சென்னை, நவ.20- அரசு, அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகளில் ஓய்வுபெறும் நிலையில் உள்ள பேராசிரியர்களுக்கு அடுத்தாண்டு மே 31 வரை மறுநியமனம் நீட்டித்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;
அரசு, அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஓர் கல்வி ஆண்டின் இடையில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறும் நிலை எழும் பொழுது மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படும் என்ற காரணத்தால், அவ்வாசிரியர்களை வயது முதிர்வு மாதம் ஓய்வு பெற அனுமதித்து மீண்டும் அக்கல்வி ஆண்டின் இறுதி வரை மறுநியமனம் செய்யும் முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான பாட வகுப்புகள் ஏப்ரல் முதல் வாரத்துடன் முடிவடைந்து விடுவதாலும், மே மாதத்தில் தேர்வுகள் / விடைத்தாள் திருத்தும் பணிகள் மட்டுமே நடைபெறுவதாலும், கல்வி ஆண்டின் இடையில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி வரை மறுநியமனம் வழங்கி ஆணையிடப்பட்டது. முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலனை கருதிற்கொண்டு,
நிர்வாக பதவிகளான கல்லூரி கல்வி இணை இயக்குநர் / மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் / கல்லூரி முதல்வர் மற்றும் இதர கல்விசார் பணியாளர்களான கல்லூரி நூலகர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பதவிகள் நீங்கலாக கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு சில நிபந்தனைகளுக்குட்பட்டு 2025 மே மாதம் 31 வரை மறுநியமனம் நீட்டித்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா விண்வெளி மய்யத்தில் இந்தியாவின் ஜிசாட்-20 செயற்கைக் கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது!
வாசிங்டன், நவ. 20- இந்தியாவின் தகவல் தொடர்புக்கான அதிக எடைகொண்ட ஜிசாட்-20 செயற்கைக்கோள் அமெரிக்காவில் நேற்று (19.11.2024) வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
விண்வெளி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் இஸ்ரோவின் செயற்கைக்கோள் மய்யம் மற்றும் திரவ உந்து விசை அமைப்பு மய்யம் இணைந்து தகவல் தொடர்புக்காக 4 ஆயிரத்து 700 கிலோ எடை கொண்ட ஜிசாட்-20 செயற்கைக்கோளை உருவாக்கி இருந்தது. இதனை, அமெரிக்காவில் எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ், பால்கன்-9 ராக்கெட்மூலம், புளோரிடா மாகாணம் கேப்கனாவெர லில் உள்ள நாசா கென்னடி விண்வெளி மய்யத்தில் உள்ள ஏவுதளம் காம்ப்ளக்ஸ்-40இல் இருந்து நேற்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இது இஸ்ரோ மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் இடையேயான பல விண்வெளி ஒத் துழைப்புகளில் முதன்மையானது.
துல்லியமான சுற்றுப்பாதையில்
நிலை நிறுத்தம்
இதுகுறித்து இஸ்ரோவின் வர்த்தகப் பிரிவான நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராதாகிருஷ்ணன் துரைராஜ் கூறுகையில், ‘ஜிசாட்-20 என்ற தகவல் தொடர்புக்கான செயற்கைக் கோளை துல்லியமான சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது’ என்றார்.
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகையில், ‘இந்த செயற்கைக்கோள் ஓரிரு மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும்போது, 48 ஜி.பி. பி.எஸ்.டேட்டா டிரான்ஸ்மிஷன்’ என்ற நவீன திறனுடன், இந்த உயர் செயல்திறன் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவைகளை நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மேம்படும். இந்தியாவின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்குத் தேவையான தகவல் தொடர்பு உள்கட்டமைப்புக்கு தரவு பரிமாற்ற திறனை சேர்க்கும். இந்த செயற்கைக்கோள் 14 ஆண்டுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும்.
விமானத்தில் இணையதள வசதி
இந்தியா முழுவதிலும் விமானத்தில், இணையதளம் அதாவது இன்டர்நெட் வசதியை கொண்டு வரவேண்டும் என இந்தியா சமீபத்தில் விதிகளை மாற்றியது. அந்த புதிய விதிகளின்படி, விமானத்தில் பயணிக்கும் பயணிகள் இன்டர்நெட் சேவையை வைபை மூலம் பயன்படுத்த முடியும்.
ஆனால், விமானத்தில் மின் னணு சாதனங்கள் உதாரணம் செல்பேசி, மடிக்கணினி போன்றவற்றை பயன்படுத்த அனுமதித்தால் மட்டுமே இந்த சேவையைப் பயன்படுத்த முடியும். இதனால், இஸ்ரோவின் இந்த ஜிசாட்-20 செயற்கைக்கோள் எதிர்காலத்திற்கு அடுத்தகட்ட படியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது’ என்றனர்.