புதுடில்லி, நவ.23 தலைநகர் டில்லி கடுமையான காற்று மாசால் திணறி வருகிறது. இந்த நிலையில், டில்லி மற்றும் என்சிஆர் பகுதியை சுற்றியுள்ள மாநிலங்களில், மாசு கட்டுப்பாட்டுக்கான “கிராப்” 4 விதிமுறைகளை கடுமையாக கடைப்பிடிக்க உச்ச நீதிமன்றம் நவம்பர் 18-ஆம் தேதி உத்தரவிட்டது. எக்காரணத்தைக் கொண்டும் மறு உத்தரவு வரும் வரை இந்த கட்டுப்பாடுகளை தளர்த்தக்கூடாது எனவும் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கட்டுப்பாடுகளை மீறி டில்லி நகருக்குள் லாரிகள் நுழைவதாக புகார் எழுந்தது. இது தொடர்பான விசாரணை நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (22.11.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது, டில்லி நகருக்குள் லாரி அத்துமீறி நுழைவது குறித்து டில்லி அரசிடம் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். அப்போது, டில்லி அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், லாரிகள் நுழைவதற்கான பிரத்யேகமான 13 வழிகள் உட்பட, 113 நுழைவு வாயில்கள் இருப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் அமர்விடம் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், “டில்லியில் லாரிகள் நுழைவது முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டதாக கூறுவதை நம்புவது கடினம். இந்த விவகாரத்தில், 113 நுழைவு வாயில்களிலும் காவல் துறையினரை அனுப்பி லாரிகள் நுழைவதை தீவிரமாக ஒன்றிய அரசு கண்காணிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.