புதுடில்லி, நவ.25- அதானி மீதான அமெரிக்காவின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் பிரபல தொழில் அதிபரும், உலகின் முன்னணி பணக்காரருமான கவுதம் அதானிக்கு சொந்தமான அதானி குழுமம் பங்கு சந்தையில் ஆதாயம் அடைவதற்காக தனது பங்கு மதிப்பை உயர்த்தி காட்டி மோசடியில் ஈடுபட்டதாக கடந்த ஆண்டு ஜனவரியில் அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு விசாரணை குழு விசாரிக்க உத்தரவிடக் கோரி வழக்குரைஞர்கள் விஷால் திவாரி,எம்.எல்.சர்மா உள் ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் அதானி-ஹிண்டன்பர்க் வழக்கை சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்ற எந்த முகாந்திரமும் இல்லை என்றும் இந்த வழக்கை பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியமான செபியே தொடர்ந்து விசாரிக்கும் என்றும் தீர்ப்பளித்தது.
அமெரிக்கா புதிய குற்றச்சாட்டு
இந்த நிலையில் அதானியின் சூரிய மின்சக்தி நிறுவனம் தயாரிக்கும் மின்சாரத்தை வினியோகிப்பதற்கான ஒப்பந்தத்தை பெறுவதற்காக ஆந்திரா, ஒடிசா, தமிழ்நாடு, காஷ்மீர், சத்தீஸ்கர் மாநிலங்களில் அரசு அதிகாரிகளுக்கு கவுதம் அதானி ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. மேலும் இது தொடர்பாக அமெரிக்காவின் நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதுடன், அதானிக்கு எதிராக பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதானி மீதான தற்போதைய குற்றச் சாட்டு குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி வழக்குரைஞர் விஷால் திவாரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். அதானி- ஹிண்டன் பர்க் வழக்குகளில் இடைக் கால மனுவாக இதை தாக்கல் செய்துள்ளார்.
அவர் தனது மனுவில், “அதா னிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. அவை இந்திய அதிகாரிகளால் விசாரிக்கப்பட வேண் டும். செபியின் விசாரணை யில் இருக்கும் குற்றச்சாட்டுகளுக்கும், வெளிநாட்டு அதிகாரிகளால் சுமத்தப்பட்டுள்ள தற்போதைய குற்றச்சாட்டுகளுக்கும் தொடர்பு இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம். ஆனால் செபியின் விசாரணை அறிக்கை இதை தெளிவுபடுத்த வேண்டும். இதனால் முதலீட்டாளர் கள் நம்பிக்கை இழக்க மாட்டார்கள்” என கோரியுள்ளார்.