மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மெய்தி மற்றும் குக்கி ஆகிய இரு சமூக மக்களிடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இந்த மோதல் காரணமாக இரு தரப்பையும் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்டோரின் உயிர் பறிக்கப்பட்ட நிலையில், இன்று வரை இந்த பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வும் எட்டப்படவில்லை.
இந்த நிலையில் தற்போது ஒரு தரப்பினர் கடத்திக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் மணிப்பூர் பற்றி எரிகிறது. மணிப்பூர் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் வீடுகள் முற்றுகையிடப்பட்டுள்ளன.
இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. மணிப்பூர் கலவர விவகாரத்தில் உருப்படியாக ஒன்றிய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சொல்லுவதில் உண்மை இருக்கிறது – நியாயம் இருக்கிறது.
இந்த நிலையில், மணிப்பூரில் பாஜக கூட்டணியில் இருந்து தேசிய மக்கள் கட்சி அதிரடியாக விலகியுள்ளது. பாஜகவுக்கான ஆதரவை விலக்கிக் கொள்வதாக தேசிய மக்கள் கட்சி அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில், டில்லியில் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்டமுடிவின்படி, அங்கு அமைதியை நிலைநாட்ட 5000 ஆயுதப்படை காவலர்களை அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளதாம்.
இந்த நிலையில், மணிப்பூர் நிலவரம் குறித்து, பேசியுள்ள மேனாள் ஒன்றிய அமைச்சரும், மூத்த தலைவருமான ப.சிதம்பரம், மணிப்பூரில் மேலும் 5,000 மத்திய ஆயுதப்படை காவலர்களை குவிப்பது – அம்மாநில பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான வழியல்ல. அம்மாநில முதலமைச்சர் பைரன் சிங்தான் மணிப்பூர் பிரச்சினைக்குக் காரணம். அவரை பதவியில் இருந்து நீக்குவதே அறிவார்ந்த செயல் என பிரதமர் மோடிக்கு அறிவுறுத்தி உள்ளார்.
உண்மையான மாநில சுயாட்சி இருந்தால் தான் மெய்தி, குக்கி, நாகா மக்கள் மணிப்பூரில் ஒற்றுமையாக வாழ முடியும் என்ற புரிதல் அவர்களுக்கு வர வேண்டும் என கூறியிருப் பதுடன், பிரதமர் மோடி பிடிவாதத்தை விட்டு விட்டு மணிப்பூருக்குச் சென்று அம் மக்களின் துயரங்களையும், பாதிப்புகளையும் கோரிக்கைகளையும் பணிவுடன் கேட்டறிவதே சிறந்த அரசியல் பண்பாக இருக்கும் எனவும்
ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக நாடு என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டும் – இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டமைப்பு என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறியிருந்தும், தேர்தலில் வெற்றி தோல்விகளைக் கடந்து அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானது ஒன்றிய அரசு என்ற பொறுப்புணர்ச்சியையும் புறந்தள்ளி, மணிப்பூர் இந்தியாவில் ஒரு மாநிலம் என்பதை அறவே மறந்து – நாடே அதிர்ச்சி அடையக் கூடிய வகையில் ஒவ்வொரு குடிமகனும், குடிமகளும் நாளும் செத்து செத்துப் பிழைக்கும் அவலம், மணிப்பூர் மாநிலமன்றி, வேறு எந்தப் பகுதியையும் உலகில் காண முடியாது.
இதற்குப் பொறுப்பேற்க வேண்டியது நூற்றுக்கு நூறு ஒன்றிய பிஜேபி அரசே!
மற்ற மற்ற மாநிலங்களில் தேர்தல் நடந்தாலும் – அது ஏதோ மணிப்பூர் மாநிலத்தில் நடந்தது என்று அலட்சியப்படுத்தாமல் – ஒன்றிய பிஜேபி அரசின் பொறுப்பற்ற – மக்கள் நல அரசு என்ற கடமையைத் தவற விட்டதன் அடிப் படையில், அகில இந்திய அளவில் பிஜேபிக்கு ஒரு முடிவை ஏற்படுத்த வேண்டும் என்பது ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள, மக்கள் நல் வாழ்வில் அக்கறையுள்ள ஒவ்வொரு குடிமக(ளி)னின் கடமையாகும்.