திராவிட இயக்கத்தின் கொள்கைகளைப் பரப்புவீர்! துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் அறிக்கை

viduthalai
3 Min Read

சென்னை, நவ.26 தனது பிறந்த நாளில் பதாகை வைப்பது, பட்டாசு வெடிப்பது போன்ற வற்றைத் தவிர்த்து, திராவிட இயக்கக் கொள்கைகளையும் பரப்புவீர் என்று துணை முதலமைச்சர் வெளியிட்ட பிறந்த நாள் அறிக்கை வருமாறு:
அனைவருக்கும் வணக்கம்.

வருகிற நவம்பர் 27-ஆம் தேதி என் பிறந்தநாள் வருவதையொட்டி, தமிழ்நாடு முழுவதும் திராவிட முன்னேற்ற கழகத்தினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார்கள். அதிலும் குறிப்பாக, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு `தி.மு.கழகத்துக்கு நூறு இளம் பேச்சாளர்களைத் தேர்ந்தெடுத்து தாருங்கள்’ என்று தி.மு.க. தலைவர் அவர்கள் தி.மு.கழக இளைஞர் அணிக்கு இட்ட கட் டளையை நிறைவேற்றும்விதமாக, நடத்தப்பட்ட `என் உயிரினும் மேலான’ பேச்சுப்போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் பேச்சாளர்கள் இந்த நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதை அறியும்போது, உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன். மேலும், ஆற்றலும் அனுபவமும் வாய்ந்த தலைமை தி.மு.கழகப் பேச்சாளர்களுடன் இணைந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலம், இந்த இளம் பேச்சாளர்கள் மென்மேலும் பட்டை தீட்டப்படுகிறார்கள் என்பதில் என் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது.
என்னைப் பொறுத்தவரை பிறந்தநாள் என்பது மற்ற நாள்களைப் போலவே அதுவும் ஒரு நாள்தான். ஆனால், இளைஞர் அணிச் செயல் வீரர்கள் உள்ளிட்ட தி.மு.கழகத் தோழர்களும், என்னைத் தங்கள் வீட்டுப்பிள்ளையாகக் கொண்டாடி மகிழும் தமிழ்நாட்டு மக்களும் காட்டும் பேரன்பும் ஆதரவுமே என் பிறந்தநாளைச் சிறப்பான நாளாக மாற்றியிருக்கிறது.

திருமண விழாக்களைத் தங்கள் கொள்கைகளைப் பரப்புரை செய்யும் வாய்ப்பாகக் கருதி, அதையே கொள்கை விளக்க நிகழ்வாக மாற்றிக்காட்டியது, நமது திராவிட இயக்கம். அதே வகையில்தான் தங்கள் பிறந்தநாள் விழாக்களையும் இயக்கத்துக்கான கொள்கைத் திருவிழாவாக மாற்றிக் காட்டியவர்கள் நம் திராவிட இயக்க முன்னோடிகளான தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர். நமது தி.மு.க. தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாளையும் கொள்கைத் திருவிழாவாகவே தி.மு.க. தோழர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

அந்தவகையில், என் பிறந்த நாளைக் கொண்டாட விரும்பும் தி.மு.க. தோழர்களும் அதை ஆக்கப்பூர்வமான மக்கள் பணிக்கும், தி.மு.க. பணிக்கும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதே, என் விருப்பம். முன்பே சொன்னதுபோல், திராவிட இயக்கத்தின் கொள்கைகளையும் நம் திராவிட மாடல் அரசின் சாதனைகளையும் மக்களிடம் எடுத்துச்செல்லும் நிகழ்வுகளை நடத்துவதில், தி.மு.கழகத் தோழர்கள் முனைப்புக் காட்டவேண்டும். அதே போல் நம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்காகத் தங் களை அர்ப்பணித்துக்கொண்ட, போற்றுதலுக்குரிய நம் தி.மு.கழக முன்னோடிகளை நேரில் கண்டு அவர்களை உரிய வகையில் கவுரவிக்க வேண்டும் என்று, நம் இளைஞர் அணித் தோழர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

`ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்ற அறிஞர் அண்ணா வின் வார்த்தைகளுக்கு ஏற்ப, ஏழை அடித்தட்டு மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்வுகளையும் தி.மு.க. தோழர்கள் நடத்தவேண்டும். ஏற்கெனவே, நம் திராவிட மாடல் அரசால் பலன்பெறும் அடித்தட்டு மக்களுக்கு அத்தகைய உதவிகள் மேலும் பலம் சேர்க்கும் என்பதால், அத்தகைய நிகழ்ச்சிகளை நடத்துவதில் தி.மு.கழகத் தோழர்கள் முனைப்புக் காட்டவேண்டும் என்பதே என் விருப்பம். அதேபோல் பெருமழை மற்றும் வெள்ளம் காரணமாக மக்கள் பாதிக்கப்படும் சூழல் வந்தால் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் இளைஞர் அணி செயல்வீரர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.

முக்கியமாக ஒரு விடயத்தை அழுத்தம்திருத்தமாகச் சொல்ல விரும்புகிறேன். என் பிறந்தநாளை முன்னிட்டு, பதாகைகள் வைப்பதையும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் பட்டாசுகள் வெடிப்பதையும் தி.மு.கழகத் தோழர்கள் முற்றிலும் தவிர்க்கவேண்டும் என்று, உரிமையுடன் வேண்டுகோள் விடுக்கிறேன். அவற்றைத் தவிர்த்துவிட்டு, மேற்கண்ட ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளில் தி.மு.கழகத்தினர் கவனம் செலுத்துவதே எனக்கு மகிழ்ச்சியளிக்கும்.

எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்கவே, விழி பிதுங்கிக்கொண் டிருக்கும்போது நாம் 2026-சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகளைத் தொடங்கிவிட்டோம். 2026-இல் வெற்றி பெற்று தி.மு.க. தலைவர் அவர்களின் தலைமையிலான `திராவிட மாடல்’ அரசு மீண்டும் அமைவதற்கான உறு தியை இந்தப் பிறந்தநாளில் என்னுடன் சேர்ந்து தி.மு.கழகத் தோழர்களும் ஏற்றுக்கொள்ளுங்கள். இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள்.

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *