புதுடில்லி, நவ.23 வெவ்வேறு மாநிலங்களுக்கு கொத்தடிமை தொழிலாளா்கள் கடத்தப்படுவதை தடுக்க ஒன்றிய அரசு திட்டம் வகுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
கொத்தடிமை தொழிலாளா்களாக கடத்தப்படுவோரின் அடிப்படை உரிமைகளை அமல்படுத்தக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதிகள் பி.ஆா்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமா்வு முன்பாக 21.11.2024 அன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘மீட்கப்படும் கொத்தடிமை தொழிலாளா்களில் பெரும்பாலானோருக்கு உடனடியாக நிதியுதவி வழங்கப்படுவதில்லை’ என்று தெரிவித்தார்.
இதைத்தொடா்ந்து உத்தரப்பிரதேசத்தில் 5,264 கொத்தடிமை தொழிலாளா்கள் மீட்கப்பட்டதையும், அவா்களில் 1,101 பேருக்கு மட்டுமே உடனடியாக நிதியுதவி வழங்கப்பட்டிருப்பதையும் கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதிபதிகள், கொத்தடிமைகளாக இத்தனைப் போ் இருந்தது அச்சமூட்டுவதாக உள்ளது என்று தெரிவித்தனா். இதையடுத்து நீதிபதிகள் மேலும் கூறுகையில், ‘சில நேரங்களில் அண்டை மாநிலங்களுக்கு அழைத்துச் செல்லப்படும் சிறார், அங்கு கொத்தடிமைகளாகப் பணியாற்ற கட்டாயப்படுத்தப்படுகின்றனா். இந்த விவகாரத்துக்கு ஒன்றிய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து தீா்வு காண வேண்டும். எனவே அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் தொழிலாளா் துறைச் செயலா்களுடன் ஒன்றிய தொழிலாளா் துறைச் செயலா் கூட்டம் நடத்தி, வெவ்வேறு மாநிலங்களுக்கு சிறார்கள் உள்ளிட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் கடத்தப்படுவதை தடுக்க ஒன்றிய அரசு திட்டம் வகுக்க வேண்டும்.
அந்தத் திட்டத்தில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளா்களுக்கு உடனடியாக நிதியுதவி வழங்குவதற்கு உதவ எளிமைப்படுத்தப்பட்ட நடைமுறையும் இடம்பெற வேண்டும். இந்த விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் கருத்துகளையும் ஒன்றிய அரசு பெற வேண்டும்’ என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்துக்கு உதவுமாறு அட்டார்னி ஜெனரலிடம் கேட்டுக்கொண்டனா். இந்த மனு மீதான அடுத்த விசாரணை 6 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.