மும்பை, நவ.19– நாட்டின் முதன்மை மாநிலமாக மராட்டியத்தை படிப்படியாக முன்னேற்றி கட்டி எழுப்பியது காங்கிரஸ்தான் என்று மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
மராட்டிய சட்டமன்றத் தேர்தலையொட்டி காங்கிரஸ் மூத்த தலைவரும், மேனாள் ஒன்றிய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் 16.11.2024 அன்று மும்பையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மராட்டியம் நாட்டின் தொழில் மற்றும் சேவை துறையில் முன்னணி மாநிலமாக உள்ளது. வேளாண்மையிலும் சிறந்து விளங்குகிறது.தற்போது மராட்டியம் தான் நாட்டின் வணிகதலைநகரமாக உள்ளது. ஆனால் இன்னும் எவ்வளவு காலம் மராட்டியம் நாட்டின் வணிக தலைநகராக இருக்கும் என்பது தெரியவில்லை.
பா.ஜனதா ஆட்சியில் மராட்டிய மாநிலத்தின் பொருளாதாரம் பின்னோக்கி செல்வதை காணமுடிகிறது. நாட்டின் முதன்மையான மாநிலமாக மராட்டியத்தை படிப்படியாக முன்னேற்றி கட்டி எழுப்பியது காங்கிரஸ் கட்சிதான்.
2022-2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023-2024இல் மராட் டியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.4இல் இருந்து 7.6 ஆக குறைந்து உள்ளது. அதேபோல பற்றாக்குறை ரூ.67 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் கோடியாக அதிகரித்து உள்ளது. மாநிலத்தின் வேளாண்மை வளர்ச்சி 4.5 சதவீதத்தில் இருந்து 1.9 சதவீதமாக குறைந்துள்ளது. சேவை துறையின் வளர்ச்சியும் 13இல் இருந்து 8.3 ஆக சரிந்து இருக்கிறது. மாநிலத்தின் மூலதன செலவினம் ரூ.85 ஆயிரம் கோடியாக உள்ளது. இந்த சரிவு நிறுத்தப்பட வேண்டும். ஆனால் இந்த சரிவை ஏற்படுத்தியவர்களால் அதை நிறுத்த முடியாது.
மராட்டியத்தில் வேலையில்லா திண்டாட்டம் 10.8 சதவீதமாக உள்ளது. மாத ஊதியம் பெறுவோர் எண்ணிக்கை 40 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக குறைந்துள்ளது.
– இவ்வாறு அவர் கூறினார்.
ஊக்கத் தொகை நிலுவை ரூ.70 கோடி பால் உற்பத்தியாளர்களுக்கு அளிப்பு
சென்னை, நவ. 19- பால் உற்பத்தியாளா்களுக்கு நிலுவையில் உள்ள ஊக்கத் தொகையை வழங்குவதற்காக ரூ.140.98 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியிருந்த நிலையில், முதல்கட்டமாக 27 ஒன்றியங்களுக்கு மொத்தம் ரூ.70 கோடி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனத்துக்கு பால் விநியோகம் செய்யும் தொடக்க பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த ஆண்டு டிசம்பா் முதல் லிட்டருக்கு ரூ.3 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஊக்கத் தொகை கடந்த ஜூலை முதல் அக்டோபா் வரை வழங்கப்படாமல், நிலுவையில் உள்ளதாக பால் உற்பத்தியாளா்கள் தொடா்ந்து புகார் தெரிவித்து வந்தனா்.
நிலுவையில் உள்ள ஊக்கத் தொகைகளை ஒரே நேரத்தில் வழங்குவதற்காக ரூ.140.98 கோடியை ஒதுக்கி முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி, நிலுவைத்தொகை ஆவின் இணையம் மூலம் ஒன்றியங்களுக்கு அனுப்பப்பட்டு, கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதில், முதல்கட்டமாக சேலத்துக்கு ரூ.11.51 கோடி, திருச்சிக்கு 10.40 கோடி, திருவண்ணாமலைக்கு ரூ.5.87 கோடி, காஞ்சிபுரம், திருவள்ளூருக்கு ரூ.2.58 கோடி என 27 ஒன்றியங்களுக்கு மொத்தம் ரூ.70 கோடி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.