சென்னை, நவ. 20- 2024-2025ஆம் ஆண்டிற்கான 9 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை செய்து நூலுரிமைத் தொகை ரூ.90 லட்சத்தை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.
சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் 18.11.2024 அன்று 2024-2025ஆம் ஆண்டிற்கு 9 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை செய்து நூலுரிமைத் தொகை ரூ. 90 லட்சம் வழங்கி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
அதில், முதலமைச்சர் ஆணைக் கிணங்க, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், இன்றைக்கு ஒன்பது தமிழறிஞர்களுக்கான நூல்களை நாட்டுடமையாக்கப்பட்டு, விருது வழங்கப்பட்டிருக்கிறது.
அதேபோல, நினைவில் வாழக்கூடிய கவிஞர்களுடைய குடும்பத்தாருக்கு அவர்களுடைய மரபுரிமை வாரிசுதாரர்களுக்கு இந்த விருதுகள் தலா 10 லட்சம் ரூபாய் வீதம் முதலமைச்சர் ஆணைக்கிணங்க வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களும் நீண்ட நாட்களாக இந்த விருதுகளை எதிர்ப்பார்த்திருந்தார்கள்.
தங்கள் குடும்பத்தார் கவிஞர்கள் எழுதிய நூல்களை எல்லாம் நாட்டுடைமையாக்குவார்கள் என்று எதிர்ப்பார்த்துக் கொண்டி ருந்தார்கள். முதலமைச்சர் அந்த எதிர்ப்பார்ப்பை ஈடு செய்யக் கூடிய வகையில் சட்டமன்ற அறிவிப்பிற்கிணங்க இன்றைக்கு அதை நாட்டுமையாக்கப்பட்டு, அவர்களுக்கு பரிசுத் தொகை தலா 10 லட்சம் ரூபாயும் வழங்கப் பட்டிருக்கிறது. அந்த வகையில், அவர்கள் எல்லாம் அந்த விருதுகளை மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும், நாட்டுடைமையாக்கப் பட்டிருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். தமிழ் அறிஞர்களுக்கு மரியாதை செய்கின்ற வகையிலும், மேலும் தமிழ் மொழியை செம்மைப்படுத்துகின்ற வகையிலும் முதலமைச்சர் ஆணைக்கிணங்க, இன்றைக்கு தமிழ் வளர்ச்சித் துறை அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை இந்த நேரத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே.ராஜாராமன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அருள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.