புதுடில்லி, நவ.17 பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசு 2026 ஆம் ஆண்டிற்குள் மக்கள் தொகை கணக்கெடுப்பை முடிக்கத் தயாராகி வரும் நிலையில், விரைவில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் தொகுதி மறு வரையறை நிர்ணயத்திற்குப் பிறகு, தென் மாநிலங்கள் பொதுவான அரசியல் பலமாக வெளிப்படும். அவற்றில் நான்கு மாநிலங்களில் பா.ஜ.க அல்லாத கட்சிகளால் ஆளப்படுகின்றன. தென் மாநிலங்களில், தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களில், 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
இடங்கள் குறையும்!
மக்கள் தொகையை மட்டுமே அடிப்ப டையாகக் கொண்ட எல்லை நிர்ணயம் அனைத்து தென் மாநிலங்களிலும் நாடாளு மன்ற இடங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும். அதே வேளையில், பா.ஜ.க அல்லாத கருநாடகா, கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள், ஒன்றிய அரசின் ‘‘நியாயமற்ற வரிவிதிப்பு’’ நடைமுறைகளைக் குறிப்பிடுவதில் இப்போது ஒன்றுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த பல ஆண்டுகளாக வரி விதிப்பால் தனது மாநிலம் மோசமாக மிகக் குறைந்த பங்கு பெற்று வருவதாக இந்த மாதம் மீண்டும் குறிப்பிட்டு வலியுறுத்தியுள்ளார். ஒன்றிய அரசுக்கு மாநிலம் செலுத்தும் ஒவ்வொரு 1 ரூபாய்க்கும், தமிழ்நாட்டிற்கு வெறும் 29 பைசா மட்டுமே திரும்பக் கிடைக்கிறது என்று கூறினார்.
ஒன்றிய அரசின் ‘‘நியாயமற்ற’’ வரிவிதிப்பு நடைமுறைகள் குறித்து பெங்களூருவில் மாநாட்டைக் கூட்டுமாறு கருநாடக முதலமைச்சர் சித்தராமையா விடுத்த அழைப்பை தி.மு.க செப்டம்பர் மாதம் ஆதரித்தது. சித்தராமையாவின் கருத்துப்படி, கருநாடகா உள்ளிட்ட தென் மாநிலங்கள் தனிநபர் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியை (ஜி.எஸ்.டி.பி) அதிகமாக வைத்திருப்பதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளன. கருநாடகா ஒன்றிய அரசுக்கு வரியாகக் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் 14 முதல் 15 பைசா மட்டுமே பெறுகிறது என்று காங்கிரஸ் தலைவர் சுட்டிக்காட்டினார்.
கேரள அரசின் குற்றச்சாட்டு
டாக்டர் அரவிந்த் பனகாரியா தலை மையிலான 16 ஆவது நிதிக்குழுவுடன் ஆலோசனை நடத்தியதை அடுத்து, ‘‘நியாய மான வரிவிதிப்பு நடைமுறைகள்’’ பற்றி விவாதிக்க, செப்டம்பர் 12 ஆம் தேதி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பா.ஜ.க. அல்லாத ஆளும் மாநிலங்களின் நிதி அமைச்சர்களின் கூட்டத்தை நடத்தினார். 15 ஆவது நிதிக் குழுவில், மாநிலத்திடம் இருந்து வசூலிக்கப்படும் ஒவ்வொரு 1 ரூபாய்க்கும் 35 பைசா மட்டுமே ஒன்றிய அரசு செலுத்தியதாக கேரளா கூறியுள்ளது. இதற்கு மாறாக, உத்தரப் பிரதேசம் ஒன்றிய அரசுக்கு செலுத்தும் ஒவ்வொரு 1 ரூபாய்க்கும் 1.6 ரூபாய் திரும்பப் பெறுகிறது என்று தென் மாநிலங்கள் வாதிட்டன.
சிக்கலான பொருளாதாரம் இருந்த போதிலும், இந்த மாநிலங்களுக்கு வரிவிதிப்பை ஒரு வசதியான திட்டமாக மாற்றுவது என்ன என்பதை விளக்கி, கருநாடகாவில் உள்ள காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், “பொதுவாக, வரிவிதிப்பின் கொடுமையை மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். ஆனால், வடமாநிலங்களை விட பொருளாதார ரீதியாக நாங்கள் சிறப்பாக செயல்படுவதால், ஒன்றிய அரசு எங்களுக்கு (தென் மாநிலங்களுக்கு) பணம் கொடுக்கவில்லை என்பதை மக்கள் புரிந்துகொள்வது எளிது.” என்று கூறினார்.
இது குறித்து திமுக தலைவர்கள் கருத்து கூறியதாவது “தென்பகுதியில் உள்ள அனைத்து மாநிலங்களும் ஒன்றிய அரசின் மீது கோபப்படுவதற்கு பொதுவான கருத்து என்றால் அது வரி விதிப்புதான். அடுத்த டுத்த நிதி ஆயோக்களால் தமிழ்நாடு பலன் அடையவில்லை என்பதை எளிய வார்த்தை களில் எங்களால் தெரிவிக்க முடிந்தது’’ என்றனர்.
‘‘28 பைசா பிரதமர்!’’
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை சமூக வலைதளங்களில் “28 பைசா பிரதமர்” எனக் குறிக்குமாறு மக்களைக் கேட்டு ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கினார், இது ஒன்றிய அரசிடமிருந்து 1 ரூபாய்க்கு மாநிலம் பெறும் வரிகளின் சதவீதத்தைக் குறிக்கிறது. மக்களவைத் தேர்தலுக்கு முன் நடந்த பிரச்சாரம் பெரும் வெற்றி பெற்றதாக, தி.மு.க., தலைவர் ஒருவர் தெரிவித்தார். பிப்ரவரியில், கருநாடகா மற்றும் கேரள அரசுகள் இரண்டும் ஒன்றிய அரசின் ‘‘நிதி அட்டூழியங்களுக்கு’’ எதி ராக டில்லியில் போராட்டங்களை நடத்தின.