அரசு கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 564 புதிய விவசாயத்திற்கான மின்சார இணைப்புகளை கொடுத்து புதிய சரித்திரம் படைத்திருக்கிறது. அதற்காக மின்சார கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன.
புதிய மின்சார இணைப்பு
கடந்த 2016- 2021 ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில் உழவர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த விவசாயத்திற்கான மின்சார இணைப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 92 மட்டுமே. ஆனால், திராவிட மாடல் ஆட்சியில் 3 ஆண்டுகளில் அந்த எண்ணிக்கையை கடந்து ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 564 புதிய மின்சார இணைப்புகளை வழங்கி சாதனை புரிந்துள்ளது.
விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக திட்டங்களைத் தீட்டி அக்கறையோடு செயலாற்றி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைக் ளால் விவசாயத்திற்கான மின் இணைப்புகளின் எண்ணிக்கை இந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறது.இதனால், 3 லட்சத்து 38 ஆயிரத்து 380 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதியைப் பெற்றிருக்கின்றன விவசாயிகளின் உண்மைத் தோழனாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதித்துக் காட்டியிருக்கிறார். அவர் விவசாயிகளின் உள்ளத்தை வென்றிருக்கிறார் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.