ராய்ப்பூர், நவ.20- சத்தீஷ்கார் மாநிலம் சுராஜ்பூர் அருகே வனப் பகுதியையொட்டி உள்ள சவரனா கிராமத்தை சேர்ந்த நான்கி பாய் (வயது 65) என்பவர் காரணம் தெரியாத முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
தகவலறிந்த காவல்துறை யினர் பெண் உடலை மீட்டு உடற் கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பெண் சாவில் சந்தேகம் இருப்பதாக அறிந்து விசாரித்தனர். அப்போது அங்கு வசித்து வரும் குடும்பம் ஒன்று அந்த பெண்ணை அடித்துக் கொன்றது தெரிய வந்தது. இதுகுறித்தான தகவல் பின் வருமாறு:-
சவரனாகிராமத்தை சேர்ந்தவர் பிரன் சாய்.
திருமணமான இவருக்கு 3 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய மகன் ஒருவர் தற்கொலை செய்து கொண் டார். மகனின் சாவுக்கு நான்கி பாய் சூனியம் வைத்ததே காரணம் அந்த குடும்பம் நம்பியது. இதனையடுத்து நான்கி பாயை பழித்தீர்க்க முடிவு செய்தது.
அதன்படி நிகழ்வன்று வீட்டில் நான்கிபாயை, பிரன் சாய் மற்றும் அவருடைய மனைவி மற்றும் 2 மகன்கள் அடித்துக் கொன்றனர். பின்னர் அவருடைய உடலை அங்குள்ள காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்று மரத்தில் கயிறுக்கட்டி தொங்கவிட்டுள்ளனர். இதுதொடர்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட் டனர்.