இந்தியா விண்வெளி அறிவியலில் பல சாதனைகளைப் படைத்திருந்தாலும் கனமான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த பிற நிறுவனங்களை நம்பியிருக்கிறது.
எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் கனமான செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தவிருக்கிறது இந்தியா.
“ஸ்பேஸ் எக்ஸின் ஃபால்கன்-9 (Falcon-9) என்ற ராக்கெட் விண்கலம் இஸ்ரோவின் Gsat-20 (GSAT N-2 என்றும் அழைக்கப்படுகிறது) என்ற 4,700 கிலோ நிறையுள்ள செயற்கைக்கோளை நவம்பர் 19ஆம் தேதி விண்ணில் செலுத்தவுள்ளது” என இந்த செய்தியை உறுதிபடுத்தியிருக்கிறார் இஸ்ரோ தலைவர் சோம்நாத்.
பாகுபலி அல்லது ஃபேட் பாய் என அழைக்கப்படக் கூடிய இஸ்ரோவின் எல்.வி.எம்-3 (LVM-3) ராக்கெட் நான்கு டன் நிறையுள்ள செயற்கைக்கோளையும் ஏவும் திறன் கொண்டது. ஆனால் Gsat-20 செயற்கைக்கோள் நான்கு டன்னுக்கும் அதிகமான நிறை கொண்டுள்ளதால் ஸ்பேஸ் எக்ஸின் உதவியை நாடியுள்ளனர். ஃபால்கன்-9 ராக்கெட் 8,300 கிலோ நிறைகொண்ட செயற்கைக்கோளை கூட GTO சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் திறன் கொண்டது.
இஸ்ரோ உருவாக்கியதிலேயே அதிக நிறை உள்ள செயற்கைக்கோள் 5,854 கிலோ உள்ள Gsat-11தான். இதனை Ariane-5 VA-246 என்ற அய்ரோப்பிய ராக்கெட் மூலம் விண்ணில் ஏவினர். Gsat-20 போல இதுவும் ஒரு தகவல்தொடர்பு செயற்கைக்கோள் ஆகும். Gsat-20 செயற்கைக்கோளை இஸ்ரோவின் வணிகப் பிரிவான நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் கையாளும். இதன் ஆயுள் 14 ஆண்டுகள் என்கின்றனர்.
ஒன்றிய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்குத் தேவையான தகவல் தொடர்பு உள்கட்டமைப்பில் தரவு பரிமாற்ற திறனை (data Transfer) வழங்குவதற்காக இந்த செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விமானத்துக்குள் இணைய வசதி பெறமுடியும்.
Gsat-20 செயற்கைக்கோள் முதலில் எல்.வி.எம்-3 ராக்கெட் மூலமாக ஏவப்பட இருந்தது. ஆனால் இறுதியில் 700 கிலோ அதிகரித்ததால் திட்டத்தை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் கனமான செயற்கைக்கோள்களையும் சுயமாக ஏவ வேண்டும் என்பதற்காக நெக்ஸ்ட் ஜெனரேஷன் லான்சிங் வெஹிக்கில் (NGLV) என்ற ராக்கெட்டை உருவாக்கி வருகின்றனர்.
NGLV ராக்கெட்டை உருவாக்குவதற்கான செலவீனம் மட்டுமே 8,240 கோடி ரூபாய். இது LVM ராக்கெட்டை விட 3 மடங்கு அதிக எடையை சுமக்கும். ஆனால் செலவோ 1.5 மடங்குதான் அதிகம்.