லக்னோ, நவ. 26- உத்தரப் பிரதேசத்தில் நடந்த இடைத்தேர்தலில் பெற்ற வாக்குகள் சந்திர சேகர் ஆசாத் கட்சியை ஊக்கப்படுத்தி உள்ளது.
இதன் 2 தொகுதிகளில் மாயாவதியின் பிஎஸ்பி, அசாதுதீன் ஒவைசியின் ஏஅய்எம்அய்எம் கட்சிகளை அக்கட்சி பின்னுக்கு தள்ளி உள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்டோர் சமூக ஆதரவு கட்சியாக உருவாகி வளர்ந்தது பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி). இதன் தலைவர் மாயாவதியை 5 முறை முதலமைச்சராக்கிய பிஎஸ்பி-க்கு இப்போது சரிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2022இல் நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலில் 403 தொகுதிகளில் போட்டி யிட்ட பிஎஸ்பி ஒன்றில் மட்டும் வெற்றி பெற்றது. 2024 மக்களவைத் தேர்தலில் பிஎஸ்பி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.
இடைத்தேர்தல்களில் போட்டியிடாமல் விலகி யிருப்பது பிஎஸ்பியின் வழக்கம். ஆனால், இந்த முறை உ.பி.யின் 9 தொகுதிகளிலும் அக்கட்சி போட்டியிட்டது. ஆனால் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில், பீம் ஆர்மியின் நிறுவன ரான ராவண் என்றழைக்கப் படும் சந்திரசேகர் ஆசாத், புதிதாக ஆசாத் சமாஜ் கட்சியை (கன்ஷிராம்) தொடங்கினார்.
இக்கட்சிக்கு ஆதரவாக பிஎஸ்பியின் தாழ்த்தப்பட்டோர் சமூக வாக்குகள் திரும்பி வருகின்றன. இக்கட் சியின் தலைவரான சந்திரசேகர் ஆசாத், மக்களவை தேர்தலில் தனித்தொகுதியான நகீனாவில் வென்றிருந்தார்.
இதையடுத்து, இடைத் தேர்தலில் 8 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தார். இதில் வெற்றி கிடைக்கவில்லை. ஆனால், இரண்டு தொகுதிகளில் பிஎஸ்பி, ஏஅய்எம்அய்எம் கட்சிகளைவிட அதிக வாக்குகளை ஆஸாத் கட்சி பெற்றுள்ளது.
குந்தர்கி தொகுதியில் சமாஜ்வாதிக்கு அடுத்த நிலையில் ஆசாத் சமாஜ் கட்சியின் வேட்பாளர் சாந்த் பாபு 13,896 வாக்குகளுடன் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.
இங்கு பிஎஸ்பிக்கு 1,057, ஒவைசியின் ஏஅய்எம்அய்எம் கட்சி 5ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டது. சுமார் 65% முஸ்லிம்கள் நிறைந்த இத்தொகுதியில் 11 வேட்பாளர்களும் முஸ்லிம்களாக இருந்தனர். பாஜகவின் இந்து வேட்பாளர் ராம்வீர் தாக்கூர் வெற்றி பெற்றுள்ளார்.
மீராபூர் தொகுதியிலும் பாஜகவின் மிதிலேஷ் பால் வெற்றி பெற்றார். சமாஜ்வாதிக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. இங்கு ஆஸாத் சமாஜ் கட்சியின் ஜஹீத் உசைன் 22,621 வாக்குகளுடன் 3ஆம் இடம் பிடித்தார்.
ஏஅய்எம்அய்எம் கட்சியின் முகம்மது அர்ஷத் 18,000 வாக்குகளும், பிஎஸ்பியின் ஷா நாசர் 3,248 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதுவும் அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்களும், அடுத்த எண்ணிக்கையில் தாழ்த்தப்பட்டோர்களும் கொண்ட தொகுதி ஆகும்.
மேலும் கேஹர், கர்ஹால், பூல்பூர், கத்தேரி மற்றும் மாஜ்வான் ஆகிய தொகுதிகளிலும் ஆசாத் கட்சி 4ஆம் இடம் பிடித்துள்ளது. கடந்த 2022 சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்ட ஆஸாத் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு இடைத்தேர்தலில் பெற்ற வாக்குகளால் அக்கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.