திருச்சிக்கு காந்தியார் வந்திருந்த சமயம் டாடர் ராஜன் பங்களாவில் 10.2.1934 பகல் 1.30 மணிக்கு திருச்சி சுயமரியாதை சங்கத்தாருடன் காந்தியார் 35 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார். சுயமரியாதைச் சங்கத்தின் சார்பாக தோழர்கள் ராமசுப்பிரமணியன், கே.என்.வாசுதேவன், ஏ.சுப்பிரமணியம், டி.சம்பந்தம், ஏ.நடராஜன, பிரான்சிஸ், எம்.சிங்காரம் ஆகியோர் சென்றார்கள். அப்போது மேற்படி சங்க உபதலைவர் தோழியர் எஸ்.நீலாவதி அவர்கள் காந்தியாரைக் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அச்சமயம் தோழர்கள் சி.ராஜகோபாலாச்சாரியார், தோழியர் மீராபென், தோழர்கள் தாக்கூர், டி.வி.எஸ்.சாஸ்திரி, இன்னும் சிலர் கவனித்துக் கொண்டிருந்தனர். காந்தியார் தமது ஓய்வு நேரத்தில் ராட்டையில் நூல் நூற்றுக் கொண்டே பதில் அளித்தார்.
1 (அ) கேள்வி: தீண்டாமையை ஒழிப்பதில் விருப்பமில்லாதவர்களிடமிருந்தும் அனுதாப மில்லாதவர்களிடமிருந்தும் தங்களுக்குப் பணம் வருவிக்கப்படுகிறதென்பதை தாங்கள் அறிவீர்களா? அப்படியானால் அது முறையா?
பதில்: தீண்டாமையை ஒழிப்பதில் ஆர்வமற்றவர் களிடமிருந்தும் பணம் வசூல் செய்யப்படுவதை நான் அறியேன். எனக்காகக் கொடுக்கப்படும் பணங்களெல்லாம் தீண்டாமை ஒழிப்பதற்கு மனப்பூர்வமாக ஆதரவளிக்கின்றவர்களிடமிருந்தே வருவதாக நான் நினைத்தேன். என் கொள்கைக்கு முரண்பட்டவர்களிடமிருந்து நிர்ப்பந்தத்தின்பேரில் பணம் வருவிக்கப்படுவதை நான் விரும்பவில்லை.
2 கேள்வி: உங்களுடைய பிரசங்கங்கள் எல்லா வற்றிலும் அடிக்கடி தாங்கள் கடவுளைப் பற்றியும் அவரது தன்மையைப் பற்றியும் அழுத்தமாகக் கூறுவதின் அபிப்பிராயமென்ன? அவ்வாறு கூறுவதால் ஏழை மக்களின் நன்மைக்கு அது பயன்படக் கூடுமென்று கருதுகின்றீர்களா?
பதில்: ஆம்! எனக்கு ஆண்டவன் ஒருவன் உண்டு என்ற மனப்பூர்வமான நம்பிக்கை இருப்பதனால் அதை எல்லோருக்கும் எடுத்துக்கூறுவதில் நன்மை பயக்குமென்று கருதுகின்றேன்.
2 (ஆ) கேள்வி: கடவுளிடத்தில் நம்பிக்கையற்ற வர்களை கடவுளை நம்புமாறு தாங்கள் வற்புறுத்துவது முறையா?
பதில்: என் மனதில் தோன்றியதை இவ்வுலகிலுள்ள எல்லோருக்குமே எடுத்துக் கூறுவது முறையென்றும் அவ்வாறு கூறுவதற்கு எனக்கு உரிமையிருக்கிறது என்றும் நான் கருதுகின்றேன்.
3 கேள்வி: கடவுளிடத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட தாங்கள் அவனின்றி ஓர் அணுவும் அசைவதில்லை என்ற கொள்கையை ஒப்புக் கொள்ளுகிறீர்களா?
பதில்: ஆம்! அழுத்தம் திருத்தமாக ஒப்புக் கொள்ளுகின்றேன். இவ்வுலகில் நடப்பது ஒவ்வொன்றும் அதன் ஆளுமையின் பேரிலேயே நடக்கின்றது.
3 (ஆ) கேள்வி: அப்படியானால் மதங்கள் தோன்றிய காலங்கள் தொட்டு இன்றுவரை நாஸ்திகர் ளையும் அக்கடவுள் படைப்பானேன்?
பதில்: நாஸ்திகர்களையும் கடவுள் படைத்தா ரென்பது உண்மையே. ஆனால் அவர்கள் ஆஸ்தி கர்களாகவும் நாஸ்திகர்களாகவும் மாறுவது அவரவர்களைப் பொறுத்ததது.
4 கேள்வி: தாங்கள் தொழிலின் பேரிலேயே ஜாதி பிரிக்கப்பட்டிருக்கிறதென்று அடிக்கடி கூறுகின்றீர்களல்லவா?
பதில்: ஆம்:
ஜாதியில் உயர்வு தாழ்வு என்பதை வெறுக்கிறேன்
4(ஆ) கேள்வி: அப்படியானால் ஜாதியிலேயே ஒன்று உயர்வாகவும் ஒன்று தாழ்வாகவும் கருதப்படுவதனால் தொழில்முறையிலும் உயர்வு தாழ்வு கருதப்பட வேண்டுவது அவசியந்தானே?
பதில்: ஜாதியில் உயர்வு தாழ்வு இருக்கவேண்டு மென்று கூறுவதை நான் அடியோடு வெறுப்பதோடு அப்பேதத்தை ஒழிப்பதற்காகத் தான் பாடுபட முன்வந்திருக்கின்றேன். சமபந்தி போஜனம் செய்வதாலும் கலப்பு மணம் செய்வதாலும் ஜாதி கெட்டுவிடுமென்று நான் கருதுவதில்லை. ஆனால் ஜாதிக்குரிய தொழிலை ஒருவன் புறக் கணிப்பானேயானால் அவன் ஜாதி கெட்டவனாகிறான். தொழிலில் உயர்வு தாழ்வு இருப்பதாகக் கருதுவதும் மடத்தனமேயாகும்.
பூகம்பத்திற்கு கடவுளின்
கோபம்தான் காரணமா? எப்படி?
5 கேள்வி: தாங்கள் பீகாரில் நடந்து பூகம் பத்திற்கு கடவுளுடைய கோபமே காரணமென்று கூறினீர்கள். இதை நீங்கள் (Serious) உண்மையாகவே கருதுகின்றீர்களா?
பதில்: ஆம்! பீகாரில் நடந்த பூகம்பத்திற்கு கடவுளுடைய கோபம்தான் காரணமென்பது என்னுடைய அபிப்பிராயம். நான் கூறுவது அனைத்தையும் உண்மையாகவே கருதிக் கூறுகிறேன்.
5 (ஆ) கேள்வி: அப்படியானால் சைனா, ஜப்பான் முதலிய நாடுகளில் நடந்த பூகம்பத்திற்குக் காரணமென்ன?
பதில்: அந்நட்டு மக்கள் செய்த தீமையேதான் அதற்குக் காரணமாயிருக்க வேண்டும்.
5 (இ) கேள்வி: இந்தியாவில் பீகாரில் மாத்திரம் பூகம்பம் உண்டாவனேன், அது சென்னையில் உண்டாகாதிருப்பானேன்?
பதில்: அது கடவுளுடைய சித்தம். கடவுளுக்கு பூகோள சாஸ்திரத்தில் கட்டுப்பாடு அதிகமில்லை.
6 கேள்வி: வர்ணாசிரம தர்மப்படி ஒரு பிராமணப் பெண்ணை ஒரு வைசியன் விவாகம் செய்து கொள்ளலாமா?
பதில்: இதற்குப் பதில் உங்களது நான்காவது கேள்வியிலேயே கூறியிருக்கின்றேன். கலப்பு மணம் செய்வதினால் வர்ணாசிரம தர்மம் கெட்டுப்போவதில்லை என்பதுவே எனது நம்பிக்கை.
இரு மதத்தினரிடையே சகோதரத்துவம்
எவ்வாறு நிலவும்?
7 கேள்வி: இந்து மதத்தைப் பலப்படுத்துவதற்காக தாங்கள் கங்கணம் கட்டிக்கொண்டு பிரச்சாரம் செய்து அதன் பயனாய் அரசியல் சுதந்திரம் அடையவேண்டுமென்று நினைப்பதைப்போல் கிறிஸ்துவர்களும் முகமதியர்களும் அவரவரர்கள் மதத்தைப் பலப்படுத்த ஆரம்பித்து விட்டால் சகோதரத்துவம் வெறிபிடித்த இரு மதத்தினிரிடையே எவ்வாறு நிலவக் கூடும்?
பதில்: இந்து மதத்தைப் பலப்படுத்தி அதை அரசியல் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்ள நினைத்திருப்பதாக நீங்கள் கருதுவது தவறாகும். நான் இந்து மதத்தைப் பரிசுத்தப்படுத்த முயல்கின்றேனேயல்லாது பலப்படுத்த முயலவில்லை. இவ்வாறு நான் இந்துமதத்தைப் பரிசுத்தப்படுகின்ற வகையில் மற்ற மதங்களும் பரிசுத்தமடையுமென்பது என்னுடைய நம்பிக்கை.
7 (ஆ) கேள்வி: அது எப்படி சாத்தியமாகும்?
பதில்: அது சாத்தியமான காரியமென்பதுதான் எனது அபிப்பிராயம்.
8 கேள்வி: நீங்கள் இயந்திர வளர்ச்சியை ஆதரிக்கின்றீர்களா?
பதில்: இல்லை
8 (ஆ) கேள்வி: அப்படியானால் நூதன முறையில் அதிகமாக நூல் நூற்கக்கூடிய ஓர் ராட்டையைக் கண்டுபிடிப்பவர்களுக்கு லட்சம் ரூபாய் இனாம் கொடுப்பதாக கூறினீர்களே? அது ஓர் இயந்திர சாதனமல்லவா?
பதில்: இல்லை
8 (இ) கேள்வி: இப்பொழுது நடைமுறையில் இருக்கின்ற இயந்திரங்களில் எவை, எவற்றை நாம் ஆதரிக்கலாமென்று தாங்கள் கூறக் கூடுமா?
பதில்: நூல் நூற்கும் இந்த ராட்டினம், சிங்கர் குயில் மிஷின் முதலியவை.
8 (ஈ) கேள்வி: ஒரு மணிக்கு ஒரு ஷர்ட்டு தைக்கும் சிங்கர் சூயிங் (sewing) மிஷினைவிட ஒரு மணிக்கு நூறு ஷர்ட்டு தைக்கும் ஒரு சிங்கர் சூயிங் மிஷின் கிடைக்குமேயானால் அதை ஏற்றுக் கொள்வதில் தங்களுக்கு என்ன தடை?
பதில்: தடையொன்றுமில்லை. ஆனால் சிங்கர் சூயிங் மிஷின் ஒரு குடிசைக்குள்ளும் இருந்து வசதியாக வேலை செய்யக்கூடியதாக இருக்க வேண்டும்.
8 (உ) கேள்வி: எந்த இயந்திரமாயிருப்பினும் ஒரு குடிசைக்குள் இருந்து செய்யக்கூடியதாயிருப்பின் அதை ஏற்றுக்கொள்ள உங்களுக்குத் தடை யில்லையே?
பதில்: பல ஆயிரம் மக்களின் வயிற்றில் மண்ணைப் போடும் இயந்திரம் எதுவாயிருந்தாலும் அதை நான் ஆதரிக்கத் தயாராயில்லை.
8 (ஊ) கேள்வி: 8 மணி நேரம் சரீர சிரமத்தோடு இயந்திரத்தின் உதவியில்லாமல் வேலை செய்து 8 அணா பெறும் ஏழைகளுக்கு இயந்திரங்களின் உதவியைக் கொண்டு நான்கு மணி நேரத்திலேயே அதிக சிரமமில்லாது அதே கூலியைப் பெறுதல் இயந்திரத்தின் நன்மையால் ஆகக்கூடியதென்பதை தாங்கள் எவ்வாறு மறுக்கக்கூடும்?
பதில்: நீங்கள் கூறும் இத்திட்டம் நடைமுறையில் லாபகரமாயிராது. அதனால் முதலாளிகளுக்கு நஷ்டமே ஏற்படும். ஏனென்றால் விலையுயர்ந்த இயந்திரங்களை வாங்கி 2 மணி நேரம் 1 மணி நேரம் மட்டும் வேலை செய்வதால் மற்ற நேரங்களெல்லாம் இயந்திரத்திற்கு வேலையில்லாது வீணாகப் போய் விடுகிறது.
8 (எ) கேள்வி: இதனால் பணம் படைத்த முதலாளிகளுக்கேயன்றி ஏழைகளுக்கு எந்த விதத்தில் நஷ்டம்?
பதில்: இருவருள் எப்படியோ ஒருவருக்கு நஷ்டம் தானே.
9 கேள்வி: கூட்டுறவு ஒரு நாட்டின் முன்னேற்றத் திற்கு அத்தியாவசியமென்பதை தாங்கள் ஒப்புக் கொள்ளுகிறீர்களா? அப்படியானால் சுயராஜ்ய மடைவதற்கு சாதனமாக தாங்கள் கையாளும் கதர்த் திட்டம் அத்தகைய கூட்டுறவை நிலைநாட்டக் கூடியதா?
பதில்: ஆம்! கூட்டுறவு நாட்டின் முன்னேற்றத்திற்கு அவசியமென்பதையும் கதர்த் திட்டம் கூட்டுறவையே அடிப்படையாகக் கொண்டது என்பதுதான் என் அபிப்பிராயம்.
10 கேள்வி: உலகத்தில் ஏற்படும் யுத்தங்களின் மறைவிற்கு என்ன செய்ய வேண்டும்? தேசிய உணர்ச்சியென்ற தன்மைதான் யுத்தத்திற்கு மனி தனைத் தூண்டுகின்றதென்ற உண்மையை தாங்கள் ஒப்புக் கொள்ளுகின்றீர்களா?
பதில்: ஆம்! யுத்தங்களெல்லாம் ஒழிய வேண்டு வதுதான். ஆனால் தேசிய உணர்ச்சி மனிதனுக்கிருக்க வேண்டுவதுதான்.
நான் ஒரு பொதுவுடைமைக்காரனே!
10 (ஆ) கேள்வி: தாங்கள் பொதுவுடைமைத் திட்டத்தை வெறுக்கின்றீர்களா? அப்படியானால் இந்தியாவிற்கு எத்தகைய ஆட்சி முறை வேண்டுமென்பது தங்களுடைய அபிப்பிராயம்?
பதில்: நான் பொதுவுடைமையை வெறுப்பவ னென்று நீங்கள் கூறுவது எனக்கு ஆச்சரியத்தை விளைவிக்கின்றது. என் நண்பர்கள் பலர் என்னை பொதுவுடைமைக்காரனென்று கேலியும் செய்கின்றார்கள்! உண்மையிலேயே நான் ஒரு பொதுவுடைமைக்காரனே! ஆனால் பொதுவுடைமைக்காக பலாத்கார முறையைக் கையாள வேண்டுமென்பது என் கொள்கைக்கு முரண்பட்டது இந்தியாவுக்கு பொதுவுடைமைத் திட்டமே அவசியமானதென்பதை நான் மறுப்பதற் கில்லை.
இந்துக்களுக்கு மட்டும்
உழைப்பதின் நோக்கமென்ன?
11 கேள்வி: வட்டமேஜை மகாநாட்டில் இந்தியா வின் ஏக ஜன நாயகத் தலைவர் தாங்கள் தான் என்று கூறிய நீங்கள் இந்தியாவில் ஒரு பகுதியினராகிய இந்துக்களுக்கு மட்டும் உழைப்பதின் நோக்கமென்ன?
பதில்: நான் இந்துவானதினால் முதலில் என் மதத்தை பரிசுத்தப்படுத்தவேண்டுவது என் வேலை என்று நினைக்கின்றேன். இக்காரியம் முடிந்துவிடுமேயானால் மற்ற மதங்களைப் பற்றியும் கவலை எடுத்துக் கொள்வதில் ஆட்சேபனையில்லை. மற்ற மதங்களைப் பற்றியும் சீர்திருத்தப் பல மற்ற மதத் தலைவர்கள் தயாராய் இருப்பதாகவும் எனக்குக் கடிதமெழுதியிருக்கிறார்கள். அவர்கள் காரியங்கள் வரக்கூடுமானால் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
12 கேள்வி: தாங்கள் அடிக்கடி தங்கள் கொள்கைகளை மாற்றிக் கொள்கிறீர்களென்பதையும் மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறதென்பதையும் ஒப்புக் கொள்ளுகிறீர்களா?
பதில்: இல்லை, நான் என் கொள்கையை மாற்றிக் கொண்டதாகவோ, மாற்றிக் கொள்ள வேண்டியதாகவோ என்றும் ஏற்பட்டதில்லை. என்றும் என் கொள்கை ஒரே கொள்கைதான்.
12 (ஆ) கேள்வி: சுயராஜ்யம் வந்தவுடனே ஒரு சட்டத்தின் மூலம் தீண்டாமையை இந்த நாட்டைவிட்டு அடியோடு ஓட்டிவிடக்கூடுமென்று கூறிய தாங்கள் இன்று தீண்டாமையை நீக்குவதற்கு வேறு மார்க்கத்தை கையாள நினைத்து வருவது எதனால்?
பதில்: அப்பொழுது நான் நினைத்தது அது சரி. இப்பொழுது இருக்கும் இந்த நிலைக்கும் நான் கையாளும் இந்த முறை சரி.
கடவுள் நம்பிக்கையாளர்
தோல்வி அடையலாமா?
13 கேள்வி: கடவுளிடத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருக்கின்ற தாங்கள் பல காரியங்களிலும் தோல்வியடைந்தீர்களென்பது உண்மைதானே? இல்லையானால் வட்டமேஜை மகாநாட்டிலும், தண்டி உப்பு சத்தியாக்கிரகத்திலும் நீங்கள் அடைந்தது பெருந்தோல்வியென்பதை நீங்கள் மறுக்கின்றீர்களா?
பதில்: தோல்வி என்பதையே நான் அறியேன். நான் வட்டமேஜை மகாநாட்டிலும், தண்டி சத்தியாக்கிரகத்திலும், தோல்வியடைந்தேன் என்பதை நீங்கள் நிரூபிக்க முடியுமா?
13 (ஆ) கேள்வி: வட்டமேஜை மகாநாட்டில் தாங்கள் தோல்வியடையவில்லை என்றால் ஏர்வாடா ஜெயிலில் உயிர்விடுவேனென்று உண்ணாவிரதம் இருந்தது எதற்கு?
பதில்: என் தோல்வியைக் குறித்து நான் உண்ணாவிரதமிருக்கவில்லை. தோழர் ராம்சே மாக்டோனால்ட் அவர்கள் தனித் தொகுதி திட்டத்தைப் போக்கவே உண்ணாவிரதமிருந்தேன். நான் வட்டமேஜை மகாநாட்டில் தோல்வியுற்றே னென்று கூறுவதற்கு பதிலாக நான் வெற்றி யடைந்தேனென்றும் என்னை வட்டமேஜை மகாநாட்டினர் நன்கு பயன்படுத்திக் கொண்டாரென்றும் கூறுவீர்களானால் அது மிகவும் பொருத்தமுடையதாயிருக்கும்.
தீண்டாமை ஒழிப்பில் சுயமரியாதை
வாலிபர் – பெண்களின் பணி வெல்லட்டும்
மேற்கண்ட சம்பாஷணை முடிந்து காந்தியாரிடம் வந்தனம் கூறி திரும்புகையில் அவர் கூறியதாவது:
தோழர்களே! என்னிடம் நீங்கள் இதுகாறும் வார்த்தையாடியதற்காக நான் மிகவும் சந்தோஷப்படுகின்றேன். உங்களுக்குப் போதிய நேரம் அளிக்கப்பட்டதால் நீங்கள் திருப்தி அடைந்திருப்பீர்களென்று நம்புகின்றேன். என்னை எத்தகைய கேள்விகள் கேட்பதற்கும் உரிமையிருப்பதோடு அதற்கு பதில் சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன் என்பதை நான் நன்கு உணருகிறேன். நீங்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு விடுத்த பதில்களும், ஒரு புறமிருக்க தீண்டாமை என்ற பேயை இந்நாட்டிலிருந்து ஓட்டுகின்ற வகையில் சுயமரியாதையுள்ள வாலிபர்களும் பெண்களுமாகிய நீங்களும், நாங்களும் ஒரே நிலையிலிருக்கின்றோம். என்ன பாடுபட்டும் தீண்டாமையை ஒழிப்பதற்கு நீங்கள் முன் வாருங்கள் என்று நான் உங்களைக் கேட்டுக் கொள்கின்றேன். இதே வேண்டுகோளைத்தான் நான் மதுரை, கொல்லம் முதலிய சுயமரியாதை நண்பர்களிடமும் தெரிவித்தேன். அவர்களும் என் விருப்பத்திற்கு இணங்குவதாக கூறினார்கள். நீங்களும் இவ்வாறு செய்வீர்களென்று நம்புகின்றேன்.
– ‘நகரதூதன்’, 18.2.1934