காரைக்குடி, நவ. 18- ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா கொண்டு வந்தால் நாங்கள் தோற்கடிப்போம் என்று மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
காரைக்குடி அருகே உள்ள புதுவயலில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:
தி.மு.க. கூட்டணி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வலிமையாக உறுதியாக உள்ளது. அதனை யாரும் உடைக்கவும், கலைக்கவும் முடியாது. வருகிற சட்டமன்றத் தேர்தலிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றிபெறும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.
ஒரே நாடு, ஒரே தேர்தல்
ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்றால் அரசியல் சாசனத்தை திருத்த வேண்டும். அரசியல் சாசனத்தை திருத்த வேண்டுமானால் நாடாளுமன்றம், மாநிலங்களவையில் 3இல் 2 பங்கு பெரும்பான்மை வேண்டும். பா. ஜனதா கட்சிக்கு மக்களவையிலும் மாநிலங் களவையிலும் அந்த பெரும் பான்மை இல்லை.அதற்கான மசோதா கொண்டுவரப்பட்டால் நிச்சயம் நாங்கள் அதனை தோற்கடிப்போம்.
காஷ்மீரில் மாநில தகுதி வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றினர். காஷ்மீரை மாநில தகுதியிலிருந்து யூனியன் பிரதேசமாக குறைத்தபோது தொடரப்பட்ட வழக்கில் பா.ஜனதா அரசு, தேர்தல் நடந்தபின் மாநில தகுதி தருவோம் என்று நீதிமன்றத்தில் உறுதி அளித்திருந்தது. தற்போது அதனை தர மறுக்கிறது. காஷ்மீரில் மாநில தகுதி கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதில் எந்த தவறும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.