“நல்ல பெயர் எடுக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் என்னிடம் வரவேண்டிய அவசியமில்லை; கெட்ட பெயர் எடுக்கவேண்டும் என்பவர்கள் மட்டும் என்னிடம் வாருங்கள்” என்பதுதான் தந்தை பெரியாருடைய முதல் பாடம்!
அன்றும் – இன்றும் – என்றும் பெரியாருடைய தொண்டர்கள் குறைவாகவே இருப்பார்கள் – நோபல் பரிசு பெற்ற அறிஞர்களைப் போல – இராணுவத்தினரைப் போல – காவல்துறையினரைப் போல!
சென்னை, நவ.23 அன்றும் – இன்றும் – என்றும் பெரியாருடைய தொண்டர்கள் குறைவாகவே இருப்பார்கள் – நோபல் பரிசு பெற்ற அறிஞர்களைப் போல – இராணுவத்தினரைப் போல – காவல்துறையினரைப் போல! தந்தை பெரியாருடைய முதல் பாடமே, “நல்ல பெயர் எடுக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் என்னிடம் வரவேண்டிய அவசியமில்லை. கெட்ட பெயர் எடுக்கவேண்டும் என்பவர்கள் மட்டும் என்னிடம் வாருங்கள்” என்பதுதான் என்பதை எடுத்துக்காட்டி உரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
மருத்துவர் கவுதமனின் 75 ஆம் ஆண்டு பவள விழா!
கடந்த 6.10.2024 அன்று காலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்,இராதா மன்றத்தில் நடைபெற்ற பெரியார் மருத்துவக் குழும இயக்குநர் மருத்துவர் கவுதமன் அவர்களின் 75 ஆம் ஆண்டு பவள விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
நடைபெறக்கூடிய நமது குடும்ப விழா என்ற இந்த சிறப்பான நிகழ்வில் – பெரியார் மருத்துவக் குழும இயக்குநரும், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டருமான மருத்துவர் கவுதமன் அவர்களின் 75 ஆம் ஆண்டு பவள விழா இது.
வளமை என்பது தொண்டுதான் – கொள்கைதான்!
பிறந்த நாளில் இருந்து வாழும் அத்துணை நாள்களும் தனக்கென வாழாது, பிறருக்கென, சமூகத்திற்கென உழைத்துக் கொண்டிருக்கக்கூடிய ஒரு நல்ல மாமனிதராக வளர்ந்து, ஆளாகி, தன் பெண்டு, தன் பிள்ளை, தன் வீடு என்ற சின்னதோர் கடுகு உள்ளம் என்ற நிலைக்கு ஆளாகாமல், தொல்லுலக மக்களெல்லாம் நம்முடைய மக்கள், உறவுகள் – அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும் என்ற கொள்கையை, தன் வாழ்நாள் இலக்காக, மாணவப் பருவந்தொட்டே அவர்கள் பெற்று, இன்றைக்கு 75 ஆவது வயதை அடைந்துள்ள நிலையிலும், இளமை மாறாமல், வளமை என்பது முக்கியம் என்ற ஒரு நிலை இல்லாமல் – ‘‘வளமை என்பது பணத்தைப் பொருத்தது அல்ல; நான் ஒவ்வொரு முறையும் வளமையைத் தேடுகிறேன்; அந்த வளமை என்பது தொண்டுதான் – கொள்கைதான் வளமையைத் தருகிறது” என்கிற மிகப்பெரிய ஒரு தத்துவத்திற்கு இலக்கணமாக வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய அருமைச் சகோதரர் மருத்துவர் கவுதமன் அவர்கள் எழுதிய புத்தக வெளியீட்டு விழா -பவள விழா.
நான் இதை மாற்றிச் சொல்கிறேன்; கவனமாக நீங்கள் கவனிக்கவேண்டும். அப்படிப்பட்ட ஓர் அருமையான விழாவிற்குத் தலைமையேற்று இருக்கக்கூடிய கழகத்தின் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் உள்பட கழகப் பொறுப்பாளர்களே, தோழர்களே!
புத்தகங்களைப் பெற்றுக்கொண்ட பெரு மதிப்பிற்கும், பேரன்பிற்கும் உரிய பெரியவர்கள், தோழர்கள், தலைமைப் பேராயர் முனைவர் ரவிக்குமார் ஸ்டீபன் அய்யா அவர்களே, இங்கே சிறந்த கருத்துகளை எடுத்து வைத்த மருத்துவர் பேராசிரியர் பிரித்திவிராஜ் அவர்களே, தெரசா பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் அருமைச் சகோதரி முனைவர் ஜானகி அவர்களே, பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் முனைவர் இரா.செந்தாமரை அவர்களே,
இந்நிகழ்வில் வாழ்த்துரை வழங்கியுள்ள கழகப் பொருளாளர் வீ.குமரேசன் அவர்களே, கழகக் கொள்கைப் பரப்புச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்களே, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவுத் தலைவரும், சீரிய பகுத்தறிவாளருமான தோழர் வந்தியத்தேவன் அவர்களே,
இந்நிகழ்வில் நன்றியுரை கூறவிருக்கக்கூடிய இந்தக் குடும்பத்திற்குரிய, தம்மின் தம்மக்கள் அறிவுடைமை என்பதைத் தாண்டி, சிறந்த மருத்துவராக இருக்கக்கூடிய இனியன் அவர்களே, இணைப்புரை வழங்கிக் கொண்டி ருக்கின்ற கழகத் துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களே,
மற்றும் மாநில முழுவதும் இருந்து கழகப் பொறுப்பாளர்கள் இங்கே குழுமியிருக்கிறார்கள். எனது கெழுதகை நண்பரும், தேசிய பல்கலைக் கழகத்தின் தலைவராக இருந்து ஓய்வு பெற்று சிறுநீரகத் துறையில் உலக வல்லுநராக இருக்கக்கூடியவரும், இன்றைக்கும் என்றைக்கும் நம்மோடு இருக்கக்கூடிய பேராசிரியர் டாக்டர் இராஜசேகரன் அவர்களே,
அருமைச் சகோதரிகள் டாக்டர் சரோஜினி பழனியப்பன் அவர்களே, சரோஜினி ஏகாம்பரம் அவர்களே, இவர்கள் எல்லாம் எங்கள் குடும்பத்தோடு, மருத்துவர் கவுதமன் குடும்பத்தோடு பின்னிப் பிணைந்திருக்கின்றவர்கள். இன்னும் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். இப்படி ஒவ்வொருவராக சொல்லிக் கொண்டே போகலாம். நேரமின்மையால் ஒவ்வொருவரையும் தனித்தனியாக விளிக்க முடியவில்லை. அனைவருக்கும், இயக்கத் தோழர்களுக்கும் என்னுடைய அன்பான வரவேற்பை – வருக! வருக!! வருக!!! என்று நிகழ்ச்சி முடியும்பொழுது சொல்லுகிறேன். இதுதான் சடங்கை உடைத்த ஒரு மரபு.
பெரியாருடைய தத்துவத்தை ஒவ்வொரு நிகழ்விலும் காட்டவேண்டும்!
ஏனென்றால், வணக்கம் சொல்வதற்கு முன்பாக, நான் உங்களையெல்லாம் வரவேற்று வருக! வருக! என்று சொல்கிறேன் என்றால், இந்நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள் நாங்கள்.
எதற்காக இந்நிகழ்வை ஏற்பாடு செய்தோம் என்றால், ஒரு மனிதனுக்கு, பெரியாருடைய தத்துவத்தை ஒவ்வொரு நிகழ்விலும் காட்டவேண்டும்.
பெரியார் என்பது ஒரு வாழ்க்கை நெறி!
சுயமரியாதை இயக்கம் என்பது சுகவாழ்வுக்கான தத்துவத்திற்கான ஒரு வாய்ப்பு. அந்த வகையில்தான் இந்த நிகழ்ச்சியை நாங்கள் நடத்துகின்றோம்.
தந்தை பெரியாருடைய முதல் பாடம்!
புகழ் வேட்டைதான் மனிதனுக்கு மிகப்பெரிய ஆபத்தாகும். புகழைப் பற்றி கவலைப்படாதே – தந்தை பெரியாருடைய முதல் பாடமே, “நல்ல பெயர் எடுக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் என்னிடம் வரவேண்டிய அவசியமில்லை. கெட்ட பெயர் எடுக்கவேண்டும் என்பவர்கள் மட்டும் என்னிடம் வாருங்கள்” என்றார்.
நம்முடைய கொள்கைகளை, கருத்துகளைச் சொல்லும்பொழுது, நமக்குக் கெட்ட பெயர்தான் வரும். நல்ல பெயர் எடுக்கவேண்டும் என்று நினைக்கக் கூடாது.
அன்றும் – இன்றும் – என்றும் பெரியாருடைய தொண்டர்கள் குறைவாகவே இருப்பார்கள்!
எவ்வளவுக்கெவ்வளவு நம்மைத் தாக்குகிறார்கள், எவ்வளவுக்கெவ்வளவு நம்மைக் கொச்சைப்படுத்து கிறார்கள், எவ்வளவுக்கெவ்வளவு நம்மை அசிங்கமாகப் பேசுகிறார்கள் – அவ்வளவையும் ஏற்கக்கூடிய பக்குவம் யாருக்கு இருக்கிறதோ, அவர்கள் மட்டும் என் பின்னால் வாருங்கள் என்று சொன்னதினால்தான், அன்றும் – இன்றும் – என்றும் பெரியாருடைய தொண்டர்கள் குறைவாகவே இருப்பார்கள் -நோபல் பரிசு பெற்ற அறிஞர்களைப் போல – இராணுவத்தினரைப் போல – காவல்துறையினரைப் போல.
ஒரு நாட்டினுடைய மக்கள்தொகை 140 கோடி என்றால், இராணுவத்தில் 140 கோடி பேர் கிடையாது. அதேபோன்று, காவல்துறையினரும் அந்த அளவிற்குக் கிடையாது. குறைவாகத்தான் இருப்பார்கள். ஆனால், அவர்களை நம்பித்தான் நாடே இருக்கிறது. அது போன்றதுதான் இந்த இயக்கமும்.
இந்த இயக்கத்தில் சேர்ந்தால்
யாரும் வீணாகிவிட மாட்டர்கள்!
எனவே, இந்த இயக்கத்தில் சேர்ந்தால், அவர்கள் வீணாகிவிட மாட்டார்கள். அவர்கள் சமுதாயத்திற்குப் பயன்படுவார்கள்.
இந்த விழா என்பது மருத்துவர் கவுதமனுக்குப் பெரு மைச் சேர்ப்பதற்காகவோ, எங்களுக்குப் பெருமைச் சேர்ப்பதற்காகவோ அல்ல.
பொதுவாக, கூட்டங்கள் நடைபெறும் இடங்களில், நேரம் ஆக ஆக கூட்டம் கலையும். ஆனால், இங்கே நேரம் ஆக ஆக கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இதுவே இந்த விழாவிற்கு ஒரு தனி மரியாதையாகும்.
ஒருவருக்கு வயது ஏறுவது என்பது யாரையும் கேட்டு அல்ல!
இந்த நிகழ்ச்சியை நாங்கள் நடத்தவேண்டும் என்று நினைத்தபொழுது, நிகழ்வில் புத்தகங்கள் வெளியிடவேண்டும். அந்த புத்தகங்களை வெளியி டும்போது, மருத்துவர் கவுதமனுக்கு 75 வயதாகிறது. புத்தக வெளியீட்டு விழா என்பதுதான் முன்னால் – வயது ஏறுவது என்பது யாரையும் கேட்டு அல்ல. எப்படி நாள்காட்டி அச்சடிக்கிறார்களோ, டைரி அச்சடிக்கி றார்களோ அதுபோன்றுதான் வயது – யாரையும் கேட்பதில்லை, அது வளர்ந்துகொண்டே போகும்.
வாழ வேண்டிய முறையைவிட்டு, விலகியவர்கள் சத்துப் போனவர்களாகிறார்கள்!
“நீண்ட நாள் வாழ்க! நீண்ட நாள் வாழ்க!!” என்று சொன்னால், வாழவேண்டியவர்கள் வாழுகிறார்கள்; வாழ வேண்டிய முறையில் வாழ்ந்தவர்கள், வாழுகிறார்கள்.
வாழ வேண்டிய முறையைவிட்டு, விலகியவர்கள் சத்துப் போனவர்களாகிறார்கள். சத்துப் போனவர்களுக்குப் பெயர் “மரணம்” என்று சொல்கிறோம்.
இங்கே புதிதாக வந்தவர்களுக்காகச் சொல்கிறேன், இந்த இயக்கம் எப்படி மனிதர்களைப் பக்குவப்படுத்தி இருக்கிறது என்று சொன்னால், வாழ்க்கையில் மிகப்பெரிய ஓர் அம்சம் பயம்! ஒரு திரைப்படத்தில் சொல்வதுபோன்று ‘‘பயம், பயம், பயம்” என்பதுபோன்று, எல்லாவற்றிலும் பயம்.
ஆனால், அந்த பயத்திற்கே இடமில்லாத துணிச்சல். அதாவது பிறந்த நாள் விழா நடத்தும்பொழுது, ‘‘மரணம்” என்ற தலைப்பில் புத்தகம் வெளியிடுவார்களா?
இங்கே உரையாற்றிய மருத்துவர் கவுதமன் மிகவும் அழகாகச் சொன்னார். இந்த நாட்டில், அம்மை நோய் வந்தபொழுது, அந்த நோயைப்பற்றி மருத்துவரிடம் சொல்லவேண்டும் அல்லவா!
எந்த அளவிற்கு மனதில் ஒரு சங்கிலி போட்டிருந்தால், எந்த அளவிற்குக் கோளாறு இருந்தது என்பதற்கு அடையாளம் என்னவென்றால், கிராமத்தில் அம்மை வார்த்தது என்று சொல்லமாட்டார்கள். ‘‘மாரியாத்தா!, ஆத்தா வந்திருக்கா, முத்து போட்டிருக்கா!” என்று சொல்வார்கள்.
காலரா நோய்ப்பற்றி குறிப்பிடும்பொழுது இங்கே உரையாற்றிய டாக்டர் பிரித்வி அவர்கள் மிக அழகாகச் சொன்னார்.
‘‘காளியாத்தா வந்தா, கரண்டி எண்ணெய் கொடுத்தாள்!’’
காலரா நோய் வந்தால், அதை காலரா என்று சொல்லமாட்டார்கள். எப்படி சொல்வார்கள் என்றால், ‘‘காளியாத்தா வந்தா, கரண்டி எண்ணெய் கொடுத்தாள்!” என்று.
எண்ணெய்க்கு மொத்த வியாபாரியாக ஒரு கடவுளை வைத்துவிட்டார்கள். கரண்டி கரண்டியாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறாள் என்றார்கள்.
இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை நினைத்துப் பாருங்கள்.
பசு மாட்டு மூத்திரத்தைக் குடித்துவிட்டுத்தான் வரவேண்டும் என்று சொல்கிறார்கள்!
இப்பொழுது நடைபெறுகின்ற 21 ஆம் நூற்றாண்டிலும், நடைபெறுகின்ற ஆட்சியில், மத்திய பிரதேசத்தில் நடைபெறுகின்ற ஆட்சியில், பசு மாட்டு மூத்திரத்தைக் குடித்துவிட்டுத்தான் வரவேண்டும் என்று சொல்கிறார்கள். ‘‘பஞ்ச கவ்வியம்” என்று சொல்கிறார்கள். ‘பஞ்சகவ்வியம்’ என்றால் என்ன? மேல் உலகத்திலிருந்து எடுத்து வந்த அமிர்தகலசமா?
மாட்டு மூத்திரத்தில் எவ்வளவு கிருமிகள் இருக்கின்றன என்பதுகுறித்து விஞ்ஞானிகள் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட அறிவியல் செய்திகளையெல்லாம் ‘‘உங்களுக்குத் தெரியுமா?” என்ற தலைப்பில், அருமையான புத்தகத்தை மருத்துவர் கவுதமன் அவர்கள் எழுதி, அதைப்பற்றி ஒவ்வொரு நாளும் மக்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்.
அவர் பணியிலிருந்தபொழுது, எவ்வளவு தொல்லைகள்? இந்த இயக்கத்தில் அவரை உருவாக்கியது நாங்கள். இன்னுங்கேட்டால், அவருடைய தந்தை ராமமூர்த்தி அவர்களானாலும், அவருடைய தாயார் சாந்தா அவர்களானாலும், அதேபோல, அவருடைய உறவுக்காரர்கள் அத்துணை பேரையும் எங்கள் குடும்பத்திற்குத் தெரியும். இங்கே அமர்ந்திருக்கின்றவர்களுக்கும் தெரியும்.
அவருடைய தந்தை ராமமூர்த்தி அவர்கள், பிள்ளைகளிடம் கண்டிப்புக் காட்டக்கூடிய தந்தை. அவருடைய வீட்டில், எந்தப் பொருள், எந்த இடத்தில் இருக்கிறதோ, அந்தப் பொருள் அந்த இடத்திலேயே இருக்கவேண்டும்.
ராமமூர்த்தி அவர்கள், தன்னுடைய பிள்ளைகளை ஒழுக்கமானவர்களாகவும், கண்டிப்பு காட்டியும் வளர்த்தார். எல்லாவற்றிற்கும் சேர்த்து, கவுதமன், அவருடைய தந்தையை பழிவாங்கினார்.
கவுதமன் தந்தையார் ராமமூர்த்தி அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி!
கவுதமன், தன் காதலை தந்தையிடம் சொன்ன பொழுது, ராமமூர்த்தி அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. இவ்வளவு கண்டிப்புடன் வளர்த்தோம், எனக்கே தெரியாமல் இப்படி செய்திருக்கிறானே? என்று.
சம்பந்தம், எங்களைப் போன்றவர்கள் இருக்கும்பொழுது, ஒரு நண்பர் ராமமூர்த்தியைப் பார்த்து, ‘‘ஏய், உன்னிடம் சொல்லிவிட்டாடா அவன் காதல் செய்வான்?” என்று சொன்னார்.
நீ என்ன பகுத்தறிவுவாதி? என்று கேட்டார்கள்.
அதில் ஒன்றும் எனக்கு ஆட்சேபணையில்லை. ஒரு ஒரே சிக்கல்தான், இவனைவிட, அவன் காதலிக்கும் பெண்ணுக்கு வயது அதிகம் என்றார் ராமமூர்த்தி.
உடனே நான் சொன்னேன், ஷேக்ஸ்பியருடைய துணைவியாருக்கு அவரைவிட வயது அதிகம் என்றேன்.
நபிகள் நாயகத்தினுடைய வயது என்ன? அவரு டைய சீமாட்டியான கதீஜாவின் வயது என்ன? வயதிற்கும், திருமணத்திற்கும் சம்பந்தமில்லை.
கவுதமன் காதலிக்கும் பெண் மூத்தவராக இருப்பது ஒருவகையில் நல்லதுதான் வழிகாட்டுவதற்கும், எல்லாவற்றிற்கும் என்றோம்.
என்னுடைய தலைமையில்தான் கவுதமன் மணவிழா நடந்தது. இவருடைய தாயார் சாந்தா அம்மையாரும் மகிழ்ச்சியடைந்தார். (தொடரும்)