சென்னை, நவ.21– ரூ.1,792 கோடியில் பாக்ஸ்கான் ஆலை விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. இதன் மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
பாக்ஸ்கான் ஆலை
சென்னையை அடுத்த சிறீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் சிப்காட் வளாகத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் உள்ளது. இங்கு ரூ.2,601 கோடி முதலீட்டில் 3.55 லட்சம் சதுர அடி பரப்பளவில் பாக்ஸ்கான் ஆலை செயல் படுகிறது. இந்த ஆலையில், ஆப்பிள் அய்போன் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆலையில், சுமார் 40 ஆயிரம் பேர் வேலை பார்த்து வருகிறார் கள். தற்போது, பிரீமியம் வகை அலை பேசிகளை தயாரிக்க பாக்ஸ்கான் ஆலை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, கூடுதலாக ரூ.1,792 கோடியை முதலீடு செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
அதாவது, 3.55 லட்சம் சதுர அடியாக உள்ள ஆலையின் கட்டுமான பகுதியை 4.79 லட்சம் சதுர அடியாக உயர்த்த பாக்ஸ்கான் ஆலை நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. இதன் மூலம் கூடுதலாக 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, ஆலையை விரி வாக்கம் செய்ய பாக்ஸ்கான் நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்து உள்ளது. அனுமதி கிடைத்ததும் ஆலை விரிவாக்கப் பணிகள் நடைபெறும். ஒரு சில ஆண்டுகளில் அலைபேசி உற்பத்தியும் தொடங்கும்.