திருமணம் ஆகாதோர், இணையரை இழந்தவர், விவாகரத்து செய்தவர், சட்டப்படி பிரிந்து வாழ்பவர் உள்ளிட்டோரும் இனி குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கலாம் என்று ஒன்றிய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் புதிய வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது.
முன்னதாக ‘2016 மாதிரி குழந்தை வளர்ப்பு’ வழிகாட்டுதலின்படி திருமணம் முடித்த குழந்தையில்லா இணையர்கள் மட்டுமே தத்தெடுக்க முடியும். இந்த விதிகளை திருத்தி திருமணம் ஆகாத தனிநபர்களும் தத்தெடுக்க புதிய வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 35 வயதிலிருந்து 60 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஆதரவற்ற இல்லங்களில் வளர்ந்து வரும் 6 வயது நிரம்பிய குழந்தை களை தத்தெடுக்கலாம். முதல் 2 ஆண்டுகள் குழந்தை பராமரிப்புக்கு பிறகு தத்தெடுத்து வளர்க்க அனுமதி அளிக்கப்படும்.
அதேநேரம் ஆண், பெண் என இரு பாலர் குழந்தைகளையும் தத்தெடுத்து வளர்க்கும் உரிமை திருமணம் ஆகாத பெண்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. ஆணாக இருக்கும்பட்சத்தில் ஆண் குழந்தையை மட்டுமே தத்தெடுக்க அனுமதிக்கப்படுவர். மேலும் பெற்ற குழந்தைகள் இருப்பினும் இணையர் தத்தெடுக்க புதிய சட்டத்தில் இடம் உள்ளது. அதேநேரத்தில் குறைந்த பட்சம் இரண்டாண்டுகள் சுமுக இல்லற வாழ்க்கையை சம்பந்தப்பட்ட இணையர் வாழ்ந்து வருவதற்கான சாட்சி கட்டாய மாக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் கொண்டுவந்திருக்கும் இந்த திருத்தப்பட்ட 2024 மாதிரி குழந்தை வளர்ப்பு வழிகாட்டுதல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
இந்த தளத்தில் குழந்தைகளை தத்தெடுக்க விரும்பும் பெற்றோர் மற்றும் தனிநபர்கள் தங்களது ஆவணங்களை பதிவேற்றலாம். அவற்றை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பார்வையிடுவர்.
தத்தெடுப்பு விதிகள் தற்போது தளர்த்தப்பட்டிருப்பதால் கூடுதல் எண்ணிக் கையிலான ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்பும் அரவணைப்பும் கொண்ட பெற்றோர் கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
நன்றி: சட்டக் கதிர், செப்டம்பர் 2024