மதுரை, நவ.26- டயாலிசிஸ் பிரிவில் நிரந்தர பணியாளர்களை போர்க்கால அடிப்படையில் நிரப்புவது அவசியம் எனக் கூறியுள்ள உயர்நீதிமன்ற கிளை, உரிய முடிவெடுத்து தெரிவிக்க உத்தரவிட்டுள்ளது. மதுரை கலைஞர் கருணாநிதி நகரைச் சேர்ந்த ஆனந்தராஜ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘‘தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நிரந்தர, தகுதியான, போதுமான அளவு டயாலிசிஸ்
தொழில்நுட்பநர்களை பணியமர்த்த உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரியா கிளெட் ஆகியோர் முன் நேற்று (25.11.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், ‘‘மருத்துவ ஆராய்ச்சி இயக்குநரகத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகளில் 768 டயாலிசிஸ் இயந்திரங்கள் உள்ளன. அவற்றில் 690 இயந்திரங்கள் இயங்கும் நிலையில் உள்ளன.
ஒரு மாதத்திற்கு சராசரியாக 5,807 நோயாளிகள் டயாலிசிஸ் செய்து கொள்கின்றனர். கூடுதலாக டயாலிசிஸ் இயந்திரங்கள் வாங்க அரசு திட்டமிட்டுள்ளது.டயாலிசிஸ் இயந்திரங்களை இயக்கும் நபர்கள் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். 10 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 4 ஆண்டு டயாலிசிஸ் படிப்பு உள்ளது. இந்த கல்லூரி மாணவர்களே இயந்திரங்களை பயன்படுத்தும் நிலையில் உள்ளது’’ என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ‘‘வேலைவாய்ப்பு முக்கியமானது. முக்கிய சிகிச்சை பகுதிகளில் நிரந்தர பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்’’ என்றனர்.
அப்போது அரசுத் தரப்பில், நிரந்தர பணியாளர்கள் நியமனம் குறித்த விவரம் வழங்க 5 மாத கால அவகாசம் வேண்டுமென கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ‘‘768 டயாலிசிஸ் இயந்திரங்கள் இருக்கும் நிலையில் தற்காலிகப் பணியாளர்கள் மற்றும் பயிற்சி மாணவர்கள் மூலம் அவற்றை கையாள்வது கெட்ட வாய்ப்பாகும்.. முக்கிய சிகிச்சை பகுதியான டயாலிசிஸ் பிரிவில் நிரந்தர பணியாளர்களை போர்க்கால அடிப்படையில் நிரப்புவது அவசியம். இதற்கு 5 மாத கால அவகாசத்தை வழங்க இயலாது. எனவே, அரசுத் தரப்பில் உரிய முடிவை எடுத்து தெரிவிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.