களங்களை கழகக் கொள்கைத் தளங்களாக்கி முழக்கமிடும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திராவிடர் இயக்கக் காவல் அரணாக மிளிர்வார்!
களங்களை கழகக் கொள்கைத் தளங்களாக்கி முழக்கமிடும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், ‘‘திராவிடர் இயக்கக் காவல் அரணாக மிளிர்வார்’’ என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அவரது வாழ்த்து அறிக்கை வருமாறு:
தமிழ்நாடு தி.மு.க. அரசின் துணை முதலமைச்சரும், தி.மு.க.வின் ஆற்றல்மிகு இளைஞரணி செயலாளரும், சீரிய பகுத்தறிவாளருமான மானமிகு மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நாளை (27.11.2024) 47 ஆவது ஆண்டு பிறந்த நாள் விழாவாகும்.
புத்தாக்க உலகை
உருவாக்குவதற்கே!
அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் சொல்வதுபோல், பிறந்த நாளை பகுத்தறிவாளர்களும், திராவிடர் இயக்கத்தவர்களும் கொண்டாடுவது என்பது வெறும் கொண்டாட்டத்திற்காக அல்ல. மாறாக, கொண்ட கொள்கை, லட்சியங்களைப் பரப்ப, பாதுகாக்க, அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு சேர்த்து, மேலும் மேலும் உழைத்து, புதியதோர் சுயமரியாதை, பகுத்தறிவு, சமூகநீதி பொங்கும் புத்தாக்க உலகை உருவாக்குவதற்கே!
‘திராவிட மாடல்’ ஆட்சிக்குப்
பெருமை சேர்க்கிறார் நாளும்!
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், அவரிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகள் – இயக்க இளைஞரணி செயலாளர் பொறுப்பானாலும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரான நிலையிலும், தேர்தல் பிரச்சாரத்திலும், சீரிய திராவிடர் இயக்கக் கொள்கைப் பிரச்சாரத்திலும் – தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, நூற்றாண்டு நாயகர் கலைஞர் ஆகியவர்களின் பாடங்களை சிறப்பாகப் பரப்புரை செய்து, இன்றைய முதலமைச்சரின் தலைமையில் கட்டுப்பாடு காத்து செயல்படும் ஓர் இராணுவத் தளபதி போன்று, கொள்கை முழக்கத்தை அஞ்சாமையும், அடக்கமும் கலந்து பரப்புரை செய்வதில் எடுத்துக்காட்டான வகையில், இன எதிரிகளும், அரசியல் வைரிகளும் அச்சப்படும் அளவில் ‘பளீர் பதில்கள்’ மூலம் முத்திரைப் பதித்து,
‘திராவிட மாடல்’ ஆட்சிக்குப் பெருமை சேர்க்கிறார் நாளும்! களங்களை கழகக் கொள்கைத் தளங்களாக்கி முழக்கமிடுவதிலும், விவேகமும், வேகமும் உடையவராகி, மூத்தவர்களின் வாழ்த்தையும், இளையவர்களின் பாசத்தையும் நாளும் பெற்று, ஒரு புதுத் திருப்பத்தை தி.மு.க.வுக்குத் தந்து வருகிறார்.
கொள்கைத் தெளிவு,
துணிவு, பணிவு, கனிவு!
அவர் நல்ல உடல்நலத்தோடு பல்லாண்டு வாழ்ந்து, திராவிடர் இயக்கக் காவல் அரணாக மிளிர்வார் என்ற நல்ல நம்பிக்கையுடன், நாம் நெஞ்சார வாழ்த்தி மகிழ்கிறோம்!
‘‘விமர்சகர்களுக்கு எனது செயல்களே பதிலாக இருக்கும்’’ என்ற அடக்கமும், ஆழமும் நிறைந்த அவரது பதில் ஒன்றே அவரது கொள்கைத் தெளிவு, துணிவு, பணிவுக்கும், கனிவுக்கும் தக்கச் சான்றுகளாகும்!
‘‘திராவிடம் வெல்லும் – என்றும் வரலாறு அதனைச் சொல்லும்!’’
26.11.2024
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்