திண்டிவனம், நவ.23- விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் தொழில் நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல் முகாம் நேற்று (22.11.2024) நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத் தொழில் மய்யம் சாா்பில் நடத்தப்பட்ட இந்த முகாமை மய்யத்தின் பொது மேலாளா் சி. அருள் தொடங்கி வைத்து பேசினாா்.
அவா் பேசுகையில், உற்பத்தி மற்றும் சேவை வணிகத்தில் ஈடுபட்டுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தை பதிவு செய்ய வேண்டிய உத்யம் இணையதளம் குறித்தும், இதன் மூலம் ஒன்றிய, மாநில அரசுகளால் கிடைக்கும் சலுகைகள், உதவிகள் குறித்தும் விளக்கினாா்.
மேலும் குறு, சிறு, நடுத்தரத் தொழில்முனை வோா்களிடம் தெரிந்து கொள்ள வேண்டிய அரசு கொள்முதல் சந்தைப்பதிவு, தொழில் முனைவோா் பெற வேண்டிய உரிமங்கள், ஒப்புதல்கள், அவற்றை பெறும் முறைகள் போன்றவை குறித்தும் முகாமில் எடுத்துரைக்கப்பட்டது. ஒன்றிய, மாநில அரசுகளின் திட்டங்கள், மானியங்கள், உதவிகள் குறித்து தொழில் மய்ய உதவி இயக்குநா் வெ.முத்துக்கிருஷ்ணன் விளக்கினாா்.
திண்டிவனம் அரிசி ஆலை உரிமையாளா்கள் சங்கத்தின் சாா்பில் கண்ணன், கமலக்கண்ணன், அஜ்மல் அலி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோா்கள், வா்த்தகா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.
நெடுஞ்சாலைத் துறை சார்பாக சீரமைப்பு பணிகள் தீவிரம்!
திருவள்ளூர், நவ.23- பருவமழையின் காரணமாக சென்னையை ஒட்டிய நெடுஞ்சாலை பகுதிகளில் சாலை ஓரங்களில் மண் குவியல், குவியலாக தேங்கி கிடப்பதால் காற்றின் காரணமாக மண் தூசி சாலைகளில் பறந்து விபத்துக்கள் ஏற்படுவதாக கூறப் படுகிறது.
இதனையடுத்து கோட்டப் பொறியாளர் டி.சிற்றரசு உத்தரவின் பேரில், உதவிக் கோட்டப் பொறியாளர் ஜி.மகேஸ்வரன், உதவிப் பொறியாளர் எஸ்.கார்த்திக் ஆகியோர் முன்னிலையில் நெடுஞ்சாலைத் துறையின் நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு அம்பத்தூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட மவுண்ட் – பூந்தமல்லி – ஆவடி சாலையிலும், சென்னீர் குப்பம் முதல் ஆவடி வரையிலும், சென்னை – திருத்தணி ரேணிகுண்டா சாலையில், ஆவடி முதல் நெமிலிச்சேரி வரையிலும் சாலையின் இருபுறங்களிலும் மண் குவியல்கள் அகற்றப்பட்டு வருகிறது.
சாலையின் மய்ய தடுப்பு சுவர்களுக்கும் கருப்பு, வெள்ளை வர்ணம் பூசப்பட்டு வருகிறது. மேலும் மவுண்ட் – பூந்தமல்லி – ஆவடி நெடுஞ்சாலையில் உள்ள பருத்திப்பட்டு மேம்பாலத்திற்கு கருப்பு வெள்ளை வர்ணம் பூசப்பட்டு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்கான சிறப்பு கலந்தாய்வு நவ.25ஆம் தேதி முதல் நடைபெறும்:
மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு
சென்னை, நவ.23- தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்கான சிறப்பு கலந்தாய்வு நவ.25ஆம் தேதி முதல் நடைபெறும் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். இளநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நான்கு கட்டமாக முடிவடைந்து இருக்கிறது. இதில் 6 எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் 28 பி.டி.எஸ். இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருந்தது. அதேபோன்று ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் இடம் தேர்வு செய்யப்பட்டு இருந்த மாணவர் உயிரிழந்ததை அடுத்து தமிழ்நாட்டில் 7 எம்.பி.பி.எஸ். இடங்களும், 28 பி.டி.எஸ். இடங்களும் காலியாக இருப்பதாக மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்து இருக்கிறது.
அதேபோல தேசிய மருத்துவ ஆணையம் அன்னை மருத்துவ கல்லூரி, எம்ஜிஆர் மருத்துவ கல்லூரிகளுக்கு தலா 50 இடங்கள் கூடுதலாக ஒதுக்கி தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2 மருத்துவக்கல்லூரிகளுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதை அடுத்து அந்த இடங்களை நிரப்புவதற்கான சிறப்பு கலந்தாய்வு நடக்க உள்ளது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள மொத்தம் 135 மருத்துவ இடங்களுக்கு 25ஆம் தேதி சிறப்பு கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. அதேபோன்று இதற்கான கட்டுப்பாடுகளும் மருத்துவ கல்வி இயக்ககம் தரப்பில் இருந்து வெளியிடப்பட்டு இருக்கிறது.
விழுப்புரத்தில் 29ஆம் தேதி மக்களை தேடி மருத்துவத்தில்
2 கோடியே ஒன்றாவது பயனாளிக்கு
மருந்து வழங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, நவ.23- ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை சார்பில் ‘ஊட்டச்சத்தை உறுதிசெய்’ திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பொருட்களை தாய்மார்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கும் நிகழ்ச்சி சைதாப்பேட்டையில் நேற்று (22.11.2024) நடந்தது. வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-
இந்த திட்டத்தில் 65 ஆயிரத்து 503 குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணத்தில் உருவான மக்களை தேடி மருத்துவம் திட்டம் மிகச் சிறப்பாக நிறைவேறி வருகிறது. 2 கோடி பயனாளிகளை நெருங்கி கொண்டிருக்கிறது. வருகிற 29ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விழுப்புரத்தில் அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க செல்கிறார். அப்போது மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 2 கோடியே ஒன்றாவது பயனாளியை திருப்பசாவடி மேடு, கோவிந்தபுரம், ஏணதி மங்கலம் ஆகிய 3 கிராமங்களில் இருந்து தேர்வு செய்யப்படுவார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலவச மருந்து பெட்டகத்தை வழங்குவார்.
– இவ்வாறு அவர் கூறினார்.