கவிஞர் கலி.பூங்குன்றன்
பார்ப்பனர்கள் மீண்டும் பழைய ஸநாதன வருணாசிரம பாழுங் கிணற்றில் பார்ப்பனரல்லாத மக்களை – குறிப்பாக அவர்கள் மொழியில் பஞ்சம, சூத்திர மக்களை, நமோ சூத்திரர் என்று கூறும் பெண்களைத் தள்ளி, சட்டாம் பிள்ளைத்தனத்தை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்று துடிக்கின்றனர்.
“காற்றுள்ள போதே தூற்றிக்கொள்!” என்ற பழமொழிக்கு ஏற்ப ஆரியம் ஆட்சி அதிகாரம் கையில் வந்த நிலையில், சாட்டையை எடுத்துச் சுழற்ற ஆரம்பித்து விட்டது.
ஒரு கட்டத்தில் குருகுலக் கல்வி என்ற பேரால் வேதங்களைக் கற்பிப்பது என்ற ஒன்றை உருவாக்கி வைத்தனர்.
இமயம் சென்று புலிக்கொடி ஏற்றினான் – கடாரம் கொண்டான் என்று எல்லாம் பழம்பெருமைப் பேசும் பத்தாம் பசலிகளும் நம்மினத்தில் உண்டு.
அந்த மாமன்னர்கள் ஆரியத்தின் தொங்கு சதையாகவே இருந்தனர் என்பதுதான் வரலாறு.
11ஆம் நூற்றாண்டில் சோழ அரசர்கள் தெ.ஆ. மாவட்டத்தில் எண்ணாயிரம் என்னும் ஊரில் ஒரு கல்விச் சாலையை ஏற்படுத்தினர். அங்கே 140 மாணவர்கள் பயின்றனர். 14 ஆசிரியர்கள் அமர்த்தப்பட்டனர்.
ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நெல் அளந்து தரப்பட்டது. உதவித் தொகையும் அளிக்கப்பட்டது. 45 வேலி நிலம் அந்தக் கல்விச் சாலைக்குத் தாரை வார்க்கப்பட்டது.
அதெல்லாம் சரிதான்! அங்கே என்ன சொல்லிக் கொடுக்கப்பட்டது – பாடத்திட்டம் என்ன?
பார்ப்பனீயத்துக்குப் பல்லிளிக்கும் பதர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல் இது.
இப்பொழுது கேட்பதற்கு அதிர்ச்சியாக இருக்கக் கூடும். ஆனால், அந்தக் காலகட்டத்தில் பாயாசமாக இனித்த ஒன்றே!
என்ன பாடங்கள்? வேதங்களும், சமஸ்கிருத இலக்கணமும், மீமாம்ச வேதாந்த தத்துவங்கள்தான் பாடத்திட்டங்கள்!
இவற்றை யார் படித்திருப்பார்கள்? சொல்லிக் கொடுத்தோர் யார்? பாடம் பயின்றோர் யார்? எல்லாம் அவாள்தானே – ஆரியக் கூட்டம்தான்.
இன்னும் இருக்கிறது – ஒன்றோடு நிறுத்தி விடலாமா? இரண்டொன்றை எடுத்துக் காட்டினால்தானே உறைக்கும்.
பாண்டிச் சேரிக்கு அருகே திருபுவனம் என்ற ஊரில் சோழ வேந்தர்கள் கல்லூரி ஒன்று கண்டனர். படித்த மாணவர்கள் 260, உபாத்தியாயர்கள் (அப்படிதானே சொல்ல வேண்டும்?) 12. சொல்லிக் கொடுக்கப்பட்டவை …. ஆச்சரியம் என்ன இருக்க முடியும்? அவாள் ஆத்து சமாச்சாரம்தான்!
இதிகாசங்களும், மனுதர்ம சாஸ்திரமும் போதிக்கப்பட்டன.
கேட்கவும் வேண்டுமா? சொல்லிக் கொடுத்தவர்களும், பாடம் பயின்றவர்களும் பார்ப்பனர்களே!
12ஆம் நூற்றாண்டில் அதே சோழ வேந்தர்கள் திருவாவடுதுறையில் ஒரு கல்விச் சாலையை ஏற்படுத்தினர்.
அங்கு பயிற்றுவிக்கப்பட்டவைகளோ சாரக சமிதை, அஷ்டாங்க இருதய சமிதை!
ஆதாரம் எங்கே என்று அவசரப்பட வேண்டாம். பராந்தக சோழன் தீட்டிய உத்திரமேரூர் கல்வெட்டு பக்கம் 454 பகர்கிறது.
தமிழ் வேந்தர்கள்… ஆனால், தமிழ்ப் பள்ளிகளை நடத்த வேண்டும் என்று நினைக்கவில்லை.
காரணம், பார்ப்பனீயத்துக்குக் கரணம் போட்டு சரணம் பாடியதால்தான். எவற்றை நம் அரசர்கள் பெருமையாகக் கருதினார்கள்?
நான்மறை தெரிந்த அந்தணரை ஆதரித்தவன் முதலாம் இராஜராஜ சோழன்.
மனுநெறி நின்று அஸ்வமேதஞ் செய்தவன் முதலாம் ராஜாதிராஜன்.
மனுவாறு பெருக என்ற பெருமைக்குரியவன் முதலாம் குலோத்துங்க சோழன்.
மனுவுடன் வளர்ந்த கோபரகேசரி என்று குறிக்கப்பட்டான் அதிவீரராஜேந்திர சோழன்.
மனுநெறி நின்று அஸ்வமேதக யாகம் செய்தவன் என்று குறிப்பிடப்பட்டான் முதலாம் ராஜாதிராஜன்.
மனுநெறி விளக்கிய என்ற பெருக்கு உரியவனான வீரராஜேந்திர சோழன்.
மன்னுயிர் தழைக்க மனுவாறு விளங்க என்று குறிக்கப்பட்டான் இரண்டாம் குலோத்துங்க சோழன்.
மனுநெறி வாழ ஆளுகைச் செய்தவன் மூன்றாம் ராஜராஜ சோழன்.
மனுநீதி வளர்த்து நின்றவன் விக்கிரம சோழன்.
நான்மறை செயல் வாய்ப்ப மனுநெறி தழைத்தோங்க ஆட்சி செய்தவன் மூன்றாம் குலோத்துங்கன்.
வெகுகாலத்துக்கு முன் பயணித்துத் தரவுகளைத் தேட வேண்டாம்.
9.10.2002 அன்று சென்னை நாரதகான சபையில் தாம்ப்ராஸ் எனப்படும் பார்ப்பன சங்கத்தின் ஏற்பாட்டில் ‘அருந்தொண்டாற்றிய அந்தணர்கள்’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
வெளியிட்டவர் வேறு யாராகத்தான் இருக்கும்?
சாட்சாத் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதிதான்.
அப்பொழுது அவர் கொட்டிய ஜெயப்பேரிகை என்ன?
“எந்த ஆட்சியாக இருந்தாலும் அந்தணர் சொற்படிதான் நடந்திருக்கிறது என்பதை பழைய நூல்கள் கூறுகின்றன.
இராமர் ஆட்சி செய்தாலும், அவர் வசிஷ்டர் சொற்படிதான் நடந்தார். மதுரையை நாயக்கர்கள் ஆண்டபோதும், அந்தணர்தான் குருவாக இருந்தார். தஞ்சையை மராட்டிய மன்னர்கள் ஆண்டபோது, கோவிந்த தீட்சதர் என்பவர்தான் குரு. அவர் வம்சத்தில் வந்தவர்தான் மறைந்த காஞ்சிப் பெரியவாள். ஆண்டவன்கூட அப்புறம்தான். அந்தணர்தான் முதலில். (‘நக்கீரன்’ 15.11.2002)
அந்தணன் என்று சொல்லிக் கொள்வதெல்லாம் உண்மை யோக்கியாம்சத்துக்கு எதிரானதே!
“அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ் வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுகலார்”
என்றார் திருவள்ளுவர்.
அவர் சொன்னதோ எவ்வுயிரையும் அருள்கண் கொண்டு சமத்துவமாகப் பார்ப்பவன் – எந்த ஜாதியையும் அவர் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.
இன்னும் சொல்லப்போனால் ஜாதி என்ற சொல்லோ, கடவுள் என்ற சொல்லோ, மதம் என்ற சொல்லோ திருக்குறளில் கிடையாது.
எதிலும் திரிபுவேலை காட்டும் திரிநூலார்கள் ஆயிற்றே – அந்தணன் என்றால் அவாள் என்று ‘சித்து’ வேலையைக் காட்டுகின்றனர்.
இடைக்காலத்தில் பார்ப்பனர் அல்லாதார் எழுச்சி ஏற்பட்டது. நூறு ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கமும், திராவிட இயக்கமும், சமுதாயத் துறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தின.
வெள்ளைக்காரனைத் துதிபாடிய கூட்டம், அவன் அனைவருக்கும் கல்வியைக் கொடுக்க ஆரம்பித்தான் என்றதும் வெள்ளைக்காரனை மிலேச்சன் என்று வசைபாட ஆரம்பித்தது.
எதைக் கொடுத்தாலும் சூத்திரனுக்குக் கல்வியைக் கொடுக்காதே! சூத்திரன் படித்தால் அவன் நாக்கை அறுக்க வேண்டும், காதால் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்.
குளித்த குதிரையும், படித்த சூத்திரனும் ஆபத்தானவர்கள் என்ற பழைய இராகத்தை மெட்டமைத்து மீண்டும் வீணைக் கச்சேரி நடத்த முடியுமா?
புத்தர் சகாப்தம் – அதை வீழ்த்த குப்த சாம்ராஜ்ஜியம் என்று வரலாற்றில் ஏற்றத் தாழ்வுகள் நடந்து கொண்டுதான் வந்தன.
20ஆம் நூற்றாண்டில் பெரியார் சகாப்தம் – அதன் வீச்சு தமிழ்நாட்டையும் கடந்து ஆளுமையைச் செலுத்தியது. “பெரியார் உலக மயம் – உலகம் பெரியார் மயம்” என்கிற அளவுக்குத் தந்தை பெரியார் சகாப்தத்தின் மறுமலர்ச்சி அங்கு இங்கு எனாதபடி பட்டொளி வீசிப் பறக்க ஆரம்பித்துவிட்டது.
இப்பொழுது ஆரியம் தலையெடுக்கத் துடிக்கிறது. ஆர்.எஸ்.எஸ்., இந்து மகாசபை என்று தொடங்கி ஜனசங்கமாக மறுதலித்து, பாரதிய ஜனதாவாக முகமூடி அணிந்து, அரசியல் அதிகாரத்தைப் பிடித்து மீண்டும் ஆரியத் துரைத்தனத்தை நடத்துகிறது.
பதவித் துண்டுகளைத் தூக்கி எறிந்து பார்ப்பனர் அல்லாதாரையும் கக்கத்தில் அணைத்துக் கொண்டு காய்களை நகர்த்தும் நச்சு வேலையில் இறங்கிவிட்டது.
சமூகநீதி என்ற ஒன்றால்தானே ‘சூத்திரர்களும்’, ‘பஞ்சமர்களும்’ பளபளக்க ஆரம்பித்து விட்டனர்.
அதன் ஆணிவேரை வெட்டினால் போச்சு என்று ஆட்டத்தை ஆரம்பித்து விட்டனர். அரசமைப்புச் சட்டத்தின் பற்களைப் பிடுங்கும் வேலையைத் தொடங்கிவிட்டனர்.
சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின் தள்ளப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு என்பதை மாற்றி, பொருளாதார ரீதியாகவும் என்ற இடைச் செருகலை செய்துவிட்டனர்.
நாடாளுமன்றமும், நீதிமன்றமும் செல்லாது என்று தூக்கி எறிந்த பொருளாதார அளவுகோல் என்ற ஒன்றை – தன்னதிகார அமைப்புகளையெல்லாம் காயடித்துத் தூக்கி எறிந்த நிலையில் செயல்படுத்திக் காட்டுகின்றனர்.
பிற்படுத்தப்பட்டவர்களின் ஆண்டு வருமானம் ரூபாய் எட்டு லட்சம் என்றால் கிரீமிலேயர் என்று தூக்கி அடித்தவர்கள், அதே எட்டு லட்சம் வருமானம் – கிரிமிலேயர் உயர் ஜாதியினருக்கு – குறிப்பாக பார்ப்பனர்களுக்குப் பொருந்தாதாம்!
நாள் ஒன்றுக்கு 2,200 ரூபாய் வருமானம் உள்ளவர்கள் உயர்ஜாதியினர் – பார்ப்பனர் என்றால், அவர்கள் பொருளாதாரத்தில் நலிந்தவர்களாம். இதே அளவுகோல் பிற்படுத்தப்பட்டோருக்குப் பொருந்தாதாம்!
ஒரு குலத்துக்கொரு நீதி எனும் மனுதர்மம் சட்டமாகி விட்டதா இல்லையா?
‘நீட்’ என்ற நுழைவுத் தேர்வின் நோக்கம் என்ன? ‘நீட்’ வருவதற்கு முன் பார்ப்பனர்கள் பெற்ற இடங்கள் எத்தனை? ‘நீட்’க்குப் பின் அவர்கள் பெற்ற இடங்கள் எத்தனை? சிபிஎஸ்இயைப் பொருத்தவரையில் 20 மடங்கு அதிகம் பெற்றுள்ளனர்.
மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றால் மட்டும் போதாது – அதற்கு அடுத்து ‘நெக்ஸ்ட்’ என்ற தேர்வாம்.
இப்பொழுது தேசிய கல்வி என்ற திட்டம் இந்தியா முழுமைக்கும் – மூன்று மொழிகள் படிக்க வேண்டுமாம்.
மூன்றாவது மொழி என்கிறபோது ஹிந்தி அல்லது சமஸ்கிருதம் (ஹிந்தி சமஸ்கிருதம் போட்ட குட்டிதானே! )
கடந்த எட்டு ஆண்டுகளில் மட்டும் செத்துச் சுண்ணாம்பாகி சுடுகாட்டுக்குப் போன சமஸ்கிருத மொழிக்கு ஒன்றிய பிஜேபி அரசு கொட்டி அழுத தொகை ரூ.1,488 கோடி. தமிழ் வளர்ச்சிக்கோ போனால் போகிறது என்று வெறும் ரூ.74 கோடி மட்டுமே!
மனுதர்மம் தன் வேலையைக் காட்டுகிறது! நம்மைச் சுற்றி விஷப் பாம்புகள் – எச்சரிக்கை! எச்சரிக்கை!!