அதானி விவகாரத்தில் உண்மை வெளிவர நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட வேண்டும்: கார்கே

viduthalai
2 Min Read

புதுடில்லி, நவ. 26- அதானி விவகாரத்தில் உண்மை வெளிவர நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், “அதானி குழுமம் ஊழல், லஞ்சம் மற்றும் நிதி முறைகேடு போன்ற கடு மையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறது. இந்த விவ காரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப விரும்பினோம். பிரிவு 267இன் கீழ் அதானி பிரச்சினையை எழுப்பினோம்.

சுமார் ரூ.2030 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பணம் லஞ்சத்துக்கு பயன்படுத்தப்பட்டது என்பதை நாடாளுமன்றத்தின் மூலம் நாட்டுக்கு சொல்ல விரும்பினோம். இதற்குமுன் அதானி குழுமம் மீது, பங்குச் சந்தை முறைகேடு, நிதி மோசடி, ஷெல் நிறுவன மோசடி போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

மோடி எந்த நாட்டுக்குச் சென்றாலும் அதானிக்கு ஒப்பந்தங்கள் கிடைக்கும். இது மிக நீண்ட பட்டியல். இந்த விடயங்களை சபையில் கொண்டு வருவது முக்கியம். இதனால் நாடு இழப்புகளைச் சந்தித்துள்ளது. இதனால் உலகம் நம் மீது நம்பிக்கை இழக்கக்கூடும். நாட்டைக் காப்பாற்றவே இந்தப் பிரச்சினையை எழுப்பினோம். 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் மோடி வங்கதேசம் சென்றபோது, அதானி குழுமத்துக்கு அங்கு மின் திட்டம் கிடைத்தது. மலேசியா, இஸ்ரேல், சிங்கப்பூர், இலங்கை, நேபாளம், தான்சானியா, வியட்நாம், கிரீஸ் என மோடி எங்கெல்லாம் சென்றாரோ அங்கெல்லாம் அதானிக்கு திட்டங்கள் கிடைத்தன.

மோடியின் ஆசி இல்லா விட்டால் அதானியை எந்த நாடு தேர்ந்தெடுக்கும்? அனைத் தும் மோடியின் ஆதரவுடன் நடப்பதால், நாட்டில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்தப் பிரச்சினையை எழுப்ப விரும்பினோம். இதுபோன்ற முக்கியமான பிரச்சினைகளை எழுப்புவதற்காகவே விதி 267 உருவாக்கப்பட்டது. உண்மை வெளிவர நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறோம் என்று மோடி கூறுகிறார். ஆனால், இதுபோன்ற ஊழல் மற்றும் ஒப்பந்தங்கள் மூலம் நாட்டின் நற்பெயருக்கு அவர்கள்தான் களங்கம் ஏற்படுத்துகிறார்கள்” என குற்றம் சாட்டியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *