சில ஆண்டுகளுக்கு முன்பு வெவ்வேறு இதழ்களில், பங்குச்சந்தையில் 19 ஆம் நூற்றாண்டு தொடங்கி, இன்றுவரை நடைபெற்றுவரும் ஊழல்களை யும் மோசடிகளையும் விளக்கிச் சில கட்டுரைகளை எழுதியுள்ளேன். ஜனவரி 2025இல் எனது கட்டுரைகள் நூலாக வெளிவரவிருக்கிறது.
1990–களில் இந்தியாவை அதிர வைத்த – பொருளாதாரத்திற்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்திய – ஹர்ஷத் மேத்தா பங்குச் சந்தை ஊழலுக்குப் பிறகு இன்று அதானி குழுமம் நடத்தி வரும் பல லட்சம் கோடி ரூபாய் பங்குச் சந்தை ஊழல் வெடித்துக் கிளம்புகிறது. பங்குச் சந்தையின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களே பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டதும் நரேந்திரர் ஆட்சியில் நடைபெற்றுள்ளது. சித்ரா இராமகிருஷ்ணன் தேசியப் பங்குச் சந்தையில் செய்த திருவிளையாடல்களுக்காகச் சிறையில் இருந்தார். தற்போது ‘செபி’ அமைப்பின் தலைவர் மாதவி புச், பங்குச் சந்தை மோசடிகளில் ஈடுபட்டு உள்ளார் என்பதற்கான ஆதாரங்களை வெளியிட்டு ஹிண்டன்பர்க் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
‘ஆருயிர் நண்பர்’
உள்ளூர் தொடங்கி உலக நாடுகள்வரை அதானியின் ஊழல் அம்பலமாகி வருகிறது. ஆஸ்திரேலியா, வங்கதேசம், ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய நாடுகளில் அதானியின் முதலீடுகளுக்காக நரேந்திரர் உழைத்த உழைப்பு கொஞ்சமா! நமது பிரதமர் நரேந்திரரின் ஆருயிர் நண்பர் அதானி செய்து வரும் மோசடிகளைப் பல ஊடகங்கள் திரைப்போட்டு மறைக்கின்றன. கார ணம் பெரும்பாலான ஊடகங்கள் பெரும் முதலாளி களின் பிடியில் சிக்கியுள்ளன. பங்குச் சந்தை ஊழலில் காணப்பட்ட முறைகேடுகளை ஆய்வதற்கான விசா ரணைகூட சந்திரசூட் தயவில் சில காலம் மழுங் கடிக்கப்பட்டது.
எரிமலையாய் வெடிக்கும் உண்மை
புத்தர் குறிப்பிட்டதைப் போன்று சூரியன், சந் திரன், உண்மை ஆகிய மூன்றையும் மறைக்க முடியாது. இப்போது உண்மைகள் எரிமலை நெருப்பைக் கக்குவது போன்று அதானி ஊழல் எரிதழலாக பாஜக சங்கிகள்மீது பாய்கிறது.
பங்குச் சந்தை என்பது ஊழலோடு பிறந்த குழந்தை. இன்று பல குழந்தைகள் வளர்ந்து மோசடிக்காரர்களின் அடியாட்களாக மாறி மக்களின் பணத்தைச் சூறையாடிக் கொண்டிருக்கின்றன. பங்குச் சந்தை முதலீடுகளைத் திரட்டும் ஓர் அமைப்பு அன்று; மோசடிகளை ஊக்கப்படுத் தும் ஒரு சூதாட்டம் என்று இனம் கண்டார் அறிஞர் காரல் மார்க்ஸ்.
முதலாளித்துவம் ஏற்படுத்தும் முரண்பாடுகளை முழுமையாக ஆய்வு செய்து, காரல் மார்க்ஸ், மூலதனம் மற்றும் உபரி மதிப்பு உள்ளிட்ட நூல்களை உலகிற்கு வழங்கினார்.
மார்க்ஸ் காலத்தில் இன்று போல் பங்குச் சந்தை வணிகத்தின் ஆதிக்கம் இல்லாத போதும் “பங்குச் சந்தை வணிகம் என்பது ஒரு சூதாட்டமே” எனத் திட்டவட்டமாக காரல் மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
காரல் மார்க்சின் மூலதனம், உபரி மதிப்பு நூல்களை எனது மாமனார் க.ரா.ஜமதக்னி தனித்தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.
“உழைப்பினால் செல்வம் ஈட்டுதல் என்ற உண்மையை அகற்றிவிட்டு சூதாட்ட முறையே மூலதனச் செல்வம் பெறும் வழி என்ற பொய்த்தோற்றம் உண்டாக்கப்படுகிறது. பச்சையான வன்முறைக்குப் பதிலாகச் சூழ்ச்சி நிறைந்த அச்சூதாட்ட முறையே மூலதனச் செல்வம் ஈட்டும் முறை என்ற தோற்றமும் உண்டாக்கப்படுகிறது.
இத்தகைய கற்பனை பணச் செல்வத்தில் தனியாட்களின் பணச்செல்வத்தின் பெரும் பாகம் இருப்பதுடன் வங்கியாளர்களின் மூலதனமும் உள்ளது” என்று காரல் மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார். (மூலதனம் 3ஆம் தொகுதி, இயல் 30, ‘பண மூலதனமும், உண்மை மூலதனமும்’-1, Money Capital and Real capital-1.pg.606)
நரேந்திரர் 80 கோடி மக்களுக்கு ஒன்றிய அரசின் பொது விநியோகத் திட்டத்தின் வழியாக உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன என்கிறார்.
80 கோடி மக்கள் வறுமையின் பிடியில் உள் ளார்கள் என்பதைத் தனது ஒப்புதல்வாக்கு மூலம் ஏற்றுக் கொள்கிறார். ஆனால் அதானிகளுக்கும் அம்பானிகளுக்கும் பல இலட்சம் கோடி ரூபாய் வங்கிக் கடனைத் தள்ளுபடி செய்கிறது பிரதமர் மோடியின் தலைமையில் அமைந்துள்ள ஒன்றிய அரசு.
தற்போது அமெரிக்காவின் நீதிமன்றம் அதானி செய்த மோசடிகளையும், இந்தியாவில் பல ஆயிரம் கோடி ரூபாயைப் பலருக்கு இலஞ்சமாக அளித்ததையும் வெளிப்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திரர் தன் மானத்தைவிட இந்தியாவின் மானம் பெரிது என்று முழங்கி வருகிறார். மேலும் பிரதமர் சாதாரண பிறவி அல்ல. கடவுளின் மறுதோன்றல்! எனவே கடவுளைக் காப்பாற்றுவதற்காகவாவது நரேந்திரர் பிரதமர் பதவியைத் துறப்பார் என்று ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் எதிர்பார்க்கிறார்கள். பதவி விலகல் மூலம் பிரதமர் பதவியின் உயரிய மரியாதையைக் காப்பாற்ற வேண்டும் செய்வாரா?
நன்றி: ‘தீக்கதிர்’, 23.11.2024