உச்ச நீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி கருத்து
புதுடில்லி,நவ.27- பொறுப்பான நடத்தையை சமூகம் எதிர்பார்ப்பதால் ஓய்வுபெற்ற நீதிபதிகள் அரசியலில் குதிக்கலாமா? என்பது குறித்து உச்சநீதி மன்ற மேனாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கருத்து தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘ஓய்வுபெற்ற நீதிபதிகள் அரசியலில் ஈடுபட வேண்டுமா? என்று அவரிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ‘அரசமைப்பு அல்லது சட்டத்தின்படி, ஓய்வுபெற்ற நீதிபதிகள் அரசியலில் ஈடுபவதற்கு எந்த தடையும் இல்லை. ஓய்வுக்குப் பிறகும் கூட சமூகம் உங்களை (நீதிபதி) நீதிபதியாகவே பார்க்கிறது. எனவே, நீதிபதியாக பதவியில் இருந்து விலகிய பிறகு அரசியல்வாதியாக செயல்படுவது சரியாக இருக்காது. ஓய்வுபெற்ற நீதிபதிகளை இந்த சமூகம் நீதித்துறையின் பாதுகாவலர்களாக பார்க்கிறது. அவர்களின் நடத்தை நீதித்துறை அமைப்பில் சமூகம் வைத்தி ருக்கும் நம்பிக்கையுடன் ஒத்துப்போக வேண்டும்’ என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், ‘ஓய்வுக்குப் பிறகு அரசியலில் களமி றங்கிய ஒருவர், தான் நீதிபதியாக இருந்த போது செய்த பணிகளை மதிப்பீடு செய்யப்படுமா? என்றும், அதனால் ஏற்படும் தாக்கம் குறித்தும் அவர்கள் தீர்மானிக்க வேண்டும். எவ் வாறாயினும், 65 வயதை அடைந்த பிறகு, எனது வேலையையோ அல்லது நீதித்துறையின் நம்பகத்தன்மையையோ கேள்விக்குள்ளாக்கும் எதையும் நான் செய்ய மாட்டேன்.
எனவே அரசியலில் நுழைந்த மேனாள் நீதிபதிகளை குற்றம் சாட்டுவது எனது நோக்கம் அல்ல; ஓய்வு பெற்ற பிறகு எடுக்கப்பட்ட முடிவுகளை பரிசீலிப்பது ஒவ்வொரு நீதிபதியின் பொறுப்பாகும். ஒரு நீதிபதி ஓய்வு பெற்ற உடனேயே அரசியலில் சேர்ந்தால், அவரது நீதித்துறைப் பணியில் அரசியலின் செல்வாக்கு இருந்தது என்ற கருத்து சமூகத்தில் உருவாகலாம்.
நீதிபதிகளும் குடிமக்கள் தான். மற்ற குடிமக்களைப் போலவே அவர்களுக்கும் உரிமைகள் உள்ளன. ஆனால் இந்த சமூகம் அவர்களிடமிருந்து உயர் தரமான நடத்தையை எதிர்பார்க்கிறது. ஓய்வுபெற்ற நீதிபதிகளின் ஏற்றுக் கொள்ளக்கூடிய மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாத நடத்தை குறித்து நீதித்துறைக்குள் ஒருமித்த கருத்து இருக்க வேண்டும். ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு எது பொருத்தமானது, எது பொருத்தமற்றது என்பது குறித்து நீதித்துறையில் ஒருமித்த கருத்து இல்லை. இதுகுறித்து எந்த உடன்பாடு எட்டப்படவில்லை’ என்றார்.