சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கட்டுரைத் தொடர் (15)
– கி.வீரமணி –
அன்பார்ந்த தோழர்களே, வாசகப் பெருமக்களே,
அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களால் – 1929ஆம் ஆண்டில் கூட்டப்பட்ட முதலாவது சுயமரியாதை இயக்க (மாகாண) மாநாடு செங்கற்பட்டில் நடைபெற்று இப்போது 95 ஆண்டுகளாகி ஏறத்தாழ 100 ஆண்டுகளை நெருங்கிடும் நிலையில் சரித்திரப் புகழ்பெற்ற அந்த மாநாடு ஏற்படுத்திய அமைதியான சமூகப் புரட்சி, சரித்திரப் புகழ் பெற்ற ஒன்றாகும்!
கடந்த கால பல ஆட்சிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் அரசியலுக்கு அப்பாற்பட்ட நிலையிலும், அவர்கள் செல்லும் பாதையை கலங்கரை வெளிச்சமாய் நின்று காட்டியும், வென்று காட்டியும் வரும் ஒரு தவிர்க்க முடியாத சிறப்புப் பெற்றதும், எதிர்கால ஆய்வாளர்களுக்கும் அறிவுத் தீனிக்கு வற்றாது அளிக்கும் வரலாற்றுப் புதையலும் – புதுமையான சுயமரியாதைக் ‘கீழடிப் புதையலும்’ ஆகும்!
அம் மாநாடு ஏற்படுத்திய திருப்பமும் திகைப்பும் அந்நாளைய ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் சிலரால் கூட செரிமானம் செய்து கொள்ள முடியாத புரட்சிச் ‘சுனாமி’ ஆகும்!
அம்மாநாட்டிற்கு முன்னால், அதற்கு ரத்தம், எலும்பு, சதை எல்லாம் தந்து உருவாக்கிய நிறுவனர் தந்தை பெரியார் என்ற இருபதாம் நூற்றாண்டு தந்த இணையற்ற சமூக விஞ்ஞானி! அவ்வியக்கத்தின் செயல்பாடுகள் எப்படி அது தொடங்கப்பட்ட 3, 4 ஆண்டுகளிலேயே வியக்கத்தக்க வகையில் விளைந்தது என்பதை மிகவும் அறிவுபூர்வமாகவும், அனுபவ ரீதியாகவும் பதிவிட்டுள்ளார்.
சமூக நீதிக்கான நீதிக்கட்சியை நிர்மானித்தவர்கள்
நீதிக்கட்சி என்ற சமூகநீதிக்கான இயக்கத்தை டாக்டர் நடேசனார் கால்கொண்டு தொடங்கிட, சர். பிட்டி தியாகராயரும், டாக்டர் டி.எம். நாயர், பானகல் அரசர் போன்ற மதியூகிகளும் அக்கட்டடத்தை எழுப்பினர்!
அரசியல் மாளிகையாய் அது துவக்கப்பட்ட மூன்று ஆண்டுகளிலேயே தேர்தல் வெற்றி மூலம், பார்ப்பனரல்லாத பஞ்சம, சூத்திர மக்களுக்கும் பெண்களுக்கும் ஒரு புதிய விழிப்புணர்ச்சியையும், விடியலையும் தந்த நிலையில் – அந்த நாள் ஆரியம், நம் கைகளைக் கொண்டே, நம் கண்களைக் குத்தி வேடிக்கை பார்க்கும் கலையில் வல்லமையுற்றதால், பார்ப்பனரல்லாத தலைவர்களை கேடயமாக முன்வைத்து பின்னே பதுங்கியிருந்தது, தனது சூழ்ச்சியையே மூலதனமாக்கி ‘அரசியல்’ செய்ய வைத்தது!
ஏனெனில் அந்நாள் காங்கிரஸ் தேசியம் எல்லாம் சர்வமும் ஆரியப் பார்ப்பன ஆதிக்கக் களம் என்பதை அந்நாள் மக்கள் புரியாமலிருந்தனர். நம்மினத்தவர்களையும், தனது வில்லுக்கான அம்புகளாக்கி நீதிக்கட்சி மீது எறிந்தது ஆரியம்!
இதனைத் தவிடுபொடியாக்கியதில் தந்தை பெரியார் பங்கும் வலிமையானது – நீதிக்கட்சிக்குப் போட்டியாகப் பிரச்சாரம் – ஆனால் சமூக நீதியை விடாது பற்றிக் கொண்டே செய்த பிரச்சாரம்!
இதை சில ஆண்டுகளில் உணர்ந்து, விழித்துக் கொண்டு, புது வழி கண்டார் தந்தை பெரியார் (1925-1926இல்). அந்தப் பெரும் அரசியல் திருப்பம் எப்படி ஏற்பட்டது? என்பதைத் தந்தை பெரியார் அவர்களே எழுதியுள்ளார் – அதுவும் முதலாவது செங்கற்பட்டு மாநாட்டிற்கு முன் தமிழ் மாகாண சுமரியாதை மாநாடு ‘திராவிடன் மலரில்’ எழுதிய கட்டுரையில் தெரிவித்துள்ளார் (பிப்ரவரி 17, 18 – 1929).
அந்த முக்கிய கட்டுரை பல கேள்விகளுக்கும், நமது அய்யங்களுக்கும் விடையாக வெளிச்சமாகிறது!
நிதானமாகப் படிப்பீர்!
எனவே இதனை வேகமாகப் படிக்காமல், நிறுத்தி – நிதானமாக – அக்கால அய்யாவின் நடையைப் பொறுமையுடன் புரிந்து – சுவைத்துப் படியுங்கள்.
ஒவ்வொரு சொல்லும் ஒரு நீண்ட சமுதாயப் போராட்டத்தின் ஒளிவீச்சு. ஒலிப்பேழை வாசகங்களே! எனவே, ஒருமுறைப் படித்தால் இந்த முழு சரித்திரச் சத்துணவின் சாரத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியாது.
இரண்டு அல்லது மூன்று முறை ஓர் ஒழுங்கு நிறைந்த பெரியார் மாணவனாக உங்களைக் கருதிக் கொண்டு வாசியுங்கள் – பிறகு சுவாசியுங்கள்.
சுவாரஸ்யம் மிக்க சுயமரியாதைச் சுகத்தின் வீச்சும், என்னைப் போலவே உங்களையும் மகிழ்ச்சி கொள்ளச் செய்யும்.
போகலாமா அந்த வகுப்புக்கு?
சுயமரியாதை இயக்கம்
(ஈ.வெ.ரா. எழுதுவது)
“சுயமரியாதை இயக்கம் என்பது தமிழ்நாட்டில் சுமார் 2, 3 வருஷங்களாகப் பெரிதும் பார்ப்பனரல்லாதார் மக்களுக்குள் பரவி வரும் ஒருவித சமரச வுணர்ச்சியும், அறிவு வளர்ச்சியுமே யாகும். இந்தச் சமரச உணர்ச்சியும், அறிவு வளர்ச்சியுமானது நமது மக்களுக்குத் தங்களை அந்நிய ஒரு வகுப்பார் சமூக வாழ்க்கையில் இகத்திலும் ஆத்மார்த்தம் என்னும் வாழ்க்கையில் பரம் என்பதிலும் முறையே தாழ்த்தி இழிவுபடுத்தியும், ஏமாற்றியும் வைத்து வாழ்ந்து வருகின்றார்கள் என்கின்ற முடிவான கருத்தின்மேல் ஏற்பட்டதேயாகும்.
சுயமரியாதை என்கின்ற
உணர்ச்சியின் பெயரால் ஏற்பட்டதா?
இந்த உணர்ச்சி மக்களுக்குள் சமீபகாலமாய் அதாவது 2, 3 வருஷங்களாகத்தான் அதிகமாய் பரவி வருகின்றது என்று சொல்லப்பட்டாலும், அது சாதாரணமாய் நமது நாட்டில் சிறப்பாகத் தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்னால் இருந்தே ஏற்பட்டு வந்திருப்பதாக ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முற்பட்டவைகள் என்று சொல்லும்படியான சரித்திரங்களிலிருந்தே காணக் கிடைக்கின்றது. ஆனால், அவைகள் சுயமரியாதை என்கின்ற உணர்ச்சியின் பேரால் ஏற்பட்டதா என்பதைக் கண்டுபிடிக்க முடியாததாயிருந்தாலும் ஜீவகாருண்ணியம், சமத்துவம், சமதர்மம் என்னும் பேரால் ஏற்பட்டு வந்திருக்கின்றது. இவற்றிற்கு ஆதாரங்கள் ஔவை, கபிலர், திருவள்ளுவர், புத்தர், ராமானுஜர் முதலியவர்களது வாக்குகளும், செய்கைகளும் என்பது ஒருவாறு போதுமானது என்றே சொல்லலாம். அன்றியும் பதினெண் சித்தர்கள் என்பவர்களில் பெரும்பாலோருடைய வாக்குகளிலிருந்து மேற்கண்ட இழிவையும், ஏமாற்றுதலையும் ஞானத்தின் பேரால் கண்டித்து எதிர்த்துப் போராடிய வேகங்களையும், பதட்டங்களையும் ஒருவாறு காணலாம்.
மற்றும் இப்போராட்டங்களையும் முயற்சிகளையும் ஒழிக்க ஒரு சுயநல வகுப்பார் தங்களை உயர்ந்தவர்களென்று சொல்லிக் கொண்டு அக்காலம் முதற்கொண்டே சூழ்ச்சிகள் செய்து அவ்வுணர்ச்சிகளையே அடியோடு அடக்கி வந்திருப்பதற்கு ஆதாரங்கள் வேண்டுமானால், நமது மத சம்பந்தமான வணங்கத் தகுந்த, பக்தி செலுத்தத் தகுந்த என்று சொல்லப்படு வதுமாகிய சாஸ்திரங்கள், புராணங்கள், இதிகாசங்கள் என்பவைகளின் மூலமாகவே உணர்ந்து கொள்ளலாம். காலக்கிரமத்தில் மேல்கண்ட சமத்துவ உணர்ச்சிக்காரர் களுடையவும் ஜீவகாருண்யக்காரர்களுடையவும், ஞானி களுடையவும், கருத்துகளும், முயற்சிகளும் மதிக்கப்படக் கூடியதுதான் என்று நமது மக்களால் கருதப்பட்ட போதிலும் மேல்கண்ட சுயநலக் கூட்டத்தாரின் சூழ்ச்சிகளால் அவைகள் அவ்வளவும் எழுத்தளவிலும், ஏட்டளவிலும் நிறுத்தப்பட்டு, அதற்கு எதிரிடையானதான இழிவும், கொடுமையும், ஏமாற்றங்களும் மாத்திரம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு காரியத்திலும், அமலிலும், பெருமையிலும் நிலைத்து வருகின்றன.
ஆரியத்திற்கு அடிமைப்பட்ட ஆட்சியாளர்கள்
இதற்கு உதாரணங்கள் தேடிப் பிடித்து காட்ட வேண்டிய தில்லை என்றே சொல்லுவோம். வேண்டுமானால் ஒவ்வொரு மனிதனையும் தன்னை யாரென்றும் தன்னெதிரில் நின்று கொண்டு தினமும் தன்னைத் தாழ்வாய்க் கருதி வாழ்க்கையில் தாழ்ந்த பதவிகள் பிரித்து வைத்திருக்கும் உயர்ந்த ஜாதியான் என்பவன் யாரென்றும் அவனுக்கும் தனக்கும் என்ன வித்தியாச மென்றும் தனது தாழ்ந்த பதவி எத்தனை காலமாய் எதன் மூலம் இருந்து வந்திருக்கின்றதென்றும், தனது வாழ்வும், செல்வமும், அறிவும், ஊக்கமும் பெரிதும் எதற்காக செலவாகிக் கொண்டு வருகின்றதென்றும். தான் மாத்திரமல்லாமல் தனது முன்னோர் களும், பின்னோர்களும் மோக்ஷ மென்பதற்குக் கூட யாரிடம் அடிமை புகவேண்டியிருந்தது, இருக்கிறது என்பனவாகியவை களையும் தனது நித்திய வாழ்வில் உள்ள சடங்குகளையும், அதன் கருத்துகளையும், அதன் பலன்களையும் சற்றுக் கவனித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது. எனவே இந்த நிலை இந்த நாட்டில் நிலைத்திருப்பதற்குப் பெரிதும் காரணமாய் இருந்தது என்னவென்று பார்ப்போமானால் முதலாவது ஒரு கூட்டத்தார் தவிர, அதுவும் வெகு சிறு கூட்டத்தார் தவிர, அதுவும் வெளி நாடுகளிலிருந்து நமது நாட்டிற்குக் குடியேறினவர்களும் தங்களைப் பிறவியில் உயர்ந்தவர்கள் என்பதை நிலைநிறுத்திக் கொண்டு அதற்கு ஏற்ற மதம், கடவுள், தர்மம், ஆதாரம் முதலியவைகளை ஏற்படுத்தி ஆதிக்கம் பெற்றுக் கொண்டவர்களுமான வெகு சிறு கூட்டத்தார் தவிர மற்ற அதாவது 100க்கு 97 பேர் கொண்ட பெருங்குடிமக்கள் எழுத்து வாசனையே அறியக் கூடாதபடி செய்துவிட்ட சூழ்ச்சியும், நாட்டின் ஆட்சி விஷயத்தில் தங்கள் உயர்வுக்கும், ஆதிக்கத்திற்கும் அனுமதி அளிப்பதோடு அதன் வளர்ச்சிக்கு அனுகூலமாயிருக்கும் ஆட்சியைத் தவிர வேறு ஆட்சி இந்நாட்டில் இருக்க முடியாதபடி சூழ்ச்சி செய்து வந்ததன் மூலமும், சற்றாகிலும் தங்கள் ஏகபோக ஆதிக்கத்திற்கு அனுகூலமாயில்லாத ஆட்சியை அழித்து வேறு அதாவது தங்களுக்கு அடிமையாய் இருக்கப்பட்ட ஆட்சியை ஸ்தாபிக்க முயன்று அதற்கு ஒற்றர்களாக இருந்து பலவித துரோகத்தாலும், இழிசெயல்களாலும் அதை ஸ்தாபித்து வந்ததாகிய காரியங்களே அவர்களது உயர்ந்த நிலையும் அவர்களால் மற்ற மக்கள் இழிவுபடுத்தப்பட்டு ஏமாந்து நிற்கும் நிலையும் நிலைபெற்று வருவதற்கு ஆதாரங்களாயிருந்து வந்தன. இன்னமும் இருந்து வருகின்றன.
சமூக சட்டங்கள் மாற்றம் பெற தடை செய்த பார்ப்பனர்கள்
இதற்கு இந்து அரசர்கள் என்பவர்களுடைய ஆயிரக்கணக்கான வருஷ ஆட்சியும் மகம்மதிய அரசர்களது சுமார் 600, 700 வருஷங்களின் ஆட்சியும் உலகத்திலேயே எல்லோரையும்விட நாகரிகத்தில் சிறந்து விளங்கியவர்கள் என்கின்ற பெயர் பெற்றவர்களாகிய ஐரோப்பியர்களுடைய 150 வருஷங்களின் ஆட்சியும் நடந்த பிறகும் இன்றைக்கும் 100-க்கு 7 பேர்களே எழுத்து வாசனை உள்ளவர்களாய் யிருப்பதுமே அத்தாட்சியாகும். இந்த நாடு இந்த நிலைமையில் இருந்து முன்னேறாமல் இருப்பதற்கென்றே உயிர் நிலையிலும் ஆதிக்கத்திலும் இருக்கும் பார்ப்பனர்கள் மத விஷயத்தை மாத்திரம் தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருப்பது போதாதெனக் கருதி அரசியல் விஷயத்தையும் தங்கள் ஆதிக்கத்திற்குள்ளாகவே வைத்துக் கொண்டு அவர்களைத் தவிர வேறு எந்த வகையான சுய அறிவு உள்ளவனையும் பக்கத்தில் சேர்க்காமலும் தலையெடுக்க விடாமலும் வெகு ஜாக்கிரதையாய் பாதுகாத்து வருகின்றார்கள். இதற்கு உதாரணங்கள் வேண்டுமானால், அரசியலில் உள்ள சமூகச் சம்பந்தமான சட்டங்களும், அவைகளில் ஒரு சிறு பாகத்தைக்கூட மாற்றுவதற்குச் சம்மதிக்காத பார்ப்பன சூழ்ச்சியுமே போதுமானதாகும்.
அதற்கு மேலும் வேண்டுமானால் தற்போது நமது நாட்டின் அரசியல் நிலையையும், தேவையையும் குறித்து விசாரித்துவர பிரிட்டிஷ் பார்லிமெண்டாரால் அனுப்பப்பட்டிருக்கும் சைமன் கமிஷனரிடம் நம்மை அண்ட விடாமலும், நமது அபிப்பிராயத் தைத் தெரிவிக்க விடாமலும் செய்து வரும் சூழ்ச்சிகளைக் கவனித்தாலே போதுமானதாகும்.
பார்ப்பனர்களைத் தவிர்ப்பதே பிரதானக் கொள்கையானது
இந்த நிலைகளை எல்லாம் ஒருவாறு பார்ப்பனர்கள் கூடவே இருந்து கண்டறிந்த பிறகே நமது ஒப்பற்ற உயர்திருவாளர் களான டி.எம். நாயர், தியாகராயர் முதலானவர்களாகிய பெரியோர்களால் மேல்கண்ட பார்ப்பன சூழ்ச்சிகளில் இருந்து விடுபட வேண்டியதே நமது முதற்கடமை என்பதாகக் கருதி தென் இந்திய மக்களின் நல உரிமைச் சங்கம் என்பதாக ஒரு ஸ்தாபனத்தை ஏற்படுத்தி அதில் மேற்படி கொடுமைப்படுத்துபவர்களும், இழிவு படுத்துபவர்களுமான பார்ப்பனர்களைச் சேர்ப்பதில்லை என்கின்ற கொள்கையை பிரதானமாக ஏற்படுத்திக் கொண்டதன் மூலம் அப்பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்றும் சொல்லும்படியானதாகி 10, 20 வருஷங் களுக்கு மேலாகவே நடந்து வருவதும், அதற்கு இடையூறாக பார்ப்பனர்கள் செய்யும் தொல்லைகளும், பார்ப்பனரல்லாதார்களிலும் சிலர் வேறு வழி இல்லாமல் பார்ப்பனர்களுக்கு அடிமையாக வேண்டியிருந்ததன் பலனாய் அவர்களால் செய்யப்படும் தொல்லைகளும் ஒருவாறு பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் முன்னேற்றத்தை நிதானப்படுத்திக் கொண்டும், தடைப்படுத்திக் கொண்டும் வந்தன என்பதை நாம் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை.
இதற்கும் உதாரணம் வேண்டுமானால், பார்ப்பனரல்லாதார் இயக்கம் ஏற்பட்டது முதல் அதை அழிக்க பார்ப்பனர்களும் அவர்களது உதவியாளர்களும் செய்து வந்த தொல்லைகளில் இருந்து சமாளிக்கும் வேலையே சரியாய் இருக்கும்படியா யிருந்தும் தேர்தல்களில் இவ்வியக்கத்தார் வெற்றி பெறாமல் செய்து வந்த சூழ்ச்சிகளும், தேர்தலில் வெற்றி பெற்றாலும் பார்ப்பனரல்லாதார்களுக்குள்ளாகவே கட்சிகளை உற்பத்தி செய்து பிளவுபடுத்தி ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொள்ளச் செய்வதன் மூலம் யாதொரு உருப்படியான வேலையும் நடைபெறுவதற்கு மார்க்கமில்லாமல் சதா போர்க்களமாயிருக்கும்படி ஸ்தல ஸ்தாபனங்களையும், சட்டசபைகளையும் பார்ப்பனர்கள் செய்து வந்த தொல்லைகளுமே போதுமானதாகும்.
இது இங்ஙனமிருக்க திரு. காந்தியால் 1921-ம் வருஷம் ஆரம்பிக்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கமானது அரசியல் கொடுமைகளை ஒழிப்பதோடு மாத்திரமல்லாமல், மேற் சொல்லப்பட்ட பார்ப்பனக் கொடுமைகளையும் ஒருவாறு ஒழிக்கும்படியான மாதிரியில் சில கொள்கைகளைக் கொண்டு இருந்ததாலும் நம் போன்றவர்கள் ஆசைக்கும், அவசரத்திற்கும் தக்கபடி அவை காணப்பட்டதை முன்னிட்டு, அவ்வியக்கத்தில் கலந்து மனப்பூர்வமாக 4, 5 வருஷ காலம் உழைத்ததன் மூலமும், அது சமயம் பார்ப்பனர்களுடைய நெருங்கிய சம்மந்தம் இருக்க நேர்ந்ததன் மூலமும், அதன் பலாபலன்களில் நாமும் ஒரு பங்கு அனுபவிக்க நேர்ந்ததின் மூலமும், அவ்வியக்கத்தின் போக்கை பார்ப்பனர்கள் எந்த வழியில் திருப்பி அதன் பலனை எப்படி அடைய முயற்சித்தார்கள், முயற்சிக் கின்றார்கள் என்பதை நன்றாய் அறிய நமக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. அதிலிருந்து நமது போக்கையும் ஒரு வகையில் ஒன்றுபடுத்தி ஒரே வழியில் திருப்பி யோசிக்க வேண்டிய அவசிய முண்டாயிற்று.
பகுத்தறிவும் – மானமுமே மக்களுக்கு அவசியம்
அங்ஙனம் யோசித்ததின் பலனாக நமக்கு கிடைத்த முடிவென்ன வென்றால், நமது மக்கள் அரசியல் விஷயமாக கூச்சல் போடுவதும், முயற்சிகள் செய்வதும் சற்றும் நமக்குப் பயன்படுவதல்ல என்பதும் இவைகள் பார்ப்பனர்கள் நம்மீது செலுத்தி வரும் தங்கள் உயர்வையும், ஆதிக்கத்தையும் நிலைநிறுத்திக் கொள்ளும் சூழ்ச்சிக்கு ஏது உண்டாக்கப்பட்டிருக் கின்றதே தவிர, வேறல்ல வென்றும் இன்றைய நிலையில் நமது மக்களுக்கு வேண்டியவைகளிலெல்லாம் பகுத்தறிவும், மானமுமே முக்கியமானதென்றும் இன்றைய பார்ப்பன ஆதிக்கத்திற்கு முக்கிய காரணமும் அன்னிய ஆட்சியின் கொடுமைக்கு காரணமும் நமது மக்களுக்குப் பகுத்தறிவும், தன்மதிப்பு உணர்ச்சியும் தடைப்படுத்தப்பட்டிருப்பதே தான் என்றும் கண்டுபிடித்தோம். இதுமாத்திரமல்லாமல் நமது சமூகத்தின் முன்னேற்றத்திற்கும், சமூகத்தின் சமத்துவத்திற்கும் நாம் செய்ய் வேண்டிய வேலையெல்லாம் செய்தும் பார்த்து விட்டோம். அதாவது, பணம் கொடுத்தோம். சக சவுக்கியம் விட்nhம். சிறை சென்றோம். இன்னும் மனிதனால் உயிரைத் தவிர வேறு என்ன என்ன சாதனங்களை அலக்ஷியமாய் கருத முடியுமோ அவ்வளவையும் செய்தோம். இப்படிச் செய்தால் ஒருவரல்ல, இருவரல்ல ஆயிரக்கணக்கான பேர் லக்ஷக்கணக்கான ரூபாய்களையும் நஷ்டமடைந்து ஒரு தடவை மாத்திரம் அல்லாமல் பல தடவை “சிறையும் சென்றோம். இவ்வளவு செய்ததன்பலனாகவும் கடுகளவு கூட முற்போக்கடைய முடியாமல் போனதையும் கண்கூடாகக் கண்டோம்.
அதன் பிறகே மேல்கண்ட யோசனையில் இறங்கினோம். அது மாத்திரமல்லாமல் மற்ற நாட்டு விடுதலை நிகழ்ச்சியையும் ஆராயத் தொடங்கியதில், அவற்றிலும் அநேகமாய் ஒவ்வொரு நாடும் நம்மைப் போலவே வேறு பல முயற்சிகள் எவ்வளவோ செய்து பார்த்தும் முடியாமல் போன காலங்களில் இந்த முடிவையே கண்டுபிடித்து இந்த முயற்சியிலேயே இறங்கி கடைசியாக விடுதலை பெற்று சமத்துவம் அடைந்ததாகவும் கண்டோம். அன்றியும் உலகத்திலேயே பெருமையும், வலிமையும் கொண்ட நாடு என்று சொல்லப்படும் அய்ரோப்பா, அமெரிக்கா முதலிய தேசங்களின் உன்னத நிலைமைக்கு அவற்றின் பகுத்தறிவு வளர்ச்சியும், சுயமரியாதை உணர்ச்சியுமே முக்கியமான தென்பதையும் கண்டோம்.
சுயமரியாதை இயக்கம் எனப் பெயரிட்டது ஏன்?
சமீபகாலம் வரை கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த துருக்கி, சைனா, ஜப்பான் முதலிய தேசங்கள் வல்லரசுத் தன்மை பெற்றதற்கு அவற்றின் சுயமரியாதை உணர்ச்சி என்பதையும் கண்டோம். அதன் பிறகே நாமும் நமது தேசத்தின் விடுதலைக்கும், சமத்துவத்திற்கும், பகுத்தறிவும் தன் மதிப்புமே பிரதானம் என்பதாகக் கருதி அதன் முயற்சிக்குச் சுயமரியாதை இயக்கம் எனப் பெரியட்டோம். இவ்வியக்கம் எந்த ஒரு தனிப்பட்ட நாட்டிற்கோ, சமூகத்திற்கோ என்பதாக இல்லாமல் பொதுவாகத் தாழ்த்தப்பட்டும், இழிவு செய்யப்பட்டும் தன்மான உணர்ச்சி உண்டாகாமல் அழுத்தப்பட்டும் பகுத்தறிவை வளர்ச்சி செய்யாமல் தடை செய்யப்பட்டும் இருக்கும். எல்லா மக்களுக்கும் கொடுங்கோன்மையில் அடக்கி ஆளப்பட்டு வரும் மக்களுக்கும் பயன்படும்படியான முறையில் அமைக்க விரும்பியே இதில் பிரவேசித்துள்ளோம்.
பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுத்து மக்கள் எல்லோரும் சமம் என்கின்ற உண்மையான மனிதத் தன்மைக்குத் தாராளமாய் இடம் கொடுக்கின்ற ஒவ்வொருவருக்கும் இதில் இடமும் ஒதுக்கி வைக்க எண்ணம் கொண்டே இம்முயற்ச்சியிலீடுபட்டோம் என்றும், இம்முயற்சியானது மிகவும் கஷ்டமானதென்றும், அளவுக்கு மீறிய துன்பத்தையும், தொல்லைகளையும் விளைவிக்கக் கூடியது என்றும் நாம் நன்றாயுணர்கின்றோமாயினும் இது வெற்றி பெற்றாலொழிய நமது சமூக மாத்திரமல்ல, நமது நாடு மாத்திரமல்ல, உலக சமூகம் எல்லாவற்றிற்கும் உலக முழுமைக்கும் நிர்பயமான விடுதலையோ, சாந்தியோ, ஓய்வோ இல்லை என்கின்ற முடிவினாலும், இம்முயற்சி இன்றைய பெரியோர்கள் எனப்படும் வயது சென்றவர்களுடைய ஒத்துழைப்பும், ஆதரவும் பெற முடியாவிட்டாலும் பெரும்பான்மையான பரிசுத்த தன்மை பொருந்திய வாலிபர்களின் கூட்டுறவும், அனுதாபமும், ஆதரிப்பும் மலிந்து கிடப்பதாலும் துணிந்து இறங்கி விட்டோம்.
அலறிய ஆரியக் கூட்டத்தின் இடைவிடாப் பிரச்சாரம்
முடிவில் இதனுடைய வெற்றி தோல்வியைப் பற்றி நாம் அதிகமான கவலை எடுத்துக் கொள்ளாமல் இந்த முயற்சி சரியா தப்பா என்பதைப் பற்றி மாத்திரம் தீரயோசித்து தைரியமாய் இறங்கி இருக்கின்றோம் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம் – கடைசியாக இம்முயற்சிக்கு நாம் மாத்திரமே காரணமல்ல வென்பதையும் இன்னும் பல காரணங்கள் உண்டு என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். இந்த இயக்கம் ஏற்பட்டு இன்றைக்குக் கிட்டத்தட்ட சுமார் மூன்று வருஷமே ஆயிருந்தாலும் இதன் வளர்ச்சிக்கு அறிகுறிகள் தாராளமாய் தென்பட்டு வருவதன் மூலம் நம்பிக்கை இருக்கின்றதென்றே சொல்லுவோம். உதாரணமாக மதுரை மகாநாட்டின் போது திராவிடன் பத்திரிகை ஒரு ஆயிரத்துக்கு கீழாகவே பதிக்கப்பட்டு வந்தது. ஜஸ்டிஸ் ஆயிரத்து அயிந்நூறுக்கு கீழாகவே இருந்து வந்தது. குடிஅரசு 2,500க்கு கீழாகவே இருந்து வந்தது. நாடார் குலமித்திரன் 1,300 போலும். குமரன் 1,500 போலும் வெளியிடப்பட்டு வந்தது. இவ்வியக்கம் பரவப் பரவ இன்றைய நிலையில் திராவிடன் 8,000மாகவும், ஜஸ்டிஸ் 5,500மாகவும், குடிஅரசு 8,500ஆகவும், நாடார் குலமித்திரன் 2,000க்கு மேலாகவும், குமரன் 3,000க்கு மேலாகவும், ரிவோல்ட் என்னும் ஆங்கிலப் பத்திரிகை ஆரம்பித்த மூன்று மாதத்திற்குள்ளாகவே 1,500-ம் வெளிப்படும் படியான நிலை உண்டாயிருப்பது மக்கள் இவ்வியக்கத்தை எவ்வளவு ஆவலோடு ஆதரிக்கின்றார்கள் என்பது புலனாகும் அன்றியும் இயக்கக் கொள்கைகளும் ஆங்காங்கு அதாவது ரயிலுக்கு 30 மயில் 40 மயில் தூரமுள்ள கிராமங்களும் ஒரு வாரத்திற்கொரு முறை மாத்திரம் தபால்கள் எட்டும்படியான தூரத்தில் உள்ள கிராமங்களிலும் புகுந்து தாண்டவமாடுவதும், பெரிய பெரிய பிடிவாதக்காரர்களும் தங்கள் ஸ்தானத்தை விட்டு சற்று இறங்கி வந்து அறிவுக் கண்ணைத் திறந்து பார்க்க நேரிட்டதும் ஒன்றுக்கும் கலங்காத பார்ப்பன மடாதிபதிகளும், சாஸ்திரிகளும், புரோகிதர்களும் நடுநடுங்கி தினம் தினம் பிராம்மண மகாநாடும், வருணாசிரம மகாநாடும், ஆரியதர்ம மகாநாடும் கூட்டுவதும், பார்ப்பனப் பத்திரிகைகளும், அவர்களது கூலிப் பத்திரிகைகளும் இடைவிடாமல் புராணப் பிரச்சாரமும், காலக்ஷேப பிரச்சாரமும், புரோகிதப் பிரச்சாரமும் செய்வதும் பார்ப்பவர்களுக்கு இயக்கத்தின் தத்துவம் விளங்காமல் போகாது. மற்றும் இதன் கொள்கை களும், நோக்கங்களும் செங்கற்பட்டில் சுயமரியாதை வீரர்களில் ஒருவரான ஸ்ரீ எம்.கே.ரெட்டி அவர்களின் முயற்சியாலும், ராமனாதபுரம் ஜில்லா போர்டு தலைவர் ஸ்ரீ டப்ளியூ பி.ஏ. சௌந்திரபாண்டிய நாடார் தலைமையிலும் நடைபெறும். மகாநாட்டின் மூலம் தெரியவரும்.”
தமிழ் மாகாண சுயமரியாதை மாநாடு (திராவிடன் மலர்)
பார்ப்பன ஆதிக்கத்திலிருந்த காங்கிரஸ் கட்சியில் இருந்து தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்க வேண்டிய அவசியத்தை அவரே எடுத்துரைத்துள்ளதைப் படித்தீர்கள் அல்லவா?
1917 அக்டோபர் 7 அன்று தனது புகழ்பெற்ற ஸ்பர்டாங்க் சாலை உரையில் நீதிக்கட்சி தோற்றுநர்களில் ஒருவரான திராவிட லெனின் டாக்டர் டி.எம்.நாயர் என்ன பேசினார் தெரியுமா?
“நான் பலமுறை காங்கிரஸ்காரரான டாக்டர்
பி.வரதராசுலுவுடன் பேசிக் கொண்டிருந்திருக்கிறேன். நான் சொல்லுவேன். ‘நான் எதிர்பார்ப்பதைவிட சீக்கிரமாகத் தாங்களும் தங்கள் தோழர்களான நாயக்கரும். பிள்ளைவாளும், முதலியார்வாளும் அளவுக்கு மீறி விளம்பரப்படுத்தும்படியான பூதாகரமான தோற்றமாகக் கட்சியை வளரச் செய்திருக்கும்படியான தங்கள் காங்கிரஸ் கட்சியிலுள்ள, தங்களைப் போன்ற மற்ற மற்ற பார்ப்பனரல்லாத பிரமுகர்களும் எதிர்பாராததைவிட முன்னதாகவும், என் ஜஸ்டிஸ் கட்சி லட்சியத்தை நாடி நீரெல்லாம் வந்தேதானாக வேண்டும்; வேறு வழியே இல்லை சிந்தித்துப் பாருங்கள்!’என்று சொல்வது வழக்கம்”
டாக்டர் டி.எம்.நாயரின் முன்னோக்கு அடுத்த சில ஆண்டுகளிலேயே உண்மையாயிற்று. அவரது விருப்பமும் வென்றது.
வளரும்