இந்தியப் பிரசாரகராய் விட்டாராம்
ஸ்ரீமான் சத்தியமூர்த்தியை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக விளம்பர உபகமிட்டி மெம்பராய்ச் சேர்க்கப் பட்டிருப்பதாகக் காங்கிரஸ் காரியதரிசி ஸ்ரீமான் ஏ.ரெங்கசாமி அய்யங்கார் அறிவிக்கிறார் என்று ‘சுதேசமித்திரனில்’ குறிப்பிட்டி ருக்கிறது. பொதுத் தேர்தலையொட்டி அவர் இந்தியா முழுவதும் சுற்றுப்பிரயாணம் செய்வாராம். சரி, இவரை யார் நியமித்தார்கள்? ஸ்ரீமான் ஏ. ரெங்கசாமி அய்யங்கார் நியமித்தார், ஸ்ரீமான் சத்தியமூர்த்தி இந்தியா வெங்கும் சுற்றுப்பிரயாணம் செய்கிறார். யாருடைய பணம்? ஊரார் பொதுப்பணம். என்ன பிரச்சாரம்? பிராமணத் தேர்தல் பிரச்சாரம். அதாவது பொது ஜனங்கள் பணத்தில் மாகாணம் மாகாணமாய்ச் சுற்றி “தமிழ்நாட்டில் பிராமணரல்லாதார் என்கிற அப்பிராமணக் கூட்டம்”ஒன்று இருக்கிறது; அவர்கள் எல்லோரும் தேசத் துரோகிகள்; அவர்களுக்கு மூளை கிடையாது; பிராமணர்கள்தான் பெரிய தேசபக்தர்கள், மகாபுத்திசாலிகள்; அதிலும் நானும் ஸ்ரீமான்கள் ஏ.ரெங்கசாமி அய்யங்காரும், எஸ்.சீனி வாசய் யங்காரும் சி.வி.வெங்கிட்ட ரமணய்யங்காரும், எம்.கே.ஆச்சாரியாருந்தான் மகாமகா புத்திசாலிகள், தேசபக்தர்கள்; ஒத்துழையாமையின் போது நாங்கள் தான் முன்னணியிலிருந்து மிகவும் கஷ்டப்பட்டு பெரிய பெரிய தியாகம் செய்தவர்கள்; கதர், மது விலக்கு, தீண்டாமை முதலியவைகளில் அதிக நம்பிக் கையுடையவர்கள்; காரியத்திலும் நடத்துகிறவர்கள்; அதனால் தான் தமிழ்நாட்டு உண்மை தேச பக்தர்களான ஸ்ரீமான் கலியாண சுந்தர முதலியார் போன்றவர்கள் எங்கள் அய்வர்களையே தமிழ்நாட்டிற்குத் தலைவர்களாகத் தெரிந்தெடுத்து எங்களையே பின்பற்றுகிறார்கள்; நாங்கள்தான் தமிழ் நாட்டுக்குத் தலைமை வகிக்க யோக்கியதை உள்ளவர்கள். எங்களைத் தவிர மற்றவர்களெல்லாம் தேசத் துரோகிகளும் வகுப்பு நலன் நாடுபவர்களுமான குறுகிய புத்தியுடையவர்கள்” என்று பிரச்சாரம் செய்து வரும் எல்லா இந்தியத் தலைவராவார்கள். மற்றபடி வேறு என்ன பிரச்சாரம் செய்யக் கூடும்? தமிழ்நாடே! உன் தலைவிதிதான் என்ன? உன்னை ‘இத்தலைவர்’ களுக்குக் காட்டிக் கொடுத்த ‘தர்மசீலர்’களுக்கு ஆயுள்தான் எவ்வளவோ?
– குடிஅரசு – செய்தி விளக்கம் – 16.05.1926