பிற மாநிலங்களுக்கும் பரவும் தமிழ்நாட்டின் மகளிர் நலத்திட்டங்கள்! தேர்தல் வெற்றியே சாட்சி?

viduthalai
4 Min Read

தமிழ்நாட்டில் உள்ளதைப் போலவே, மகளிருக்கு நேரடி நிதி உதவி வழங்கும் திட்டங்கள் மகாராட்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் தேர்தல் வாக்குறுதிகளாக அளிக்கப்பட்டன. அது தற்போது அக்கட்சிகளுக்கு வெற்றியையும் கொடுத்துள்ளது. இதுகுறித்து விரிவாக அறியலாம்…

முதலமைச்சரின் மகளிர் உதவி திட்டம்!

மகாராட்டிரா மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட “லடுக்கி பகின் யோஜனா” என அழைக்கப்படும் முதலமைச்சரின் மகளிர் உதவி திட்டம் மூலம் மாதம் 1,500 ரூபாய் மகளிருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது தேர்தல் களத்தில் முக்கிய திருப்புமுனையாக கருதப்படுகிறது. அதேபோல ஜார்க்கண்ட் மாநிலத்தில் மகளிர் உதவித் திட்டம் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் மகளிருக்கு நேரடி நிதி உதவியாக வழங்கப்படுவது ஹேமந்த் சோரென் கூட்டணி தேர்தலில் வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இந்த இரண்டு திட்டங்களிலுமே பயனர்களின் வங்கிக் கணக்கில் மாதாந்திர உதவித்தொகை வரவு வைக்கப்படுகிறது. மகளிர் வாக்குகள் தேர்தல் முடிவுகளை நிர்ணயிப்பதில் மகாராட்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் மிகவும் முக்கிய பங்கு வகித்ததாக கருதப்படுகிறது. வெற்றி பெறுவது கடினம் என்கிற சூழலில் இத்தகைய திட்டங்களை அறிவித்த மகாராட்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களை ஆளும் கூட்டணிகளுக்கு வெற்றி கிடைத்திருப்பது, மகளிர் வாக்குகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக அமைந்துள்ளது.
மகாராட்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் ஆளும் கூட்டணிகள் எதிர்பாராத அளவு மிகுந்த வலிமையுடன் ஆட்சியை தக்க வைத்திருப்பது இனிவரும் காலங்களில் அனைத்து மாநில அரசுகளும் மகளிருக்கு மாதாந்திர உதவித் தொகை அளிக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்குவதாக மூத்த அரசியல் தலைவர்கள் கருதுகிறார்கள்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் தற்போதைய முதலமைச்சரான சிவராஜ் சிங் சவுகான் அறிவித்த மகளிர் உதவித் தொகை திட்டம் சென்ற ஆண்டு பாரதிய ஜனதா கட்சி அந்த மாநிலத்தில் பெரும் வெற்றியைப் பெற முக்கிய காரணமாக அமைந்தது. இதனால்தான் மகளிர் உதவித்தொகை திட்டம் இந்த ஆண்டு ரக்ஷாபந்தனுக்கு முன் மகாராட்டிரா மாநிலத்தில் அறிவிக்கப்பட்டது.

மகாராட்டிரா, ஜார்க்கண்ட்

எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றியை ஏக்நாத் ஷிண்டேயின் அறிவிப்பு மகாயூதி கூட்டணிக்கு பெற்றுக் கொடுத்திருப்பதால், விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள டில்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் இதே போன்ற மகளிர் உதவித்தொகை திட்டங்கள் அறிவிக்கப்படும் என கணிக்கப்படுகிறது.

ஏற்கனவே பீகார், உத்தரப்பிரதேசம், குஜராத், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்களில் பல்வேறு வகைகளில் மகளிருக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் கருநாடகா மற்றும் தெலங்கானா மாநிலங்களிலும் மகளிருக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “கலைஞர் மகளிர் உரிமை திட்டம்” மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் மகளிருக்கு வழங்கப்படும் என அறிவித்து, தமிழ்நாட்டில் இத்தகைய திட்டத்தை செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ஆண்டு வருமானம் 2.5 லட்சத்துக்கு குறைவாக உள்ள குடும்பங்களை சேர்ந்த மகளிருக்கு இந்த திட்டம் மூலம் உதவி அளிக்கப்படுகிறது.

‘கலைஞர் மகளிர் உரிமை தொகை’

டில்லி, கருநாடகா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஏற்கெனவே மகளிருக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. டில்லியில் விரைவில் ‘மகள் இருப்பவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்’ உதவித்தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்படும் என மேனாள் முதலமைச்சர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் திட்டமிட்டுள்ளார்.

கூடுதல் செலவை செய்யப்போகும் மகாராட்டிரா?

மகாராட்டிரா மாநிலத்தில் மகளிர் உதவித்தொகை காரணமாக மாநில அரசுக்கு ஆண்டுக்கு 5000 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என கருதப்படுகிறது. ஏற்கெனவே மகாராட்டிரா மாநிலம் பல்வேறு நலத்திட்டங்களுக்காக கிட்டத்தட்ட 60 ஆயிரம் கோடி ரூபாயை ஒவ்வொரு ஆண்டும் செலவு செய்கிறது. மகளிர் உதவித்தொகை மாதத்துக்கு 2100 ரூபாயாக அதிகரிக்கப்படும் என மகாயூதி கூட்டணி அறிவித்துள்ளது.

மகாராட்டிரா தேர்தல்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மகளிர்க்கு உதவித்தொகை 2500 ரூபாயாக அதிகரிக்கப்படும் என ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார். இந்தத் திட்டம் மற்றும் பிற நலத்திட்டங்கள் மூலம் ஜார்க்கண்ட் அரசுக்கு ஆண்டுக்கு 14,400 கூடுதல் செலவினம் ஏற்படும் என கருதப்படுகிறது.

நலத்திட்டங்களுக்கான நிதி எப்படி திரட்டப்படும்?

நலத்திட்டங்களுக்கான நிதி எப்படி திரட்டப்படும் என்பது பல மாநிலங்களில் கேள்விக்குறியாக உள்ளது. குறிப்பாக கருநாடகா மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் நிதி நெருக்கடி கடுமையாக உள்ளது. கேரளா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் ஏற்கெனவே கூடுதல் கடன் திரட்டுவதை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த கடாது என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது குறிப்பிடத்தக்கது.

உச்ச நீதிமன்றம்

இப்படிப்பட்ட சூழலில் வரும் காலங்களில் வாக்குகளை குறிவைத்து ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் கூடுதல் நலத்திட்டங்களை அறிவிக்கும் எனவும் இதில் பெரும்பாலான திட்டங்கள் பயனர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக ரொக்கத்தை வரவு வைக்கும் திட்டங்களாக இருக்கும் எனவும் கருதப்படுகிறது. மேலும் மருத்துவ காப்பீடு மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் போன்றவற்றுக்கான திட்டங்களையும் விரிவுபடுத்த வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. விலைவாசி உயர்வு மற்றும் போதிய வேலை வாய்ப்புகள் இல்லாமை மக்களை பாதிப்பதால், இத்தகைய திட்டங்கள் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன என கருதப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *